பிரதமர் அலுவலகம்
புது தில்லியில் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகைகளை வழங்கும் நிகழ்வில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
प्रविष्टि तिथि:
19 JUN 2026 8:35PM by PIB Chennai
எனது அமைச்சரவை சக ஊழியர் திரு மன்சுக் மாண்டவியா அவர்களே, சகோதரி திருமதி ஷோபா அவர்களே, நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் தொழில்நுட்பத்தின் மூலம் இணைந்துள்ள அனைத்து முக்கிய பிரமுகர்களே, மற்றும் இப்போதே தொகுப்பாளர் குறிப்பிட்டது போல, சுமார் இரண்டு லட்சம் மக்கள் தற்போது 200 இடங்களில் இந்த நிகழ்ச்சியுடன் இணைந்திருக்கிறார்கள்/ அவர்கள் அனைவரும், தொலைவில் இருந்தாலும், எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று இங்கு தொழில்துறை சார்ந்த பல முக்கிய பிரமுகர்களைக் காண்பது மகிழ்ச்சியளிக்கிறது. நிச்சயமாக, இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் திரண்டிருக்கும் இளைஞர்களின் உற்சாகம் தெளிவாகத் தெரிகிறது.
இன்று இந்த நிகழ்ச்சியுடன் இணைந்துள்ள இளம் நண்பர்களிடம், இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்தை நான் காண்கிறேன். சில மணி நேரங்களுக்கு முன்புதான் நான் பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியா பயணத்தை முடித்துத் திரும்பினேன். ஜி-7 உச்சி மாநாட்டில் வளர்ந்த நாடுகளின் தலைவர்களைச் சந்தித்தேன். இன்றைய உலகம் இந்தியாவின் இளைஞர் சக்தியைப் பற்றிப் பேசுகிறது. இந்தியாவின் திறமை, ஆற்றல் மற்றும் சாத்தியக்கூறுகள் குறித்து எல்லா இடங்களிலும் விவாதிக்கப்படுகிறது. இந்திய இளைஞர்களின் திறனை உலகம் உண்மையாகவே அங்கீகரிக்கத் தொடங்கியுள்ளது. இத்தகைய சூழலில், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞரும் தங்கள் திறனை வாய்ப்பாக மாற்ற வேண்டும் என்பதே எங்களது முயற்சியாகும். இந்த தொலைநோக்குப் பார்வையுடன், வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புத் திட்டம், வழக்கமான வேலைவாய்ப்புத் திட்டங்களின் சிந்தனையைக் கடந்து, முதன்முதலாக வேலைக்குச் சேரும் இளைஞர்களின் கனவுகளை வலுப்படுத்தும் ஒரு திட்டமாகும். இது இளைஞர்களுக்கும் தொழில்துறைகளுக்கும் இடையே ஒரு வலுவான பாலத்தை உருவாக்கும் திட்டமாகும்.
