பிரதமர் அலுவலகம்
ஜப்பானியப் பிரதமருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின்போது இந்தியப் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
प्रविष्टि तिथि:
02 JUL 2026 2:25PM by PIB Chennai
மரியாதைக்குரிய மேன்மைமிகு பிரதமர், என் அன்புத் தங்கை, ஜப்பானியப் பிரதமர் தகைச்சி அவர்களே,
இரு நாட்டுப் பிரதிநிதிகள் குழு உறுப்பினர்களே,
ஊடக நண்பர்களே,
வணக்கம்!
கொன்னிச்சிவா !
இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டிற்காக, முதன்முறையாக இந்தியா வந்துள்ள பிரதமர் தகைச்சி அவர்களை வரவேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
அவர் ஜப்பானின் முதல் பெண் பிரதமர் மட்டுமல்லாமல், தொலைநோக்குப் பார்வை கொண்ட மற்றும் பரவலாக மதிக்கப்படும் ஒரு தலைவரும் ஆவார். மேலும், அவர் ஜப்பானின் நாரா மாகாணத்தைச் சேர்ந்தவர். இந்த நாரா மாகாணம், இந்தியாவிற்கும் ஜப்பானிற்கும் இடையே பகிரப்பட்ட பௌத்த பாரம்பரியத்தின் முக்கியமான மையமாகத் திகழ்கிறது.
நண்பர்களே,
சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில் நான் குறிப்பிட்டது போல, இன்றைய உலகளாவிய நிச்சயமற்ற மற்றும் கொந்தளிப்பான சூழலில், பரஸ்பர நம்பிக்கையே நமது மிகப்பெரிய உத்திசார்ந்த சொத்தாகும். இந்தியா-ஜப்பான் இடையேயான பங்களிப்பு, இந்த கொள்கைக்கு எல்லா வகையிலும் சான்றாகத் திகழ்கிறது என்பதை நான் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த பல தசாப்தங்களாக, ஆட்டோமொபைல் முதல் மின்னணுவியல் வரை இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஜப்பான் ஒரு முக்கிய பங்காளியாக உள்ளது. அதோடு மட்டுமல்லாமல், நட்பு மற்றும் நம்பிக்கையின் விலைமதிப்பற்ற உறைவிடமாகவும் ஜப்பான் திகழ்கிறது.
இன்று, பிரதமர் தகைச்சி அவர்களின் இந்த வருகையின் மூலம், நமது 'சிறப்பு உத்திசார் மற்றும் உலகளாவிய பங்களிப்பில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைக்கிறோம்.
நண்பர்களே,
இன்று, இந்தியாவும் ஜப்பானும் உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்திகளாகத் திகழ்கின்றன. சுதந்திரமான, வளமான மற்றும் விதிகளுக்கு உட்பட்ட இந்தோ-பசிபிக் பிராந்தியம் என்பது நமது இரு நாடுகளின் பகிரப்பட்ட முன்னுரிமையாகத் தொடர்கிறது. இந்தப் பிராந்தியத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளாகவும், சந்தைப் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளாகவும், நாங்கள் இன்று பல முக்கியமான முன்னெடுப்புகளைத் தொடங்கியுள்ளோம். இவை அனைத்தும் இணைந்து, இப்பிராந்தியம் முழுவதும் அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழிப்பை உறுதி செய்வதற்கான பாதையை வகுக்க உதவும்.
நண்பர்களே,
தொழில்நுட்பப் பங்களிப்பே நமது ஒத்துழைப்பின் வலிமையான தூணாக அமையும் என்று பிரதமர் தகைச்சியும் நானும் உறுதியாக நம்புகிறோம். இந்தத் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு குறித்த கூட்டு அறிக்கையை நாங்கள் இன்று வெளியிட்டுள்ளோம். அதேபோல், இந்தியாவின் ஏஐ சூழல் அமைப்பில் உள்ள பல முன்னணி நிறுவனங்கள், ஜப்பானியக் கூட்டாளர்களுடன் ஒப்பந்தங்களைச் செய்துள்ளன. ஜப்பானின் நுணுக்கமான தொழில்நுட்பங்களும், இந்தியாவின் மென்பொருள் ஆற்றலும் ஒன்றிணைவது, உலகளாவிய ஏஐ வளர்ச்சியில் புதிய உத்வேகத்தையும் வலிமையையும் அளிக்கும்.
