தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் மிகப்பெரிய கிராம அளவிலான தொலைத்தொடர்பு வலையமைப்பு செயல்திறன் ஆய்வை மேற்கொள்ள அஞ்சல் துறை, டிராய் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

प्रविष्टि तिथि: 10 JUL 2026 6:54PM by PIB Chennai

'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தை வலுப்படுத்துவதிலும், கிராமப்புற தொலைத்தொடர்பு சேவைகளை மேம்படுத்துவதிலும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களான ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் ஆகியவற்றின் அலைபேசி வலையமைப்பின் செயல்திறனை ஆய்வு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது.  இந்த வலையமைப்பு செயல்திறன் குறித்து இந்தியாவின் 5.68 லட்சத்திற்கும் அதிகமான கிராமங்களில் நாடு தழுவிய செயலி-சார்ந்த ஆய்வை மேற்கொள்ள, தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அஞ்சல் துறையும், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமும் (டிராய்) இந்த ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளன.

 

டிஜிட்டல் இணைப்பை வலுப்படுத்துவதிலும், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் தொலைநோக்குப் பார்வையை விரைவுபடுத்துவதிலும் அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், மத்திய தகவல் தொடர்பு மற்றும் வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம் சிந்தியாவின் தலைமையின் கீழ் இந்த முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரு நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில், அஞ்சல் துறையின் பொது மேலாளர்  திருமதி மனிஷா பன்சால் படல் மற்றும் டிராய்-இன் இணை ஆலோசகர் திரு எஸ். எம். கே. சந்திரா ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

 

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், அஞ்சல் துறை தனது நாடு தழுவிய வலையமைப்பு மூலம் கள ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும், அதே நேரத்தில் டிராய், ஆய்வுச் செயலி, தொழில்நுட்ப ஆதரவு, பயிற்சி மற்றும் மையப்படுத்தப்பட்ட கண்காணிப்பு ஆகியவற்றை வழங்கும். இந்த ஓராண்டுக் கால கூட்டாண்மை, தொலைத்தொடர்பு சேவையின் தரத்தை வலுப்படுத்தும், டிஜிட்டல் இணைப்பு இடைவெளிகளைக் குறைக்கும், டிஜிட்டல் முறையில் வலுவூட்டப்பட்ட மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283414&reg=3&lang=1

****

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2283503) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Malayalam