நண்பர்களே,
வழக்கமாக, திட்டங்கள் ஊழியர்களுக்காகவோ அல்லது தொழில்துறைகளுக்காகவோ உருவாக்கப்படுகின்றன. ஆனால், இது இளைஞர்களாகிய உங்களை மட்டுமல்லாமல், தொழில்துறை வளர்ச்சியையும் எதிர்காலத்தை நோக்கி அழைத்துச் செல்லும் ஒரு தனித்துவமான திட்டமாகும். ஒரு இளைஞர் தனது முதல் வேலையைத் தொடங்கும்போது, அரசாங்கம் அவருடன் துணை நிற்கிறது. இதனால், அந்த இளைஞர் தனியாக வரவில்லை, ஒட்டுமொத்த அரசாங்கமும் அவருக்குப் பின்னால் நிற்கிறது என்பதை தொழிலதிபர்களும் உணர்கிறார்கள். இதன் காரணமாக, அத்தகைய இளைஞர்கள் மீது தொழிலதிபர்களின் பார்வையும் மாறுகிறது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களையும் அரசாங்கம் ஊக்கப்படுத்துகிறது. முன்னதாக, சில விதிமுறைகள் மற்றும் அமைப்புகள் எவ்வாறு இருந்தன என்றால், பெரிய அளவில் வளர்ந்தால் கட்டுப்பாடுகளில் சிக்கிக் கொள்வோம் என்ற பயத்தில் மக்கள் வளர்வதற்குத் தயங்கினார்கள். எனவே, சிறியதாகவே இருப்பது நல்லது என்று நினைத்தார்கள். ஒருவேளை வளர்ச்சிக்கான வாய்ப்பு இருந்தால், தொழிலை விரிவுபடுத்துவதற்குப் பதிலாக, இன்னுமொரு சிறிய நிறுவனத்தைத் தொடங்கலாம் என்று நினைத்தார்கள். இன்று அந்த மனநிலை மாறியுள்ளது. அனைவரும் பெரிய அளவில் வளர்வதற்கான தைரியத்தைப் பெற வேண்டும், அவர்களின் நம்பிக்கைகளுக்கு சிறகுகள் முளைக்க வேண்டும், அதற்கு தொழில்துறைகளுக்கும் இது தேவைப்படுகிறது. இந்தத் திட்டம் அந்த வாசலைத் திறந்து வைத்துள்ளது, இதுவே இதன் மிகப் பெரிய சிறப்பம்சமாகும். சிறிது நேரத்திற்கு முன்பு, இந்தத் திட்டத்தின் பயனாளி இளைஞர்களுடன் நான் அமர்ந்து அவர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்தேன். அவர்களில் சிலர் முதல் வேலையைப் பெற்றவர்கள், சிலர் இந்தத் திட்டத்தின் கீழ் மற்றவர்களுக்கு வேலை வழங்கியவர்கள். உண்மையைச் சொல்லப்போனால், அந்த இளைஞர்களிடம் இருந்த தன்னம்பிக்கை வியக்கத்தக்க வகையில் இருந்தது; அவர்கள் உலகையே வென்றுவிட்டது போலத் தோன்றியது. அவர்களின் கனவுகள், அவர்களின் நம்பிக்கை – இதுவே உண்மையிலேயே நமது மிகப்பெரிய சொத்தாகும்.
நண்பர்களே,
வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டத்தின் ஆதரவுடன், இதுவரை சுமார் 70 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. சுமார் 70 லட்சம் முதல்முறை பணியாளர்கள் சமூகப் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். சுமார் 20 லட்சம் இளைஞர்கள் ஏற்கனவே தங்கள் முதல் வேலையில் ஆறு மாதங்களை நிறைவு செய்துள்ளனர். இன்று, இந்த இளம் நண்பர்களில் சுமார் 10 லட்சம் பேர், தங்கள் முதல் வேலையில் ஆறு மாதங்களை நிறைவு செய்ததன் மூலம், பயனாளிகளாக இந்தத் திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகையைப் பெற்றுள்ளனர். 2,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை நேரடியாக அவர்களது வங்கிக் கணக்குகளைச் சென்றடைந்துள்ளது. இந்தத் தொகை வெறும் நிதியுதவி மட்டுமல்ல; அது அவர்களின் கடின உழைப்புக்குக் கிடைக்கும் மரியாதை. இது அவர்களின் பிரகாசமான எதிர்காலத்தின் மீது தேசம் வைத்திருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடாகும்.
நண்பர்களே,
நமது இளைஞர்களுக்கு வாய்ப்பளித்த அந்த நிறுவனங்களுக்காகவும் நான் மகிழ்ச்சியடைகிறேன். இளைஞர்களிடம் மறைந்துள்ள திறனை அவர்கள் கண்டறிந்து, அந்த வாய்ப்புகளை வழங்கியதற்காக அவர்கள் பாராட்டுக்குரியவர்கள். இந்த நிறுவனங்களே கடந்த சில மாதங்களில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. இப்போது மன்சுக் பாய் பகிர்ந்து கொண்ட புள்ளிவிவரங்களை, ஊடகங்கள் கவனிக்கும் என்று நான் நம்புகிறேன். இத்தகைய மாபெரும் முயற்சி நடைபெறுவதை அறிந்து நாட்டு மக்கள் பெருமகிழ்ச்சி அடைவார்கள். அரசு, இளைஞர்கள் மற்றும் தொழில்துறை ஆகியவை இணைந்து செயல்படும்போது, வேலைவாய்ப்பு உருவாக்கம் பலமடங்கு வேகமெடுக்கும் என்பதை இந்தப் புள்ளிவிவரங்களும் அனுபவங்களும் தெளிவாகக் காட்டுகின்றன. வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டம், இந்த புதிய இந்தியாவின் அடையாளமாகும் – இளைஞர்களுக்கு வாய்ப்புகளும், தொழில்துறைகளுக்கு ஊக்கமும் கிடைத்து, வேலைவாய்ப்பு உருவாக்கம் ஒரு தேசிய இயக்கமாக மாறியுள்ள இந்தியாவின் அடையாளம் இது.
நண்பர்களே,
இந்தியா உலகின் மிக இளமையான நாடுகளில் ஒன்றாகும். எனவே, வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய பயணம், நமது இளைஞர்களின் கனவுகள், திறமைகள் மற்றும் ஆற்றல் மூலமே முன்னேறுகிறது. நாட்டில் உள்ள ஒவ்வொரு இளைஞரும் தங்கள் திறமைக்கு ஏற்ப முன்னேற வேண்டும் என்பதே எங்களது முயற்சி. திறமை உள்ள எவருக்கும் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். புதிய கருத்துகள் கொண்ட எவருக்கும் புத்தாக்கத்திற்கான தளம் கிடைக்க வேண்டும். தாங்களாகவே ஏதாவது சாதிக்க விரும்பும் எவருக்கும் முழுமையான ஆதரவு கிடைக்க வேண்டும். இந்தியாவைப் போன்ற இளமையான நாட்டில், வாய்ப்புகள் அதிகரிக்க அதிகரிக்க, இளைஞர்களின் கனவுகள் இன்னும் உயர்வாகப் பறக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்தப் பார்வையுடன், கடந்த 12 ஆண்டுகளாக, வேலைவாய்ப்புக்கான ஒவ்வொரு வழியும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு முதல் புத்தாக்கம் வரை, உற்பத்தி முதல் டிஜிட்டல் பொருளாதாரம் வரை, விண்வெளி முதல் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் வரை - ஒவ்வொரு துறையிலும் புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ‘இந்தியாவில் உற்பத்தி செய்வோம்’ (Make in India) இயக்கம், 'உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்' (Vocal for Local), உள்ளூர் தயாரிப்புகளை உலகளாவியதாக மாற்றும் முயற்சி, உற்பத்தித் துறைக்கான இலக்கு - இவை அனைத்தும் நாட்டில் வேலைவாய்ப்புகளையும், சுயதொழில் வாய்ப்புகளையும் உருவாக்கி வருகின்றன. இன்று, கார்கள் முதல் மெட்ரோ பெட்டிகள் வரை, ரயில் பெட்டிகள் முதல் பாதுகாப்பு உபகரணங்கள் வரை, பல துறைகளில் ஏற்றுமதி வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் உற்பத்தி அதிகரித்து வருவதாலும், தொழிற்சாலைகள் பெருகி வருவதாலும், அவற்றில் பணிபுரியும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் இது சாத்தியமாகிறது.
நண்பர்களே,
கடந்த 12 ஆண்டுகளில், இந்திய அரசின் கொள்கைகளும் முடிவுகளும் நாட்டில் வேலைவாய்ப்புக்கான புதிய துறைகளைத் தொடர்ந்து உருவாக்கி வருகின்றன. இன்று, உள்கட்டமைப்பில் முதலீடு செய்யப்பட்டுள்ள 12 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை, லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு அடித்தளமாக மாறி வருகிறது. பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ், 33 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான உதவித் தொகை, கோடிக்கணக்கான இளைஞர்களுக்குத் தங்கள் சொந்தத் தொழிலைத் தொடங்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது. 10 கோடிக்கும் அதிகமான பெண்கள் சுயஉதவிக் குழுக்களுடன் இணைந்துள்ளனர், அவர்களில் 3 கோடிக்கும் அதிகமானோர் "இலட்சாதிபதி சகோதரிகள்" (Lakhpati Didis) ஆக மாறியுள்ளனர். ஸ்வநிதி (SVANidhi) மற்றும் பிரதமர் விஸ்வகர்மா போன்ற முன்னெடுப்புகள், சிறு தொழில்முனைவோர், தெருவோர வியாபாரிகள் மற்றும் பாரம்பரியக் கைவினைஞர்களுக்குப் புதிய தொழில்நுட்பம், புதிய நிதி உதவி மற்றும் புதிய வலிமையை வழங்கியுள்ளன. சமீபத்தில் நான் உரையாடிய இளைஞர்களில், ஐடிஐ (ITI) படிப்பை முடித்த ஒரு இளைஞர், மிகுந்த உற்சாகத்துடன் ட்ரோன்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். ட்ரோன் துறையிலிருந்தே ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன். மருந்துப் பொருட்களை வழங்குவதோ, பூச்சிக்கொல்லிகளைத் தெளிப்பதோ, ஸ்வாமித்வா (SVAMITVA) திட்டத்தின் கீழ் நிலவரைபடம் தயாரிப்பதோ அல்லது பாதுகாப்புத் துறையில் பயன்படுத்துவதோ என, நாட்டில் ட்ரோன்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வளர்ந்து வரும் ட்ரோன் பயன்பாடு இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருகிறது. ஐடிஐ (ITI) படிப்பை முடித்த அந்த இளைஞர், மிகுந்த தன்னம்பிக்கையுடன் கூறினார்: "ட்ரோன் காணொலிகளைப் பார்த்துக் கொண்டிருக்காதீர்கள், நீங்களே ட்ரோன்களை உருவாக்கத் தொடங்குங்கள் - உங்களால் முடியும்." அவ்வளவு தன்னம்பிக்கையுடன் அவர் பேசினார். விண்வெளித் துறையைத் தனியார் பயன்பாட்டிற்குத் திறந்துவிட வேண்டும் என்ற நமது அரசாங்கத்தின் முடிவும் இளைஞர்களுக்குப் பெரும் நன்மைகளைத் தந்துள்ளது.
நண்பர்களே,
கடந்த பத்தாண்டுகளில், டிஜிட்டல் பொருளாதாரமும் வாய்ப்புகளின் ஒரு புதிய உலகத்தையே உருவாக்கியுள்ளது. செயலிசார் தொழிலாளர்களின் பொருளாதாரம் (gig economy), நடைபாதை தொழிலாளர்களின் (platform economy), உள்ளடக்க உருவாக்கம் அல்லது தொழில்நுட்ப சேவைகள் என எதுவாக இருந்தாலும் சரி - வேலைவாய்ப்புக்கான புதிய பகுதிகள் வேகமாக உருவாகி வருகின்றன. ஒரு காலத்தில் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத வாய்ப்புகள், இன்று லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வருமான ஆதாரங்களாக மாறியுள்ளன. ஸ்டார்ட்-அப் சூழலிலும் இதே மாற்றத்தைக் காண முடிகிறது. ஒரு காலத்தில், நாட்டில் சுமார் 500 ஸ்டார்ட்-அப்கள் மட்டுமே இருந்தன. இன்று, 2,00,000-க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட்-அப்கள் உள்ளன, நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நீங்கள் ஸ்டார்ட்-அப்களைக் காணலாம். இந்தியாவின் இளைஞர்கள், வரும் ஆண்டுகளில் வளர்ச்சி, புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோர் துறைகளில் உலகை வழிநடத்துவார்கள் என்ற நம்பிக்கையை இந்த புள்ளிவிவரங்கள் அளிக்கின்றன.
நண்பர்களே,
இன்று உலகம் முழுவதுமே இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றி உற்சாகமாக உள்ளது. இந்தியாவின் இளைஞர் சக்தியின் மீது அனைவரும் நம்பிக்கை கொண்டுள்ளனர். பிரான்சில் நடைபெற்ற பிரம்மாண்டமான "இந்தியா இன்னோவேட்ஸ்" (India Innovates) நிகழ்ச்சியை நீங்கள் பார்த்திருப்பீர்கள். செயற்கை நுண்ணறிவு (AI), விண்வெளி, பசுமை எரிசக்தி, உயிரித் தொழில்நுட்பம் போன்ற துறைகளில், இந்தியாவின் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் உலகளாவிய முதலீட்டாளர்களும் ஒரு புதிய சக்தியாக உருவெடுத்து, இணைந்து செயல்பட முன்வருகிறார்கள். இன்று இந்தியா உலகின் பல நாடுகளுடன் புதிய வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது – இந்த ஒப்பந்தங்கள் இந்தியாவின் தொழில்துறைகளுக்கு புதிய சந்தைகளைத் திறந்து விடுகின்றன, மேலும் இந்தியாவின் தொழில் வல்லுநர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தருகின்றன. கடந்த சில மாதங்களில், பல ஐரோப்பிய நாடுகளுடன் முக்கியமான பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த ஒப்பந்தங்கள் நாட்டில் லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான ஒரு ஊடகமாக மாறி வருகின்றன.
நண்பர்களே
எதிர்காலப் பொருளாதாரத்திற்காக உலகம் தயாராகி வருகிறது. எதிர்காலப் பொருளாதாரத்தை வழிநடத்த இந்தியா தயாராகி வருகிறது. உலகம் எதிர்காலத் தொழில்நுட்பங்களை நோக்கி நகர்கிறது, இந்தியா தனது இளைஞர்களை எதிர்காலத்திற்குத் தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. இது இந்தியாவின் இளைஞர்களுக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வாய்ப்பு, இதை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நண்பர்களே,
கடந்த 12 ஆண்டுகளில், இந்தியாவின் வேலைவாய்ப்புத் தளத்தில் மற்றொரு பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. இதைப் பற்றி விவாதிப்பது குறைவாக இருந்தாலும், வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில் இதன் முக்கியத்துவம் அளப்பரியது. இந்த மாற்றம் என்பது வேலைவாய்ப்பைப் பாதுகாப்போடும் கண்ணியத்தோடும் இணைப்பதாகும். பாதுகாப்பான வேலைவாய்ப்பே எங்களது தொலைநோக்கு. ஒவ்வொரு தொழிலாளிக்கும் சமூகப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதே எங்களது இலக்கு. அதனால்தான், இன்று தொழில்நுட்பத்தின் மூலம் இபிஎஃப்ஓ (EPFO) அமைப்பு நவீனமயமாக்கப்பட்டுள்ளது. ஓய்வூதிய நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டு, அனைவருக்கும் எளிதில் கிடைக்குமாறு செய்யப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான புதிய தொழிலாளர்கள் மருத்துவக் காப்பீடு மற்றும் குறைந்த விலையில் மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர்.
நண்பர்களே,
இந்த தொலைநோக்குப் பார்வையுடன் நாங்கள் தொழிலாளர் சீர்திருத்தங்களையும் முன்னெடுத்துள்ளோம். புதிய தொழிலாளர் சட்டங்களின் நோக்கம், தொழிலாளர்களுக்கு அதிகப் பாதுகாப்பு, அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் கூடுதல் உரிமைகளை வழங்குவதாகும். பணி நியமனக் கடிதங்களுக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிப்பதாகட்டும், காலமுறைப் பணியாளர்களுக்கு (fixed-term employees) சமமான வசதிகளை உறுதி செய்வதாகட்டும், அல்லது குறைந்தபட்ச ஊதியத்தின் வரம்பை விரிவுபடுத்துவதாகட்டும் - ஒவ்வொரு முயற்சியும் தொழிலாளர்களின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நண்பர்களே,
நமது மகளிர் சக்தி இன்று ஒவ்வொரு துறையிலும் புதிய உயரங்களை எட்டி வருகிறது. எனவே, பெண்களுக்காகப் பாதுகாப்பான, மரியாதைக்குரிய மற்றும் வாய்ப்புகள் நிறைந்த ஒரு சூழல் உருவாக்கப்பட்டு வருகிறது. இரவு நேரப் பணிகள் தொடர்பான பழைய கட்டுப்பாடுகளை மாற்றுவது, வீட்டிலிருந்தே பணிபுரியும் (work from home) வசதியை வழங்குவது அல்லது பாதுகாப்பான பணியிடங்களை உறுதி செய்வது என, பெண்களின் பங்கேற்பை நாங்கள் மேலும் வலுப்படுத்தி வருகிறோம்.
நண்பர்களே,
இன்று தொழில்துறையைச் சேர்ந்த எனது நண்பர்கள் பெருமளவில் இங்கு வந்துள்ளனர். உங்கள் அனைவருக்கும் நான் ஒரு கோரிக்கையை வைக்க விரும்புகிறேன். 21-ம் நூற்றாண்டில், தகுதிவாய்ந்த திறமை, புத்தாக்கம் மற்றும் தரம் ஆகியவற்றைக் கொண்டுள்ள நாடுகளுக்கே வாய்ப்புகள் தேடிச் செல்லும். இன்று இந்தியா இந்த மூன்று துறைகளிலும் முன்னேறுவதற்கான முன்னோடி இல்லாத ஆற்றலைக் கொண்டுள்ளது. அதனால்தான் இந்தியாவின் தொழில்துறையினருக்கு நான் கூற விரும்புகிறேன் - இன்று நம் முன்னே இருக்கும் வாய்ப்புகளை நாம் முழு பலத்துடன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் புதிய சந்தைகளைச் சென்றடைய வேண்டும். புதிய தயாரிப்புகளை உருவாக்க வேண்டும். உலகின் மிகச்சிறந்த நிறுவனங்களுடன் நாம் போட்டியிட வேண்டும். ஏனெனில் இன்று உலகம் இந்தியாவுக்காகத் தன் கதவுகளைத் திறந்து வைத்துள்ளது. நண்பர்களே, ஒரு காலத்தில் நமக்கு ஒரு ஜன்னல் கூட திறக்கப்படவில்லை – ஆனால் இன்று கதவுகளே திறக்கப்படுகின்றன. இந்தியா உலக நாடுகளுடன் பல வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்துள்ளது, அவற்றைப் நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தங்கள் புதிய சந்தைகளை உருவாக்குவதோடு, புதிய சந்தைகளை எளிதில் அணுகவும் வழிவகுக்கின்றன. மேலும் உலகளவில் 'மேட் இன் இந்தியா' பிராண்டுகளுக்குப் புதிய வாய்ப்புகளையும் உருவாக்கித் தருகின்றன. எனவே, நண்பர்களே, இந்த வாய்ப்புகளை நாம் நழுவ விடக்கூடாது.
நண்பர்களே,
இலக்குகள் பெரிதாக இருக்கும்போது, சாதனைகளும் பெரியதாகவே இருக்கும். தொலைநோக்குப் பார்வை உலகளாவியதாக இருக்கும்போது, வெற்றியும் எல்லைகளும் இயல்பாகவே விரிவடையும். அதனால்தான் பயிற்சி, வழிகாட்டல் மற்றும் உள்ளகப் பயிற்சி (இன்டர்ன்ஷிப்) போன்றவை இனி விருப்பத்திற்குரியவை அல்ல – அவை 21-ம் நூற்றாண்டின் அத்தியாவசியத் தேவைகள். இந்தியாவின் தொழில்துறை தமக்கான திறமையான பணியாளர்களைத் தயார்படுத்துவதோடு, எதிர்காலத்திற்கான புதிய வாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும். ஏனெனில், வளர்ந்த இந்தியாவிற்கான பாதை முதலீடுகளால் மட்டும் உருவாக்கப்படாது; அது திறமை, திறன் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றின் சக்தியால் உருவாக்கப்படும். இந்த முழு பயணத்தின் மிகப்பெரிய தேர்வு ஒன்றே ஒன்றுதான், அதை நான் தொழில்துறையில் உள்ள எனது சக நண்பர்களிடம் தொடர்ந்து கூறி வருகிறேன் – இந்தச் சூழல் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்வதற்கான மிக வலிமையான மருந்து 'தரம்' (Quality) ஆகும்.
கல்வியின் தரம். திறமையின் தரம். சேவையின் தரம். தயாரிப்பின் தரம். ஏன், பேக்கேஜிங்கின் தரம் கூட முக்கியம். நாம் உலகில் நிலைத்து நிற்க வேண்டுமென்றால், உயர்ந்த உலகளாவிய தரநிலைகளை நாம் பூர்த்தி செய்ய வேண்டும். நாம் உலகை முந்திச் செல்ல வேண்டுமென்றால், சிறந்து விளங்குவதே நமது அடையாளமாக மாற வேண்டும். இன்று, உலகிற்கு இந்தியாவிடமிருந்து பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளன. ஆனால், இந்தியாவின் இளைஞர்கள் அந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வது மட்டுமன்றி, அதைத் தாண்டியும் சென்று, உலகிற்குப் பெருமையுடனும் தைரியத்துடனும் நிரூபிப்பார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. இதுவே வளர்ச்சியடைந்த இந்தியாவின் பலம். இதுதான் எனது இளம் நண்பர்களின், நமது இளைஞர்களின், அவர்களின் திறமையின் மற்றும் அவர்களின் ஆற்றலின் அடையாளம்.
நண்பர்களே,
கனவுகள் நிறைவேறும் இடத்தில்தான் அவை வளரும். ஒரு கனவு நனவாகும் போது, அது இன்னும் பெரிய கனவிற்கான பாதையைத் திறந்து வைக்கிறது. இன்று இந்தியாவில் நடப்பது இதுதான். இந்திய இளைஞர்களின் துடிப்பை நான் புரிந்துகொள்கிறேன், எனது இளம் நண்பர்களிடம் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன் - உங்கள் கனவுகள், நான் மீண்டும் சொல்கிறேன், எனது இளம் நண்பர்களே, உங்கள் கனவுகள் தான் மோடியின் லட்சியம்! நீங்கள் வெற்றியை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் எனது ஊக்கமும் கூட. ஆம், தோல்வியிலும் சோர்ந்து போக வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு தோல்வியும் நமக்கு ஏதோ ஒன்றைக் கற்றுத்தருகிறது. விளையாட்டுத் துறையில் உள்ளவர்களிடம் நான் எப்போதும் சொல்வது இதுதான் - நீங்கள் களத்தில் இறங்கும்போது, யாரும் தோற்பதில்லை. ஒன்று வெல்கிறது, இன்னொன்று கற்றுக் கொள்கிறது. யாரும் தோற்பதில்லை. தோல்விகளிலிருந்து தொடர்ந்து கற்றுக்கொள்வது, கனவுகளை நனவாக்குவது, ஒவ்வொரு சாதனைக்குப் பிறகும் புதிய கனவுகளை உருவாக்குவது - இதுவே ஒரு இளம் மனதின் உண்மையான அளவுகோலாகும். இந்தியாவின் இளைஞர் சக்தியின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. இந்தியாவின் தொழில்முனைவோர் திறனில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். இந்த நம்பிக்கையுடன், உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2047-ம் ஆண்டில், நாடு சுதந்திரமடைந்து 100 ஆண்டுகளைக் கொண்டாடும் போது, இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக இருக்கும். இதுவே நமது கனவு, இதுவே நமது லட்சியம். எனது இளம் நண்பர்களே, அதை நாம் நம் கண்களாலேயே காண்போம் என்று நான் நம்புகிறேன் - நாம் அனைவரும் வளர்ச்சியடைந்த இந்தியாவை நேரில் காண்போம். மிக்க நன்றி. உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
பொறுப்புத் துறப்பு - இது பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். அசல் உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது.
(Release ID: 2275432)
***
AD/VK/KR
(रिलीज़ आईडी: 2282743)
आगंतुक पटल : 23
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam