பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குஜராத் மாநிலம் சனந்தில் சி.ஜி. செமி ஓசாட் மையத் திறப்பு விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

प्रविष्टि तिथि: 04 JUL 2026 9:01PM by PIB Chennai

“அனைவரும் எப்படி இருக்கிறீர்கள்? நலமாக இருக்கிறீர்களா? குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பாய் படேல் அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது சக அமைச்சரான அஷ்வினி வைஷ்ணவ் அவர்களே, துணை முதலமைச்சர் ஹர்ஷ் சங்வி அவர்களே, குஜராத் மாநில அமைச்சர்களே, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களே, சி.ஜி. பவர் தலைவர் வெள்ளையன் சுப்பையா அவர்களே, ரெனசாஸ் எலக்ட்ரானிக்ஸ் தலைவர் மாலினி அவர்களே, சி.ஜி. செமி தலைவர் கிரீஷ் அவர்களே, இங்கு வருகை தந்துள்ள மற்ற தொழில்துறைத் தலைவர்களே, தாய்மார்களே மற்றும் பெரியோர்களே!

இந்தியா எதைச் செய்யத் தீர்மானிக்கிறதோ, அதை அது சாதித்துக்காட்டும் என்பதற்கு இன்றைய நிகழ்ச்சியே சான்றாகும். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, நாட்டை ஒரு செமி கண்டக்டர் மையமாக மாற்ற வேண்டும் என்று இந்தியா உறுதியேற்றது. ‘இந்தியாவில் வடிவமைப்போம், ‘இந்தியாவில் தயாரிப்போம் என்ற மந்திரத்துடன் நாம் முன்னேறிச் சென்றோம். இன்று, நாட்டின் மூன்றாவது செமி கண்டக்டர் தொழிற்சாலையில் சிப் பேக்கேஜிங் வணிக ரீதியான உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது."

"நண்பர்களே,

கடந்த 2024ம் ஆண்டு, இந்தத் தொழிற்சாலைக்கான அடிக்கல்லை நாட்டுவதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள், இங்கே சிப் பரிசோதனைப் பணிகள் தொடங்கிவிட்டன; இன்று இந்தத் தொழிற்சாலை முறைப்படி திறந்து வைக்கப்பட்டுள்ளது. அடிக்கல் நாட்டியதில் தொடங்கி, உற்பத்தி தொடங்கும் இந்த பயணம் வரை, பலரது கடின உழைப்பும், சுப்பையா போன்றவர்களின் தலைமைத்துவமுமே மிக முக்கியக் காரணம்.

மேடைக்கு வருவதற்கு முன்பாக, இந்தத் திட்டத்தோடு தொடர்புடைய பலரைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்த வளாகத்திற்குள் ஒரு 'குட்டி இந்தியா' வசிப்பது போன்ற உணர்வை அது எனக்குத் தந்தது; பல்வேறு மொழியைப் பேசும் மக்கள், பல்வேறு வகையான ஆடை மற்றும் உணவுப் பழக்கங்களைக் கொண்டவர்கள் என அனைவரும் இங்கே உள்ளனர். கண்காட்சியைப் பார்வையிட்டபோது, அங்கு பணியாற்றும் பல இளைஞர்களிடமும், இளம் பெண்களிடமும் பேசினேன். நான் பெருமையுடன் சொல்ல வேண்டிய ஒரு விஷயம், அவர்களது தன்னம்பிக்கைதான். அவர்கள் பேசிய விதம், தொழில்நுட்பத்தின் மீது அவர்கள் கொண்டிருந்த ஆழ்ந்த நம்பிக்கை இவை என்னை பெரிதும் கவர்ந்தன.

"இந்த சி.ஜி. செமிகண்டக்டர் தொழிற்சாலை, இந்தியா, ஜப்பான் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த நமது தொழில் முனைவோரின் கூட்டு முயற்சியின் அடையாளமாகும். இது வெறும் ஒரு வணிக முயற்சி மட்டுமல்ல; இது தொழில்நுட்பம், நம்பிக்கை மற்றும் கூட்டணியின் ஒரு சிறந்த மாதிரியாகும். இது இந்தியாவின் செமி கண்டக்டர் பயணத்தை வேகப்படுத்தும்.

வெறும் இரண்டே ஆண்டுகளில், நீங்கள் இந்தத் தொழிற்சாலையைத் தரையிலிருந்து தொடங்கி இந்த நிலைக்குக் கொண்டு வந்துள்ளீர்கள். இன்று நாம் இதன் வணிக ரீதியான உற்பத்தியைத் தொடங்குகிறோம். ஆண்டுக்கு 20 கோடி சிப்கள் இங்கே தயாரிக்கப்படும் என்று என்னிடம் கூறப்பட்டது. 20 லட்சம் அல்ல, 20 கோடி! மேலும், நீங்கள் இதோடு நின்றுவிடப் போவதில்லை என்றும் எனக்குத் தெரியும். ஆண்டுக்கு 500 கோடி சிப்கள் அதாவது தினமும் 1.5 கோடிக்கும் அதிகமான சிப்களைத் தயாரிக்கும் இலக்கை நீங்கள் நிர்ணயித்துள்ளீர்கள். நீங்கள் இந்த இலக்கை விரைவில் அடைவீர்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

 

'செமிகான் இந்தியா' திட்டம் ஒவ்வொரு படியாக, செங்கல் செங்கலாக, இப்போது சிப் சிப்பாக வளர்ந்து வருகிறது என்பதற்கு இதுவே சான்று. சி.ஜி. செமி குழுவினர் அனைவருக்கும், மாநில அரசுக்கும், ஒட்டுமொத்த தேசத்திற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,"

"இன்று எனக்குள் ஒரு தனிப்பட்ட மகிழ்ச்சி மேலோங்கியிருக்கிறது. ஏன் என்று நீங்கள் நினைக்கலாம். இருபது ஆண்டுகளுக்கு முன்பே - சொல்லப்போனால் இன்னும் முன்னதாகவே - குஜராத்தில் ஒரு செமிகண்டக்டர் தொழிற்சாலையை அமைப்பதற்கான திட்டங்களை நான் தயார் செய்திருந்தேன். காந்திநகர் மற்றும் பிராந்திஜ் அருகே இதற்காக 350 முதல் 400 ஏக்கர் நிலத்தை நாங்கள் ஒதுக்கியிருந்தோம். சில நிறுவனங்களுடன் இது குறித்து பேச்சுவார்த்தைகளும் நடத்தினோம்.

அக்காலத்தில், இந்திய அரசு பெரிய வாக்குறுதிகளை அளித்து வந்தது. சில நிறுவனங்களும் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தன. ஆனால், அப்போதிருந்த அரசாங்கம் ஏதோ ஒரு தளைக்குள் சிக்கியிருந்தது போலத் தெரிந்தது; அந்த முயற்சி அப்படியே நின்றுவிட்டது. இன்று, இவை அனைத்தும் நிஜமாகி வருவதைப் பார்க்கும்போது, எனக்குள் அளவற்ற மகிழ்ச்சியை உணர்கிறேன். 20 முதல் 22 ஆண்டுகளுக்கு முன்பு நான் கண்ட கனவு இன்று நிறைவேறியிருக்கிறது.

அக்காலத்தில், நம் நாட்டில் இந்த விஷயங்களைப் பற்றி எவரும் விவாதித்தது கூட இல்லை. நான் இதைப் பற்றிப் பேசியபோது, ஊடகங்கள் என்னைக் கேலி செய்தன. அன்றைக்கு அது நடக்கவில்லை; ஆனால் இன்று, அது நடந்தேறும்போது எனக்கு மிகுந்த மனநிறைவு கிடைக்கிறது.

சில வாரங்களுக்கு முன்பு, ஒரு செய்தி என்னையே ஆச்சரியப்படுத்தியது. ஆனால், அந்தச் செய்திக்குக் கிடைக்க வேண்டிய கவனத்தை ஊடகங்கள் அளிக்கவில்லை என்பது எனக்கு வியப்பாக இருந்தது. வதோதராவில் தயாரிக்கப்பட்ட சி-295 ரக விமானம், இந்தியாவிலேயே கட்டமைக்கப்பட்டு வெற்றிகரமாக விண்ணில் பறந்தது. ஒரு காலத்தில், ஒரு மிதிவண்டி தொழிற்சாலை வந்தாலே இனிப்புகள் வழங்கி கொண்டாடிய காலம் இருந்தது. இன்று இந்தியா விமானங்களையே தயாரித்துக் கொண்டிருக்கிறது.

நண்பர்களே,

"இங்கே கூடியிருப்பவர்கள் அனைவரும் சிறந்த அறிவுடையவர்கள். இளைஞர்களாகிய என் சக ஊழியர்கள் பலரையும் நான் இங்கே பார்க்கிறேன். உலகின் தொழில் வரலாற்றை நாம் உற்று நோக்கினால், ஒன்று தெளிவாகத் தெரிகிறது: எந்த ஒரு உலகளாவிய தொழில் வல்லரசும் ஒரே ஒரு தொழிற்சாலையால் உருவானதல்ல. தொழில் வல்லரசின் அடித்தளம் 'கிளஸ்டர்கள்' (தொழில் தொகுப்புகள்) என்பதில் தான் அடங்கியிருக்கிறது. அமெரிக்காவின் சிலிக்கான் வேலி, தைவானின் ஹின்சு சயின்ஸ் பார்க், ஜப்பானின் சிலிக்கான் தீவு மற்றும் சுகுபா சயின்ஸ் சிட்டி ஆகிய அனைத்தும் இந்த தொழில் தொகுப்புகளின் முக்கியத்துவத்தையே காட்டுகின்றன. இன்று சனந்தும் அதே திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

நண்பர்களே,

சில மாதங்களுக்குள்ளாகவே மைக்ரான், கெய்ன்ஸ் மற்றும் சி.ஜி. செமி ஆகியவை இங்கே உற்பத்தியைத் தொடங்கிவிட்டன. இந்தியாவில் ஒரு செமிகண்டக்டர் தொழில் தொகுப்பு உருவாகி வருகிறது. இன்று இங்கே சிப் பேக்கேஜிங் நடக்கிறது. நாளை, இதற்கான பிரத்யேக நிறுவனங்கள் வரும், வேதிப்பொருட்கள் தயாரிக்கப்படும், புதிய சோதனைக்கூடங்கள் கட்டப்படும், இயந்திரங்களைப் பராமரிக்கும் சேவைகள் உருவாகும், வடிவமைப்பு மையங்கள் திறக்கப்படும், புத்தொழில் நிறுவனங்கள் பிறக்கும். இதுதான் தொழில் தொகுப்புகளின் வலிமை. ஒரு தொழில் நூறு தொழில்களை உருவாக்குகிறது. அந்த நூறு தொழில்கள் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன. லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் ஒரு முழு பிராந்தியத்தின் பொருளாதாரத்தையே மாற்றியமைக்கின்றன. இது சனந்தில் மட்டும் நடக்கவில்லை - இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் செமிகண்டக்டர் தொழில் தொகுப்புகள் உருவாகி வருகின்றன.

நண்பர்களே,"

"இன்று, இந்தியாவில் செமிகண்டக்டர் துறையின் எழுச்சி அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது நாடு முழுவதும், உலகம் முழுதும் விவாதிக்கப்படுகிறது. பலர் இதைத் தனிப்பட்ட நிகழ்வாகப் பார்க்கிறார்கள், ஆனால் அது அப்படிப்பட்டதல்ல. இந்தியாவில் செமிகண்டக்டர் துறையின் விரிவாக்கம் என்பது திடீரென உருவான ஒன்றல்ல; கடந்த பத்தாண்டுகளில் நம் நாட்டில் நிகழ்ந்த மின்னணுப் புரட்சியின் அடுத்த கட்டம்தான் இது.

நண்பர்களே,

நாம் கைப்பேசி உற்பத்தியிலிருந்துதான் தொடங்கினோம். ஒரு காலம் இருந்தது, அப்போது இந்தியா தனது உள்நாட்டுத் தேவையை விட அதிகமாகவே ஸ்மார்ட்போன்களை இறக்குமதி செய்து கொண்டிருந்தது. இன்று, இந்தியாவில் கைப்பேசி உற்பத்தி முந்தைய காலத்தை விட 33 மடங்கு அதிகரித்துள்ளது. 2014-க்கு முன்பு இந்தியா போன்களை இறக்குமதி செய்து கொண்டிருந்தது. நீங்கள் என்னை குஜராத்திலிருந்து தில்லிக்கு அனுப்பிய பிறகு, இந்தியா அவற்றை ஏற்றுமதி செய்யத் தொடங்கியது. இன்று, உலகம் முழுவதும் அதிக அளவில் கைப்பேசி தயாரிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்திலும், கைப்பேசி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

நண்பர்களே,

சமீபத்திய ஆண்டுகளில், நாம் மின்னணு உற்பத்திச் சூழலை முழுமையாக வலுப்படுத்தியுள்ளோம். 2014ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் ஒட்டுமொத்த மின்னணு உற்பத்தி சுமார் ஏழு மடங்கு அதிகரித்துள்ளது. மின்னணுப் பொருட்களின் ஏற்றுமதி சுமார் பதினொரு மடங்கு வளர்ந்துள்ளது."

"நண்பர்களே,

நமது முயற்சி முழுமையடைந்த பொருட்கள் உற்பத்தியில் தற்சார்பு அடைவதோடு மட்டும் நின்றுவிடவில்லை. உதிரிபாகங்கள் தயாரிப்பிலும் நாம் தற்சார்பை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். அதனால்தான் இந்தியாவின் அடுத்த கட்டம் மிகத் தெளிவாக இருக்கிறது. நாம் கைப்பேசிகளையும், மின்னணுப் பொருட்களையும் மட்டும் தயாரிக்கப் போவதில்லை; ஒட்டுமொத்த மின்னணு உலகையும் இயக்கும் சிப்களையும் நாமே தயாரிக்கப் போகிறோம். இதுதான் நமது வியூகம் – முதலில் தயாரிப்புகள், பிறகு உதிரிபாகங்கள், இப்போது செமிகண்டக்டர்கள். மின்னணுப் பொருட்களுக்கான ஒட்டுமொத்த மதிப்புச் சங்கிலியும் இந்தியாவிலேயே இருக்கும். இதுதான் வளர்ந்த இந்தியாவை நோக்கிய பயணப் பாதை; இதுதான் இந்தியாவுக்கான உற்பத்தி இயக்கத்தின் அடுத்த கட்டம்.

நண்பர்களே,

செமிகண்டக்டர் சூழலியலில் அடுத்த கட்டம் என்பது, மிக முக்கியமான கனிமங்கள் மற்றும் உயர் தொழில்நுட்பப் பொருட்களில் தற்சார்பு பெறுவதுதான். சற்று முன், சுப்பையா அவர்கள் குஜராத்தியில் ஒரு பழமொழியைச் சொன்னார்: 'இலக்கை அடையத் தவறுவது மன்னிக்கத்தக்கது, ஆனால் சிறிய இலக்கை வைப்பது மன்னிக்க முடியாதது.' அதுதான் எனது இயல்பும் கூட – நான் சிறிய இலக்குகளை நிர்ணயிப்பதில்லை, நான் சிறியதாகச் சிந்திப்பதில்லை. ஒரு சிலையை உருவாக்கினால், அதை உலகின் மிகப்பெரிய சிலையாகவே அமைப்பேன். சுப்பையா சொன்னது போல, பேச்சை விடச் செயலே சத்தமாகப் பேசும். இன்று நாம் காணும் முன்னேற்றமும், நாம் கொண்டாடும் சாதனைகளும், விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துவதன் மூலமே மேலும் அர்த்தமுள்ளதாகும். அதுவும் நமது இலக்குதான். இன்று, இந்தத் திசையில் இந்தியா பரந்த அளவில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சிப் வடிவமைப்பு முதல், உற்பத்தி மற்றும் பேக்கேஜிங் வரை ஒட்டுமொத்த சூழலியலையும் இந்தியாவிலேயே உருவாக்குவதே நமது நோக்கம். இந்தியா சிப்களை உருவாக்குவது மட்டுமல்ல, செயற்கை நுண்ணறிவு (ஏஐ), ரோபோட்டிக்ஸ் மற்றும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களில் இந்திய இளைஞர்கள் புரட்சியை ஏற்படுத்துவார்கள். அந்தத் தொழில்நுட்பங்களுக்கு 'இந்தியாவில் தயாரிக்கப்பட்ட' சிப்கள் தான் சக்தியாக இருக்கும். இந்தியாவின் இளைஞர்கள் மீதும், அவர்களின் திறமை மற்றும் வலிமை மீதும் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. என் நாட்டின் இளைஞர்களின் ஆற்றல் மீது நான் முழு நம்பிக்கை வைத்துள்ளேன்.

நண்பர்களே,"

"இந்த தருணத்தில், நமது நாட்டு இளைஞர்களிடம் நான் சில விஷயங்களை நேரடியாகப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். உலகிற்கு ஒரு புதிய தொழில் புரட்சி வரும்போதெல்லாம், இளைஞர்களுக்குத்தான் மிகப்பெரிய வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. தகவல் தொழில்நுட்பப் (ஐடி) புரட்சி வந்தபோது, லட்சக்கணக்கான இந்திய இளைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு ஸ்மார்ட்போன்கள் மற்றும் மின்னணு உற்பத்தி காலம் வந்தது; அதுவும் லட்சக்கணக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கியது. இப்போது இந்த செமிகண்டக்டர் புரட்சியும், செயற்கை நுண்ணறிவு புரட்சியும் எண்ணற்ற வாய்ப்புகளைக் கொண்டு வருகின்றன. ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு முதல் புத்தொழில் கண்டுபிடிப்புகள் மற்றும் விநியோகச் சங்கிலி மேலாண்மை வரை, வாய்ப்புகள் எங்கும் நிறைந்திருக்கின்றன.

நண்பர்களே,

இங்கே தேவைப்படுவது புதிய திறமைகளும், புதிய சிந்தனைகளும்தான். உங்களிடம் ஒரு புதிய யோசனை இருக்கிறதா, எதையாவது புதிதாகக் கற்றுக்கொள்ளவும் செய்யவும் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா என்பதுதான் முக்கியம். இன்று நான் ஜார்க்கண்ட், பாலக்காடு, மத்தியப் பிரதேசம், கேரளா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மகள்களைச் சந்தித்தேன். எங்களது உரையாடல் 'ஜெய் ஜோஹர்' என்றுதான் தொடங்கியது. நான் அந்தப் பகுதியில் வாழ்ந்தவன் என்பதால், அதை நன்கு அறிவேன். இந்த மகள்கள் கற்றுக்கொண்ட வேகமும், அவர்கள் அங்கு செயல்பட்ட விதமும், என் நாட்டின் இளைஞர் சக்தியின் மீது எனக்குப் பெருமிதத்தை ஏற்படுத்துகிறது.

நண்பர்களே,"

வரும் காலங்களில், செயற்கை நுண்ணறிவு  உங்களுக்காக புதிய திறமைகள் மற்றும் புதிய நிபுணத்துவம் நிறைந்த ஒரு முழு உலகத்தையே திறந்து விடப்போகிறது. அதனால்தான், இந்திய இளைஞர்கள் இந்த வாய்ப்பைத் தவறவிட்டுவிடக் கூடாது. நான் இளைஞர்களிடம் சொல்வது இதுதான் – யோசனை உங்களுடையதாக இருக்கட்டும், அதற்கான ஆதரவு என்னுடையதாக இருக்கும்.

நண்பர்களே,"

"இந்த மையம் மற்றும் இந்தத் திட்டம், இந்தியாவின் இளைஞர்கள் எப்படிப் புதிய வாய்ப்புகளுடன் இணைந்து வருகிறார்கள் என்பதற்கு ஒரு சான்றாகும். இங்கே பணிபுரியும் சகோதரிகள் மற்றும் மகள்கள் - ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் எனப் பழங்குடியினப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.  எனக்கு இந்தத் தொழிற்சாலையைச் சுற்றிக் காட்டினர். மிகுந்த உற்சாகத்துடன் ஒவ்வொரு நுணுக்கத்தையும் அவர்கள் விளக்கினர். சாதாரண குடும்பங்கள், சாதாரண பள்ளிகள், ஐடிஐ கல்வி. நம் நாட்டில் ஒரு மாணவர் ஐடிஐ-யில் சேர்ந்தால், பெற்றோர்கள் அதை வெளியில் சொல்லவே கூச்சப்படுவார்கள், சங்கடப்படுவார்கள். ஆனால் காலம் மாறிவிட்டது – இது ஐடிஐ பட்டதாரிகளின் காலம். அவர்களின் கல்வி ஐடிஐ-யாக இருக்கலாம், ஆனால் அவர்களின் கனவுகள் அசாத்தியமானவை. இவர்களில் பலரது குடும்பத்தினர் இதற்கு முன் பாஸ்போர்ட் கூட எடுத்ததில்லை, பார்த்தது கூட இல்லை. சிலர் தில்லி அல்லது மும்பைக்கே சென்றதில்லை, பிறகு வெளிநாடு செல்வதைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. அப்படிப்பட்ட மகள்கள் மலேசியா சென்று பயிற்சி பெற்று, உலகின் அதிநவீன செமிகண்டக்டர் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டு, இன்று 'மேக் இன் இந்தியா' சிப் தயாரிப்புச் செயல்பாட்டில் ஒரு அங்கமாக உள்ளனர். தில்லியில் ஒருமுறை சுப்பையா அவர்கள் இந்த மகள்களின் வாழ்க்கை குறித்த மூன்று நிமிட காணொளியைக் காட்டியது எனக்கு நினைவிருக்கிறது. காட்டிற்குள் வாழ்ந்த அவர்கள், கட்டிலில் அமர்ந்து படித்தது முதல், விமான நிலையத்தில் செக்-இன் செய்து, குடியமர்வு சோதனைகளை முடித்து மலேசியா பறந்தது வரை அந்த வீடியோவில் இருந்தது. நான் குஜராத் வரும்போது இந்த மகள்களை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து அவர்களுடன் பேச வேண்டும் என்று சுப்பையாவிடம் அப்போதே கூறினேன். அப்போது என்னால் அதைச் செய்ய முடியவில்லை, ஆனால் இன்று எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. நன்றி சுப்பையா அவர்களே. இந்த மகள்கள் அனைவருக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,"

"இன்றைய இந்த நிகழ்வு, இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு நாம் எவ்வளவு தீவிரமாகவும், ஆர்வமாகவும் இருக்கிறோம் என்பதற்கு ஒரு சான்றாகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில், 2026ம் ஆண்டுக்குள் நான்கு செமிகண்டக்டர் ஆலைகள் செயல்படத் தொடங்கும் என்று நான் கூறியிருந்தேன். இன்று எனது அமைச்சர், 'நான்கு அல்ல, ஐந்து' என்று கூறியுள்ளார். வெறும் ஆறு மாதங்களுக்குள்ளேயே, மூன்று திட்டங்களில் உற்பத்தி தொடங்கியிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இன்று இந்தியா பெரிய இலக்குகளை நிர்ணயிப்பது மட்டுமல்லாமல், அவற்றைச் சரியான நேரத்தில் அடைந்து காட்டுகிறது என்பதை இது பிரதிபலிக்கிறது. இந்தியா ஒட்டுமொத்த உலகத்திற்கும், ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் வழங்கும் நம்பிக்கை இதுதான். நமது கொள்கைகள் நிலையானவை, நமது முடிவுகள் தெளிவானவை, நமது செயல்பாடு மிக வேகமானது. சி.ஜி. செமி நிர்வாகத்திற்கும் மற்றும் பிற முதலீட்டாளர்களுக்கும் நான் உறுதியளிக்கிறேன் – இந்தியா தேர்ந்தெடுத்துள்ள சீர்திருத்தப் பாதை, நாம் ஏறியுள்ள இந்த 'சீர்திருத்த விரைவு ரயில்' இன்னும் வேகமெடுக்கும். இன்று இந்தியா 'தொழில் தொடங்குவதை எளிதாக்கும்' கொள்கையில் முழு அர்ப்பணிப்புடன் உள்ளது. இந்த அர்ப்பணிப்புடன், 140 கோடி இந்தியர்கள் இணைந்து 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்றுவோம். இன்று 18 முதல் 20 வயதில் இருக்கும் இளைஞர்களாகிய உங்களிடம் நான் கூறுகிறேன் – நீங்கள் 40 அல்லது 45 வயதை எட்டும்போது, உங்கள் குழந்தைகள் வளர்ந்து வரும்போது, அவர்களை ஒரு வளர்ந்த இந்தியாவில் நீங்கள் வளர்க்க வேண்டும் என்பதற்காகவே நான் கடுமையாக உழைக்கிறேன். உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகத்தான் எனது வாழ்வை அர்ப்பணித்துள்ளேன்.

மிக்க நன்றி!"

"நண்பர்களே,

நாம் வளர்ச்சியை நோக்கிய பாதையில் பயணிக்கத் தொடங்கிவிட்டோம். முன்னேற்றத்தின் புதிய உயரங்களை நாம் எட்டி வருகிறோம். இந்த பயணத்தில், செமிகண்டக்டர் துறை ஒரு பெரும் சக்தியாக உருவெடுத்து, புதிய தன்னம்பிக்கையை உருவாக்கி வருகிறது. உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயர்வான இலக்குகளுடன் முன்னேறுங்கள். இலக்கை அடையத் தவறினாலும் பரவாயில்லை, அதை நாம் பார்த்துக் கொள்ளலாம்; ஆனால் நாம் தொடர்ந்து முன்னோக்கிப் பயணிக்க வேண்டும். உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும்.

(குறிப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு. மூல உரை இந்தியில் வழங்கப்பட்டது.)

(Release ID: 2281154)

***

AD/VK/KR


(रिलीज़ आईडी: 2286522) आगंतुक पटल : 25
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam