PIB Backgrounder
azadi ka amrit mahotsav

கார்கில் வெற்றி தினம் 2026: வீரம், தியாகம், தேசபக்தி உணர்வுக்கு மரியாதை செலுத்துதல்

प्रविष्टि तिथि: 24 JUL 2026 3:50PM by PIB Chennai

1999-ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் தாய்நாட்டின் எல்லைகளைப் பாதுகாத்து வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுத் தந்த 'ஆபரேஷன் விஜய்' ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்ட வீரர்களைக் கெளரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 26 அன்று கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நாடு முழுவதும் 27-வது கார்கில் வெற்றி தினம் மரியாதையுடனும் நன்றியுடனும் நினைவுகூரப்படுகிறது. லடாக் பகுதியின் பனிசூழ்ந்த மலைச் சிகரங்களில் இந்திய மூவண்ணக் கொடி மீண்டும் கம்பீரமாகப் பறக்கவிடப்பட்டு, நாட்டின் இறையாண்மை நிலைநாட்டப்பட்ட இந்த பொன்னான நாள், இந்திய ராணுவத்தின் நிகரற்ற வீரம், தியாகத்தின் சான்றாகத் திகழ்கிறது.

1999 மே மாதத்தில் பாகிஸ்தான் படைகள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து, ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலையைக் கண்காணிக்கும் முக்கியக் கார்கில் மலைச் சிகரங்களை ஆக்கிரமித்தன. இதற்குப் பதிலடியாக இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் விஜய்’ என்ற பெயரில் தீவிரத் தாக்குதலைத் தொடங்கியது. இந்தியக் கடற்படை, விமானப் படையின் ஆபரேஷன் சஃபேத் சாகர் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளுடன் சுமார் மூன்று மாதங்கள் நடைபெற்ற இந்த கடும் போரில், டோலோலிங், டைகர் ஹில், பாயிண்ட் 4875 உள்ளிட்ட அனைத்து ஆக்கிரமிக்கப்பட்ட சிகரங்களும் மீண்டும் கைப்பற்றப்பட்டன. எல்லையைக் கடக்காமல் கட்டுப்பாடு, தொழில்முறைத் திறன், துணிச்சலான உத்திகள் மூலம் இந்தியா அடைந்த இந்த வெற்றி உலகளவில் பெரும் பாராட்டைப் பெற்றது.

கார்கில் போரில் கிடைத்த அனுபவங்கள் நாட்டின் பாதுகாப்புத் துறையில் மிகப்பெரிய சீர்திருத்தங்களுக்கு வழிவகுத்தன. முப்படைகளின் ஒருங்கிணைப்பை மேம்படுத்த ராணுவ விவகாரங்கள் துறை, பாதுகாப்புப் படைத் தளபதி பதவி ஆகியவை உருவாக்கப்பட்டன. பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு 2013-14 நிதியாண்டில் 2.53 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 2026-27 நிதியாண்டில் 7.85 லட்சம் கோடி ரூபாயாகப் உயர்த்தப்பட்டுள்ளது. தற்சார்பு இந்தியா கொள்கையின் கீழ் உள்நாட்டு ராணுவ உற்பத்தி 2025-26 நிதியாண்டில் 1.78 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளதோடு, பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி 38,424 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. தேஜஸ் போர் விமானங்கள், ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கிப் போர்க் கப்பல், பிரம்மோஸ் ஏவுகணைகள், அக்னிபத் திட்டம் ஆகியவை நாட்டின் தற்காப்புத் திறனைப் பலப்படுத்தியுள்ளன.

கார்கில் வெற்றியின் நினைவாக புதுதில்லி தேசிய போர் நினைவிடத்திலிருந்து டிராஸ் வரை 1,900 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் சௌர்ய வெற்றி பயணம் என்ற  13-நாள் மோட்டார் சைக்கிள் பேரணியைப் இம்மாதம் 14-ம் தேதி பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். மேலும், அடல் சுரங்கப்பாதையில் புதிய உலக சாதனை படைத்த சஞ்சார் சக்திப் பேரணி, டைகர் ஹில் சிகரப் பயணம், ஹான்லே பகுதியில் ஆயுதக் கண்காட்சிகள் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் தியாகிகளின் வீரம் நினைவுகூரப்படுகிறது. இத்தகைய விரிவான நடவடிக்கைகள் நாட்டின் பாதுகாப்பு உட்கட்டமைப்பை வலுப்படுத்தி, தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதில் மிக முக்கியப் பங்காற்றி வருகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288840&reg=3&lang=1

 

***

TV/PD/KR


(रिलीज़ आईडी: 2289861) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Bengali , Gujarati