பாதுகாப்புத் துறையைப் பொறுத்தவரை, இந்தியா மற்றும் ஜப்பான் இடையே முதன்முறையாக கூட்டுத் தயாரிப்புத் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டுள்ளோம். இந்த 'கடற்படை வானொலி ஆண்டெனா' திட்டம், நமது பாதுகாப்புத் தொழில்நுட்பப் பங்களிப்பில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைக்கும். வருங்காலத்தில், பிராந்திய அமைதி, கடல்சார் பாதுகாப்பு மற்றும் விதிகளுக்கு உட்பட்ட ஒழுங்கமைப்பை வலுப்படுத்தும் வகையில், பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை நாங்கள் இணைந்து மேம்படுத்துவோம்.
மருந்துகள், மருத்துவக் கருவிகள் மற்றும் உயிரித் தொழில்நுட்பத் துறைகளில் இன்று கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்கள், உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பிற்குப் பங்களிக்க நமக்கு உதவும். இந்தியாவின் பெரும் உற்பத்தித் திறனையும், ஜப்பானின் உயர்தரத்தையும் இணைப்பதன் மூலம், குறைந்த செலவிலான, நம்பகமான மற்றும் மேம்பட்ட சுகாதாரத் தீர்வுகளை உலகிற்கு வழங்க நாங்கள் இணைந்து செயல்படுவோம்.
நண்பர்களே,
இந்தியா-ஜப்பான் முதலீட்டுப் பங்களிப்பு தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட புதிய வணிக ஒப்பந்தங்கள் முடிக்கப்பட்டுள்ளன, இது இந்தியாவில் 10 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான ஜப்பானிய முதலீடுகளுக்கு வழிவகுத்துள்ளது. நமது நிதிச் சேவை நிறுவனங்களுக்கு இடையே இன்று கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையே மூலதனம் மற்றும் முதலீடுகளின் ஓட்டத்தை மேலும் எளிதாக்கும்.
எங்கள் இலக்கு தெளிவானது. அடுத்த பத்து ஆண்டுகளில் 10 டிரில்லியன் யென் மதிப்பிலான ஜப்பானிய முதலீடுகளை இந்தியாவில் ஈர்ப்பதும், இந்தியாவில் செயல்படும் ஜப்பானிய நிறுவனங்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக உயர்த்துவதுமே ஆகும். இந்தியாவில் நடைபெற்று வரும் சீர்திருத்தங்கள் வணிகச் சூழலை கணிசமாக மேம்படுத்தியுள்ளன; இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள ஜப்பானிய நிறுவனங்கள் நல்ல நிலையில் உள்ளன.
நண்பர்களே,
இன்றைய நிச்சயமற்ற காலகட்டத்தில், பொருளாதாரப் பாதுகாப்பு மற்றும் எரிசக்திப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை இந்தியாவும் ஜப்பானும் முழுமையாக உணர்ந்துள்ளன. இந்த நோக்கத்தை அடைய, பொருளாதாரப் பாதுகாப்பு குறித்த கூட்டு திட்டத்தை நாங்கள் இன்று ஏற்றுக்கொண்டுள்ளோம். இந்த திட்டத்தின் மூலம், செமிகண்டக்டர்கள் குவாண்டம் தொழில்நுட்பங்கள் மற்றும் மேம்பட்ட பொருட்கள் போன்ற உத்திசார்ந்த துறைகளில் விநியோகச் சங்கிலியின் வலிமையை நாங்கள் உறுதிப்படுத்துவோம்.
எரிசக்திப் பாதுகாப்புத் துறையிலும், நாங்கள் இன்று பல முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளோம். 'இந்தியா-ஜப்பான் உயிரியல் எரிவாயு முன்னெடுப்பின்' மூலம், இந்தியா முழுவதும் ஆயிரம் உயிரியல் எரிவாயு மற்றும் இயற்கை உர ஆலைகளை நிறுவுவதற்கு ஆதரவு அளிக்கப்படும். இது நமது 'கோபர்தன்' முன்னெடுப்பை மேலும் வலுப்படுத்தும்.
இது இந்தியாவின் கிராமப்புறங்களில் நிலைத்தன்மை, செழிப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும். கச்சா எண்ணெய் விலை ஏற்றங்கள் போன்ற சவால்களைச் சிறப்பாக எதிர்கொள்ள, எரிசக்தி மீள்தன்மை குறித்த முக்கிய முன்னெடுப்பொன்றையும் நாங்கள் இன்று தொடங்கியுள்ளோம். அதே வேளையில், பேட்டரிகள், பசுமை ஹைட்ரஜன் மற்றும் அணுசக்தித் துறைகளில் எங்களது ஒத்துழைப்பு, உலகின் தூய்மையான எரிசக்தி எதிர்காலத்திற்குப் பெரும் பங்களிப்பை வழங்கும்.
பொருளாதாரப் பாதுகாப்பை ஒரு பகிரப்பட்ட பாதுகாப்புத் தேவையாகவும், எரிசக்தி மாற்றத்தை ஒரு பகிரப்பட்ட வாய்ப்பாகவும் இந்தியாவும் ஜப்பானும் கருதுகின்றன. இந்த பொதுவான தொலைநோக்குப் பார்வையின் வழிகாட்டுதலோடு, இவை இரண்டையும் முன்னெடுத்துச் சென்று, அவற்றை உறுதியான பலன்களாக மாற்ற நாங்கள் இணைந்து பணியாற்றுவோம்.
நண்பர்களே,
'இந்தியா-ஜப்பான் அடுத்த தலைமுறை நகர்வுக்கான பங்களிப்பு கட்டமைப்பை' நாங்கள் இன்று உருவாக்கியுள்ளோம். இது, வாகனத் துறையில் நாங்கள் அடைந்த வெற்றிப் பயணத்தை, கப்பல் கட்டுதல், விமானப் போக்குவரத்து மற்றும் தளவாடங்கள் போன்ற புதிய துறைகளிலும் பிரதிபலிக்க உதவும்.
நண்பர்களே,
நமது உறவின் மிகப்பெரிய வலிமைகளில் ஒன்று, மக்களிடையே நிலவும் பிணைப்பாகும். திறமையாளர்கள் பரிமாற்றம், திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்பப் பயிற்சித் திட்டங்களுக்கான வாய்ப்புகளை நாங்கள் விரிவுபடுத்தி வருகிறோம். அதே வேளையில், ஆராய்ச்சி, கல்வி மற்றும் புத்தொழில் சூழல் மண்டலங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தி வருகிறோம்.
இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான தூதரக உறவுகள் தொடங்கப்பட்டு, அடுத்த ஆண்டு 75-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவது எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த முக்கிய தருணத்தில், கலாச்சாரம், சுற்றுலா மற்றும் படைப்பாற்றல் பொருளாதாரம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை அதிகரிப்பதன் மூலம், நமது மக்களிடையே உள்ள பிணைப்பை மேலும் ஆழப்படுத்துவோம்.
"இந்தியாவின் பொருளாதாரமும் ஜப்பானின் பொருளாதாரமும் ஒன்றுக்கொன்று கைகொடுக்கும் வகையில் அமைந்துள்ளன. நமது பொதுவான கலாச்சார விழுமியங்கள் முதல் இன்றைய நவீன தொழில்நுட்பம் வரை, நாம் இருவருமே ஒரே மாதிரியான பார்வையையும் அணுகுமுறையையும் கொண்டுள்ளோம்.".
அனைத்திற்கும் மேலாக, நமது உறவின் அடித்தளம் அசைக்க முடியாத பரஸ்பர நம்பிக்கையின் மீது அமைந்துள்ளது. வலிமையான மற்றும் வளமான ஜப்பானைக் கட்டமைக்க உங்கள் தொலைநோக்குப் பார்வையும், வளர்ச்சியடைந்த இந்தியா உருவாக்கத்தில் எங்களின் உறுதியும், உலக முன்னேற்றமும் இந்த 'சிறப்பு உத்திசார் மற்றும் உலகளாவிய பங்களிப்பின்' மூலம் புதிய உச்சங்களை எட்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.
வலிமையான மற்றும் வளமான ஜப்பானைக் கட்டமைக்க உங்கள் தொலைநோக்குப் பார்வையும், வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் எங்களின் உறுதியும், உலகம் முழுமைக்குமான முன்னேற்றம் மற்றும் செழிப்பு குறித்த நமது பரஸ்பர நம்பிக்கைகளும் ஒன்றாக இணைந்து நனவாகட்டும்.
மீண்டும் ஒருமுறை, உங்களுக்கு எனது மனமார்ந்த மற்றும் அன்பான வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக்க நன்றி.
பொறுப்புத் துறப்பு - இது பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். அசல் உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது.
(Release ID: 2280260)
***
AD/VK/KR
(रिलीज़ आईडी: 2282733)
आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam