உள்துறை அமைச்சகம்
துறைமுகப் பாதுகாப்பு அலுவலகம் அமைக்கும் பணிகள்: மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, மத்திய துறைமுகங்கள் அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் ஆய்வு
இடுகை இடப்பட்ட நாள்:
10 JUL 2026 7:43PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நாட்டின் கடலோரப் பாதுகாப்பை எவராலும் ஊடுருவ முடியாதபடி பலப்படுத்துவதில் அரசு உறுதியுடன் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார். துறைமுகப் பாதுகாப்பு அலுவலகம் அமைப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் திரு அமித் ஷா, மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப் பாதைகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் ஆகியோர் முன்னிலையில் புதுதில்லியில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய உள்துறைச் செயலாளர், உளவுத்துறை இயக்குநர், மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை தலைமை இயக்குநர் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கப்பல் போக்குவரத்துச் சட்டம் 2025-ன் படி சட்டப்பூர்வ அமைப்பாக உருவாக்கப்படும் அலுவலகம், துறைமுகங்களின் இணைய பாதுகாப்பை உறுதி செய்யும். அங்கீகாரம் பெற்ற தனியார் பாதுகாப்பு முகமைகளுக்கு மட்டுமே துறைமுகப் பாதுகாப்புப் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையிடம் பயிற்சி பெற்ற பணியாளர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும் என்றும் உள்துறை அமைச்சர் அறிவுறுத்தினார். பாதுகாப்புப் பணியாளர்கள் குறித்த தரவுத்தளத்தை உருவாக்குவதோடு, அனைத்து முக்கியத் துறைமுகங்களிலும் கண்டெய்னர் ஸ்கேனிங் வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். விசாகப்பட்டினம், ஜவஹர்லால் நேரு, முந்த்ரா துறைமுகங்களில் இதற்கான சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்புப் படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மீன்வளத்துறை அதிகாரிகளுடன் திரு அமித் ஷா நடத்திய மற்றொரு கூட்டத்தில் மீன்பிடித் துறைமுகங்களின் பாதுகாப்பை பலப்படுத்த, இஸ்ரோ உருவாக்கியுள்ள 'நப்மித்ரா' செயலியை மீனவர்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டார். மீன் இறங்கு தளங்களின் பட்டியலை மாவட்ட ஆட்சியர்கள் மூலம் மத்திய அரசுக்கு அனுப்பவும், மீனவர்களுக்கான பதிவு நடைமுறைகளை எளிதாக்கவும் அறிவுறுத்தப்பட்டது. மீன் இறங்கு தளங்களில் தற்காலிகப் காவலர்களுக்குப் பதிலாக நிரந்தரக் காவல் பணியாளர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283439®=48&lang=1
****
TV/PD/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2283487)
வருகையாளர் எண்ணிக்கை : 10