பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

டாமனில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் முடிவடைந்த பணிகளை தொடங்கிவைத்தும் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

प्रविष्टि तिथि: 05 JUN 2026 10:05PM by PIB Chennai

பாரத மாதாவுக்கு ஜே!

பாரத மாதாவுக்கு  ஜே!

தாதர் மற்றும் நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூவின் நிர்வாகி பிரஃபுல் பாய் படேல் அவர்களே, நாடாளுமன்றத்தில் எனது சக உறுப்பினரான கலாபென் தேல்கர் அவர்களே, டாமன் நகராட்சி மன்றத் தலைவர் தீபிகா தாண்டேல் அவர்களே, டாமன் மாவட்ட ஊராட்சித் தலைவர் தரம் பாபு படேல் அவர்களே, சில்வாசா நகராட்சி மன்றத் தலைவர் சோமநாத் தேவரே அவர்களே, தாதர் மற்றும் நகர் ஹவேலி மாவட்ட ஊராட்சித் தலைவி நிஷா பவ்சர் அவர்களே, டையூ நகராட்சி மன்றத் தலைவர் ஹரிஷ் கபாடியா அவர்களே, டையூ மாவட்ட ஊராட்சித் தலைவி கோட்டியா ரஞ்சிதாபென் அவர்களே, மற்றும் இங்கே பெருந்திரளாகக் கூடியிருக்கும் எனது அன்புச் சகோதர, சகோதரிகளே!

இங்கே நீங்கள் கூடியிருப்பதைப் போலவே, லட்சத்தீவிலும் ஏராளமான மக்கள் காணொலி வாயிலாக நம்முடன் இணைந்திருக்கிறார்கள். ஏனென்றால், லட்சத்தீவின் வளர்ச்சியில் இன்று ஒரு புதிய தொடக்கம் ஏற்பட்டுள்ளது. லட்சத்தீவு மக்களின் வாழ்க்கையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தப்போகும் புதிய திட்டங்கள் தொடங்கிவைக்கப்பட்டுள்ளன; மேலும் சில திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டப்பட்டுள்ளது.

நண்பர்களே,

சில ஆண்டுகளுக்கு முன்பு நான் உங்களைக் காண வந்தபோது, நமது டாமன் மிக வேகமாக 'மினி இந்தியா'வாக  மாறி வருகிறது என்று கூறியிருந்தேன். இன்று நான், இடதுபுறம் முழு வங்காளமும், வலதுபுறம் முழு அசாமும் இருப்பதைப் போல உணர்கிறேன். டாமன், 'மினி இந்தியா' என்பதற்கு ஒரு வாழும் உதாரணமாக மாறியுள்ளது. இங்கிருக்கும் பன்முகத்தன்மையும், பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த மக்கள் இங்கே வசிப்பதும், உங்களுக்குள்ளே முழு இந்தியாவின் அழகான பிம்பத்தை வெளிப்படுத்துகிறது. எங்களை வாழ்த்த நீங்கள் அனைவரும் இவ்வளவு பெருந்திரளாகக் கூடியிருப்பதற்கு, உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சகோதர, சகோதரிகளே,

டாமன் மற்றும் டையூவிற்கு நான் பலமுறை வந்துள்ளேன். தாதர் மற்றும் நகர் ஹவேலிக்கும் நான் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறேன். நான் முதலமைச்சராகவோ அல்லது பிரதமராகவோ இல்லாத காலத்தில்கூட, நான் பலமுறை இங்கு வந்துள்ளேன். ஆனால், இப்போது நான் இங்கு வந்து, இங்குள்ள நல் ஆளுமையையும், நிர்வாக முறையையும் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒவ்வொரு முறையும் முந்தைய காலத்தை விட, இந்த பிராந்தியம் வளர்ச்சியின் பாதையில் முன்னேறியுள்ளதை என்னால் உணர முடிகிறது.

நண்பர்களே,

தாதர் மற்றும் நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ ஆகிய பகுதிகள் பல தசாப்தங்களாக வளர்ச்சியை நோக்கி கனவு கண்டு வந்தன. முன்பு அந்தக் கனவுகளைக் கண்ட தலைமுறைகள் மறைந்துவிட்டன. ஆனால், இன்று தற்போதைய தலைமுறை தங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டி கண்ட கனவுகள் தங்கள் கண் முன்னே நனவாவதை நேரில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றும் கூட, போகுவரத்து இணைப்பு வசதி, சுகாதாரம், கல்வி, சுற்றுலா மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பு தொடர்பான பல திட்டங்கள் தொடங்கிவைக்கப்பட்டுள்ளன; சிலவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. இந்த வளர்ச்சிப் பணிகள் டாமன் மற்றும் ஒட்டுமொத்த யூனியன் பிரதேச மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும். இவை இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். இந்தப் பணிகளுக்குப் பின்னால் பிரஃபுல் படேலின் தொலைநோக்குப் பார்வையும், அவரும் அவரது குழுவினரும் செய்த கடின உழைப்பும் தெளிவாகத் தெரிகிறது. இதற்காக, பிரஃபுல் மற்றும் அவரது ஒட்டுமொத்த குழுவினரையும் நான் பாராட்டுகிறேன். லட்சத்தீவு மற்றும் தாதர்-நகர் ஹவேலி மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

இன்று நான் உங்களிடையே வந்திருக்கும் வேளையில், ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. இன்று காலை நான் தில்லியிலிருந்து புறப்பட்ட போதே, தற்போது வந்துள்ள புள்ளிவிவரங்களும், செய்திகளும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றன. அந்த மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இன்று வெளியாகியுள்ள புள்ளிவிவரங்கள், இந்தியாவின் பொருளாதார அடித்தளம் எவ்வளவு வலிமையாக உள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. 2025-26-ம் ஆண்டில், அதாவது இப்போது நிறைவடைந்த நிதி ஆண்டில், இந்தியா 7.7 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது. மேலும், மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த கடைசி காலாண்டில், இந்தியாவின் வளர்ச்சி 7.8 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும்  மிகப்பெரிய பொருளாதாரம் இதுவாகும். ஒவ்வொரு இந்தியரும் இதைப் பார்த்துப் பெருமிதம் கொள்ள வேண்டும்; இதுதான் நாட்டின் வேகம். இன்று நாடு 'சீர்திருத்த விரைவு ரயிலில்' பயணித்துக் கொண்டிருக்கிறது. இன்று நாடு மிகப்பெரிய உள்கட்டமைப்பு மேம்பாட்டைக் கண்டு வருகிறது; ஏழைகளின் நலனுக்காகப் பெரும் அளவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த அனைத்து முயற்சிகளின் விளைவாகவே, இன்று நாடு மிக வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக முன்னேறி வருகிறது. உலகம் முழுவதும் நெருக்கடிகளில் சிக்கியுள்ளதையும், ஒட்டுமொத்த உலகின் பொருளாதாரங்களும் கேள்விக்குறியாகியுள்ளதையும் நாம் அனைவரும் அறிவோம். ஆனால், இத்தகைய மோசமான உலகளாவிய நெருக்கடிக் காலத்திலும், 140 கோடி நாட்டு மக்களின் கூட்டு முயற்சியால், இந்தியா தன்னைத் தற்காத்துக் கொள்வது மட்டுமின்றி, தொடர்ந்து முன்னணியில் இருப்பதிலும் வெற்றி பெற்றுள்ளது. பொருளாதாரத் துறையில் இந்த புதிய உயரத்தை எட்டியதற்காக நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகம் முழுவதும் நிலவும் இந்த நெருக்கடிகளை எதிர்கொள்ளும் அதே வேளையில், 'சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம்' என்ற பாதையில், உறுதியான தீர்மானத்துடன் நாடு தொடர்ந்து வேகமான வளர்ச்சியைக் காணும் என்று மீண்டும் ஒருமுறை நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன். இது நாட்டு மக்களுக்கான எனது உத்தரவாதம்.

நண்பர்களே,

இன்று வளர்ச்சி என்பது நமக்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு நமது வளர்ச்சி மாதிரி நிலையானதாக இருப்பதையும் உறுதி செய்வது அவசியமாகும். இன்று, உலக சுற்றுச்சூழல் தினமான இந்நாளில், நமது யூனியன் பிரதேசம் இந்த உறுதிமொழியைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இன்று ஒருபுறம், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கிவைக்கப்பட்டுள்ளன; மறுபுறம், 'அன்னையின் பெயரில் ஒரு மரக்கன்றுஎன்ற முன்னெடுப்பின் கீழ், ஒரு லட்சம் மரக்கன்றுகளும் இங்கே நடப்படுகின்றன. அரசு அலுவலகக் கட்டடங்களில் 100 சதவீதம் சூரிய ஆற்றலைப் பயன்படுத்தும் சாதனையை எட்டியுள்ள யூனியன் பிரதேசம்  என்பதை எண்ணி நான் பெருமிதம் கொள்கிறேன். இன்று டையூவில், பகல் நேரத்தின் மொத்த மின்சாரத் தேவையும் சூரிய சக்தியின் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. இதை நாம் இன்னும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். வீடுகளிலும் சூரிய ஆற்றல் மூலம் மின்சாரம் கிடைக்க வேண்டும்; அதுமட்டுமின்றி, உபரி மின்சாரத்தின் மூலம் குடும்பங்கள் வருமானமும் ஈட்ட வேண்டும். இதற்காக, மேற்கூரை சூரிய மின்சக்தி நிறுவும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்தச் சாதனைகளுக்காக உங்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன்.

நண்பர்களே,

இதனுடன் சேர்த்து, டாமன் மக்கள் தற்போது தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதும் எனக்குத் தெரியவந்தது. தூய்மை என்பது டாமன் மக்களின் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக மாறியுள்ளதை இது காட்டுகிறது; இந்த தூய்மைப் பணிகள் அந்த கலாச்சாரத்தை வெளிப்படுத்துகின்றன. இத்தகைய மக்கள் பங்கேற்பு முயற்சிகளுக்காக டாமன் மக்களை நான் பாராட்டுகிறேன்.

நண்பர்களே,

தாதர் நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ ஆகியவை யூனியன் பிரதேசமாக இருப்பதுடன், இந்தியாவின் அடையாளமாகவும் பாரம்பரியமாகவும் திகழ்கின்றன. எனவே, இதன் வளர்ச்சிக்கான நமது இலக்குகள் சாதாரணமானவை அல்ல. கடந்த ஆண்டு நான் சில்வாசா வந்தபோது, சிங்கப்பூரின் உதாரணத்தை உங்களுக்குக் கூறியது எனக்கு நினைவிருக்கிறது. ஒரு காலத்தில் சிங்கப்பூர் ஒரு சிறிய மீன்பிடி கிராமமாக இருந்தது என்று நான் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், சிங்கப்பூர் மக்கள் கனவு கண்டார்கள், பெரிய இலக்குகளை நிர்ணயித்தார்கள்; இன்று அதே சிங்கப்பூர் உலகின் மிகப்பெரிய வணிக மையமாக மாறியுள்ளது. இன்று தாதர் மற்றும் நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ ஆகிய பகுதிகளும் அதேபோன்ற கனவைக் கண்டுகொண்டிருக்கின்றன. 'நமோ விமான நிலையம்', டாமன்கங்கை ஆற்றின் குறுக்கே கட்டப்படவுள்ள புகழ்பெற்ற பாலம், 'கடற்கரை ஓரத்தில்' கட்டப்படவுள்ள மாநாட்டு மையம் போன்ற திட்டங்கள் மூலம், எதிர்காலத்திற்கான பெரிய முயற்சிகளுக்கு நாம் அடித்தளம் அமைத்து வருகிறோம். இந்தத் திட்டங்களின் மூலம், உங்களின் போக்குவரத்து வசதி எளிதாகும். இங்கு வணிகத்திற்கான புதிய வாய்ப்புகள் உருவாகும். டாமனின் இருபுறங்களிலும் வளர்ச்சியின் வேகம் இன்னும் அதிகரிக்கும்.

நண்பர்களே,

இதனுடன், விருந்தோம்பல் பொருளாதாரம் சார்ந்த வாய்ப்புகள் இங்கு அதிகரிக்கும். அதோடு, போக்குவரத்து நகர் போன்ற வசதிகள் வணிகம் மற்றும் சரக்கு போக்குவரத்திற்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும்.

நண்பர்களே,

இந்த பிராந்தியத்தில் நீலப் பொருளாதாரம் குறித்து நாம் வகுத்துள்ள தொலைநோக்குத் திட்டம், அதிநவீன உள்கட்டமைப்பின் வலிமையால் மட்டுமே நனவாகும். அதனால்தான், இன்று லட்சத்தீவின் கல்பெனி மற்றும் கடமத் தீவுகளில் நவீனத் துறைமுகங்களுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. இந்த அனைத்து முயற்சிகளும் நீலப் பொருளாதாரத்தில் நாட்டின் வலிமையை அதிகரிக்கும். நான் ஏற்கனவே கூறியது போல, இவை லட்சத்தீவின் தலையெழுத்தையே மாற்றப்போகும் முன்னெடுப்புகளாகும்.

நண்பர்களே,

பாஜக அரசாங்கத்தில், நமது தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தில், வளர்ச்சிக்கான முதல் அளவுகோல் என்பது ஏழைகள், விளிம்புநிலை மக்கள், பழங்குடியினர் மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றமே ஆகும்! இதற்காக, சுகாதாரத் துறை எங்களது மிக முக்கிய முன்னுரிமையாக உள்ளது. கடந்த ஆண்டுகளில், சுகாதாரப் பராமரிப்பில் ஒட்டுமொத்தப் பார்வையுடன் நாடு முன்னேறியுள்ளது. சிகிச்சை தொடர்பான ஒவ்வொரு கவலையையும் நாங்கள் தீர்த்து வைத்துள்ளோம். இன்று ஏழை எளிய மக்களிடமும் ஆயுஷ்மான் அட்டை வசதி உள்ளது. அவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை பெறுவதற்கான உத்தரவாதம் கிடைத்துள்ளது. நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிவதை உறுதி செய்ய, பிரதமரின்  ஆயுஷ்மான் சுகாதார மையம்' உள்ளன. மலிவு விலை மருந்தகங்கள் மூலம் மலிவு விலையில் மருந்துகள் கிடைக்கின்றன. இந்த வசதிகளை இன்னும் மேம்படுத்தவும் நவீனமாக்கவும், இன்று ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம்' மூலம் சுகாதார சேவைகள் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டு வருகின்றன.

நண்பர்களே,

ஆயுஷ்மான் அட்டைகள் மற்றும் மலிவு விலை மருந்தகங்கள் மட்டுமே, ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சுமார் 2.25 லட்சம் கோடி ரூபாய் செலவாவதைத் தடுத்து சேமித்துள்ளனர்.

சகோதர, சகோதரிகளே,

மத்திய அரசாங்கத்தின் கொள்கைகள் இந்த பிராந்திய மக்களுக்கும் பெரும் நன்மைகளைச் செய்துள்ளன. ஒரு காலத்தில், இங்கே நல்ல சிகிச்சை வசதிகள் பற்றாக்குறையாக இருந்தது. ஒரு மருத்துவக் கல்லூரி கூட இங்கே இல்லை. ஆனால் இன்று ஒரு மருத்துவக் கல்லூரி உள்ளது, அதில் முதுகலை படிப்புகளும் தொடங்கப்பட்டுள்ளன. சில்வாசாவின் நமோ மருத்துவமனை கடந்த ஓராண்டாக ஆயிரக்கணக்கான மக்களுக்குச் சேவை செய்து வருகிறது. இன்று டாமனிலும் நமோ மருத்துவமனை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த பிராந்திய மக்கள் இப்போது இன்னும் மேம்பட்ட சுகாதார சேவைகளின் பலனைப் பெறுவார்கள்.

நண்பர்களே,

நமது அரசாங்கம் சுகாதாரத்திற்கு எவ்வாறு முன்னுரிமை அளிக்கிறது என்பது தேசிய குடும்ப நல ஆய்வின் முடிவுகளிலும் தெளிவாகிறது. ஒரு காலத்தில், இந்தியாவில் பெரும்பாலான பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறவில்லை. இன்று, நாட்டில் 90 சதவீதத்திற்கும் அதிகமான பிரசவங்கள் மருத்துவமனைகளிலேயே நடக்கின்றன; இது தாய்மார்களின் இறப்பு விகிதத்தையும், சிசு மரண விகிதத்தையும் பெருமளவு குறைத்துள்ளது. 'மிஷன் இந்திரதனுஷ்' காரணமாக, குழந்தைகளுக்கான தடுப்பூசி போடும் துறையிலும் இந்தியா நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. 2014-க்கு முன்பு, 60 சதவீத குழந்தைகளுக்கு மட்டுமே முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டிருந்தது. இன்று இந்த எண்ணிக்கை சுமார் 90 சதவீதமாக உயர்ந்துள்ளது. சுகாதாரப் பாதுகாப்புத் துறையிலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. 2014-க்கு முன்பு, 30 சதவீதத்திற்கும் குறைவான குடும்பங்களே சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்களுடன் இணைந்திருந்தன. இன்று ஆயுஷ்மான் பாரத் அந்த புள்ளிவிவரங்களையும் மாற்றியுள்ளது. இப்போது 60 சதவீதத்திற்கும் அதிகமான குடும்பங்கள் இந்த பாதுகாப்பைப் பெறுகின்றன.

நண்பர்களே,

சுகாதாரத் துறையில் அரசாங்கத்தின் இந்த முயற்சிகளால் யாராவது ஒருவர் மிக அதிகமாகப் பயனடைந்திருந்தால், அது எனது நாட்டின் பெண் சக்திதான்.

நண்பர்களே,

முன்பெல்லாம் இந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் உயர்கல்விக்காக வெளியூர்களுக்குச் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் இன்று, ஒன்று அல்ல, பல தேசிய அளவிலான கல்வி நிறுவனங்கள் இங்கே நிறுவப்பட்டுள்ளன. சமீபத்திய ஆண்டுகளில், இங்கே புதிய பள்ளிக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன; பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இவற்றின் மூலம் பயனடைந்து வருகின்றனர். இந்த யூனியன் பிரதேசம் கல்வித் துறையில் படிப்படியாக முன்னேறி வருவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். சுவாமி விவேகானந்தர் கல்வி மையம் போன்ற பல கட்டுமானப் பணிகள் இங்கே நடைபெற்று வருகின்றன.

சகோதர, சகோதரிகளே,

இந்தக் கல்விப் புரட்சியில் நமது மகள்கள் பின்தங்கி விடக்கூடாது என்பதும் எங்களது உறுதிப்பாடு. இதற்காகப் பல பெரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சரஸ்வதி சைக்கிள் திட்டம் மற்றும் சரஸ்வதி கல்வித் திட்டம் போன்ற திட்டங்கள், இங்கிருக்கும் மகள்களுக்குப் பெரும் உதவியாக உள்ளன.

இன்று, நாட்டின் இளைஞர்களுக்குப் பட்டப் படிப்புகளுடன் சரியான திசையையும் காட்ட இந்தியா முயன்று வருகிறது. உள்ளூர் திறமைகளை உலகளாவிய வாய்ப்புகளுடன் இணைக்கும் அனுபவத்தை அவர்களுக்கு நாம் வழங்க வேண்டும். வடிவமைப்பு, சட்டம், பொறியியல், மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், ட்ரோன் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில், நமது தற்போதைய தயாரிப்புகள் இந்தியாவின் தொழிலாளர் சக்தியை வலிமைப்படுத்தும். எனவே, தொழில்முறை கல்வி நிறுவனங்களை விரிவுபடுத்துவது மிகவும் முக்கியமானது.

நண்பர்களே,

இன்று நிஃப்ட்  நிறுவனத்தின் பதினெட்டாவது வளாகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த நிறுவனம், இங்கிருக்கும் இளைஞர்களை உலகளாவிய அனுபவங்களுடன் இணைக்கும். டாமன் ஐடிஐ-யில் ட்ரோன் தொழில்நுட்பவியலாளர் போன்ற புதிய படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. பிரதமர் விஸ்வகர்மா திட்டம் மற்றும் விடுகளுக்கான  பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம் தொடர்பான பயிற்சித் திட்டங்களும் இளைஞர்களுக்குப் பயனளிக்கின்றன.

நண்பர்களே,

நாட்டில் விளையாட்டுகளும் புதிய சிந்தனையுடன் முன்னேற்றமடைந்துள்ளன. நமது விளையாட்டுகள் இனி பெரிய நகரங்களுக்கு அல்லது பெரிய மைதானங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை. 'கேலோ இந்தியா' போன்ற முயற்சிகள் இளைஞர்களுக்குத் தங்கள் திறமையை வெளிப்படுத்த ஒரு புதிய தளத்தை வழங்கியுள்ளன. இதன் காரணமாக, சிறிய பிராந்தியங்களைச் சேர்ந்த குழந்தைகள் விளையாட்டுத் துறையில் தேசிய அளவில் முன்னேறி வருகின்றனர்; இந்த பிராந்தியமும் இதனால் பயனடைந்துள்ளது. டையூ இன்று கடற்கரை விளையாட்டுகளின் ஒரு பெரிய மையமாக உருவெடுத்துள்ளது. கோக்லா கடற்கரையில் நடைபெற்ற கடற்கரை விளையாட்டுப் போட்டிகள், நாட்டின் கவனத்தை இந்த பிராந்தியத்தின் பக்கம் திருப்பியுள்ளன. இன்று நவீன விளையாட்டு உள்கட்டமைப்பு இங்கே தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. கான்வெலில் உள்ள கால்பந்து மையம் மற்றும் டாமனில் உள்ள கைப்பந்து பயிற்சி மையம் ஆகியவை இங்கிருக்கும் விளையாட்டு கலாச்சாரத்தை வலுப்படுத்தி வருகின்றன.

நண்பர்களே,

இன்று நாட்டின் பெரும் கவனம் சுற்றுலாத் துறையின் மீதும் உள்ளது. உள்ளூர் கலை மற்றும் கலாச்சாரத்தை சுற்றுலா மேம்படுத்த வேண்டும் என்பதே நமது முயற்சி. சிறிய இடங்களும் பெரிய வாய்ப்புகளுடன் இணைக்கப்பட வேண்டும். உங்கள் தேசத்தைப் சுற்றிப்பாருங்கள் போன்ற முன்முயற்சிகள், நாட்டின் பன்முகத்தன்மையை அறிய மக்களைத் தூண்டியுள்ளன. இன்று இந்தியாவில் பாரம்பரிய சுற்றுலா, கடற்கரை சுற்றுலா, சூழல் சுற்றுலா மற்றும் சாகச சுற்றுலா ஆகியவை புதிய ஆற்றலைப் பெற்று வருகின்றன.

நண்பர்களே,

தாதர் மற்றும் நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ ஆகிய பகுதிகளில், சுற்றுலா என்பது அளப்பரிய வாய்ப்புகளைக் கொண்ட ஒரு துறையாகும். இந்த பிராந்தியம் இயற்கையழகு கொழிக்கும் வரம் பெற்றது. அதனால்தான், சுற்றுலா தொடர்பாக நாடு மேற்கொண்ட கொள்கைகள் தாதர் மற்றும் நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூவிற்குப் பெரும் நன்மைகளைச் செய்துள்ளன. 2021-ல் சுமார் 6 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்தனர். 2025-ல் இந்த எண்ணிக்கை சுமார் 50 லட்சமாக அதிகரித்துள்ளது. அதாவது, சில ஆண்டுகளில் சுற்றுலாப் பயணிகளின் வருகை ஏறக்குறைய பத்து மடங்காக உயர்ந்துள்ளது. சிறந்த உள்கட்டமைப்பு, மேம்பட்ட வசதிகள் மற்றும் தூய்மையான கடற்கரைகள் ஆகியவற்றால் இது சாத்தியமானது. டாமன் இரவுச் சந்தை, ராமர்பால கடற்கரைநமோபத் கடற்கரை, நானி டாமன் கோட்டை, கங்கேஷ்வர் கோயில் வளாகம் என இத்தகைய எண்ணற்ற இடங்கள் இன்று இந்த ஒட்டுமொத்த பிராந்தியத்தின் புதிய அடையாளங்களாக மாறி வருகின்றன.

நண்பர்களே,

தாதர் மற்றும் நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ ஆகிய யூனியன் பிரதேசத்தின் கனவுகளை நனவாக்க, நாம் இங்குள்ள தொழில்துறை வலிமையையும் அதிகரிக்க வேண்டும். இந்த யூனியன் பிரதேசம் செயற்கை நூலிழை துறையில் தனது தனித்துவமான அடையாளத்தைப் பதித்திருப்பது பெருமைக்குரிய விஷயமாகும். தாதர் மற்றும் நகர் ஹவேலி, 'தேசிய செயற்கை நூலிழை தலைநகரம்' என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிராந்தியம் பிளாஸ்டிக் ஏற்றுமதியிலும் தொடர்ந்து முன்னேறி வருகிறது. இங்கிருக்கும் தொழில்துறைகள் மற்றும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க அரசாங்கம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இங்குள்ள எம்.எஸ்.எம்.இ மற்றும் பிற தொழில்துறைகளுக்கு பல கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசத்தின் சிறு மற்றும் குடிசைத் தொழில்களுக்குப் புதிய வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. வரும் காலங்களில் இந்தப் பிராந்தியம் உற்பத்தித் துறையின் மிகப்பெரிய மையமாக மாறும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

நண்பர்களே,

உணர்திறன் மிக்க நிர்வாகத்துடன் வளர்ச்சியின் தொலைநோக்குப் பார்வை இணையும்போது, களத்தில் மாற்றங்கள் மிக விரைவாக வடிவம் பெறுகின்றன. தாதர் மற்றும் நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூவில் நமது முயற்சிகளின் தாக்கத்தைக் காண்பது மிகுந்த மனநிறைவைத் தருகிறது. இந்த மண்ணின் மக்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இங்கிருக்கும் இளைஞர்கள், தாய்மார்கள் மற்றும் சகோதரிகள், விவசாயிகள், கைவினைஞர்கள், தொழிலாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் ஆகியோர், வரும் ஆண்டுகளில் இந்த வளர்ச்சிப் பயணத்தை மேலும் முன்னெடுத்துச் செல்வார்கள். உங்கள் கனவுகளை நனவாக்க மத்திய அரசு உங்களுடன் தோளோடு தோள் நின்று துணை நிற்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இந்த நம்பிக்கையுடன், வளர்ச்சித் திட்டங்களுக்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடன் சேர்ந்து சொல்லுங்கள்,

பாரத மாதாவுக்கு ஜே!

பாரத மாதாவுக்கு ஜே!

பாரத மாதாவுக்கு ஜே!

 

மிக்க நன்றி.

பொறுப்புத்துறப்பு: இது பிரதமரின் உரையின் தோராயமான தமிழாக்கமாகும். உரையின் மூல வடிவம் இந்தியில் நிகழ்த்தப்பட்டது.

 

(Release ID: 2269601)

***

AD/VK/KR


(रिलीज़ आईडी: 2282369) आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , हिन्दी , Assamese , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam