வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்த, மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் தலைமையிலான உயர்நிலை பிரதிநிதி குழு பின்லாந்து பயணம்
प्रविष्टि तिथि:
16 JUL 2026 6:59PM by PIB Chennai
இருதரப்பு வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், மூத்த வணிகத் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளைக் கொண்ட உயர்நிலை பிரதிநிதி குழுவினருடன் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், பின்லாந்திற்கான தனது அதிகாரப்பூர்வப் பயணத்தைத் தொடங்கினார். இந்தப் பயணத்தின்போது, இரண்டு நிறுவனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும், அமைச்சர்கள் அளவிலான ஆலோசனைகளும், முக்கியத் துறைகளில் இந்திய மற்றும் பின்லாந்து தொழில் நிறுவனங்களுக்கு இடையே விரிவான கலந்துரையாடல்களும் நடைபெற்றன.
கடந்த மார்ச் மாதம் பின்லாந்து அதிபர் திரு அலெக்சாண்டர் ஸ்டப் இந்தியாவிற்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின்போது, டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் நிலைத்தன்மை ஆகிய துறைகளில் இந்திய-பின்லாந்து உறவுகள் உத்திசார் கூட்டாண்மை நிலைக்கு உயர்த்தப்பட்டதை அடிப்படையாகக் கொண்டும், 2026 ஜனவரி 27 அன்று இந்திய-ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் நிறைவு செய்யப்பட்டதைத் தொடர்ந்தும் இந்தப் பயணம் அமைகிறது.
இந்தப் பயணத்தின் முதல் நாளில், திரு பியூஷ் கோயல், பின்லாந்தின் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் டாக்டர் சகாரி புயிஸ்டோவுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். நிதிச் சந்தைகள், புத்தாக்கம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான நிதியளிப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும், இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரிவுபடுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டன. இந்திய-பின்லாந்து வர்த்தக மன்றக் கூட்டத்திலும் திரு பியூஷ் கோயல் உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் டாக்டர் சகாரி புயிஸ்டோ மற்றும் திரு பியூஷ் கோயல் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
சிஐஐ மற்றும் பிசினஸ் பின்லாந்து ஆகியவற்றுக்கு இடையேயும், சிஐஐ மற்றும் பின்லாந்து தொழில்துறை கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு இடையேயும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இவை இரு நாடுகளுக்கும் இடையே தொழில்துறை ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கும், வணிக ரீதியான ஈடுபாட்டை அதிகரிப்பதற்கும் புதிய நிறுவன ரீதியான வழிமுறைகளை உருவாக்குகின்றன.
கூட்டத்தில் பேசிய திரு பியூஷ் கோயல், 2030-ஆம் ஆண்டிற்குள் இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்குவது என்ற இந்தியா மற்றும் பின்லாந்தின் கூட்டு லட்சியத்தை எடுத்துரைத்தார். மேலும், வர்த்தகம், முதலீடு, உற்பத்தி மற்றும் புத்தாக்கத் துறைகளில் கூட்டாண்மைகளை விரிவுபடுத்துவதற்கு இந்திய-ஐரோப்பிய ஒன்றிய தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் உருவாக்கும் வாய்ப்புகளையும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285470®=3&lang=1
***
TV/RB/RJ
(रिलीज़ आईडी: 2285595)
आगंतुक पटल : 6