பிரதமர் அலுவலகம்
அசாம் மாநிலம் சில்சாரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
प्रविष्टि तिथि:
14 MAR 2026 2:06PM by PIB Chennai
பாரத் மாதாவுக்கு ஜே!
பாரத் மாதாவுக்கு ஜே!
பாரத் மாதாவுக்கு ஜே!
பாரக் பள்ளத்தாக்கின் அன்பிற்குரிய மக்களே, உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது மரியாதைக்குரிய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாநிலத்தின் மக்கள் செல்வாக்கு மிக்க முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது சகாவான சர்பானந்த சோனோவால் அவர்களே, இங்கே வருகை தந்துள்ள மாநில அரசு அமைச்சர்களே, மக்கள் பிரதிநிதிகளே மற்றும் எனது அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே!
பண்பாடு, துணிச்சல் மற்றும் துடிப்பு நிறைந்த பாரக் பள்ளத்தாக்கு குடும்பங்களுக்கு இடையே வருவது எப்போதும் ஒரு தனிச்சிறப்பான அனுபவமாகும். சில்சார் நகரம் 'பாரக் பள்ளத்தாக்கின் நுழைவாயில்' என்று அழைக்கப்படுகிறது. வரலாறு, மொழி, கலாச்சாரம் மற்றும் தொழில்முனைவு ஆகியவை இணைந்து ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியுள்ள இடம் இது. இங்கே வங்காள மொழி பேசப்படுகிறது, அஸ்ஸாமிய மொழியின் எதிரொலி கேட்கிறது, மேலும் பிற பழங்குடியின பாரம்பரியங்களும் இங்கே செழித்து வளர்கின்றன. இந்த பன்முகத்தன்மையையே வலிமையாக மாற்றி, நீங்கள் அனைவரும் சகோதரத்துவத்துடனும் நல்லிணக்கத்துடனும் இந்தப் பிராந்தியம் முழுவதையும் மேம்படுத்தி வருகிறீர்கள். இதுவே பாரக் பள்ளத்தாக்கின் மிகப்பெரிய ஆற்றலாகும்.
நண்பர்களே,
பாரக் நதியின் வளமான சமவெளிகள், இங்குள்ள தேயிலைத் தோட்டங்கள், விவசாயிகள், வர்த்தகப் பாதைகள் மற்றும் கல்வி மையங்கள் எப்போதும் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பிராந்தியம் அஸ்ஸாமை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களையும் மேற்கு வங்கத்தையும் இணைக்கிறது. 21-ம் நூற்றாண்டில் பாரக் பள்ளத்தாக்கின் முக்கியத்துவத்தை மேலும் வலுப்படுத்த, உங்கள் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக இன்று நான் உங்கள் முன்னே வந்துள்ளேன்.
சற்று நேரத்திற்கு முன்புதான், பாரக் பள்ளத்தாக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் இணைப்பை மேம்படுத்தும் வகையில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன மற்றும் அடிக்கல் நாட்டப்பட்டன. சாலைகளாக இருக்கட்டும், இரயில்வேயாக இருக்கட்டும் அல்லது விவசாயக் கல்லூரிகளாக இருக்கட்டும், இந்தத் திட்டங்கள் அனைத்தும் பாரக் பள்ளத்தாக்கை வடகிழக்கு இந்தியாவின் ஒரு முக்கிய தளவாட மற்றும் வர்த்தக மையமாக மாற்றிக் கொண்டிருக்கின்றன. இது இங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் செய்வதற்கு எண்ணற்ற வாய்ப்புகளை உருவாக்கும். இந்த வளர்ச்சித் திட்டங்களுக்காக உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுதந்திரத்திற்குப் பிந்தைய பல தசாப்தங்களாக, காங்கிரஸ் அரசாங்கங்கள் வடகிழக்கு மாநிலங்களை டெல்லியிலிருந்தும், தங்கள் இதயங்களிலிருந்தும் தூரத்திலேயே வைத்திருந்தன. காங்கிரஸ் வடகிழக்குப் பகுதியை கிட்டத்தட்ட மறந்தே போனது. ஆனால், பாரதிய ஜனதா கட்சியின் இரட்டை எஞ்சின் அரசாங்கம் வடகிழக்கை இணைத்துள்ள விதம், இன்று அது எங்கும் பேசப்படும் பொருளாக மாறியுள்ளது. இன்று, வடகிழக்கு இந்தியா 'கிழக்கு நோக்கிய செயல்பாடு' கொள்கையின் மையப்புள்ளியாகவும், இந்தியாவைத் தென்கிழக்கு ஆசியாவுடன் இணைக்கும் பாலமாகவும் உருவெடுத்துள்ளது.
ஆனால் நண்பர்களே,
காங்கிரஸ் எப்படி வடகிழக்கு மாநிலங்களை அதன் விதிப்படி விட்டுவிட்டதோ, அதேபோல் பாரக் பள்ளத்தாக்கைத் துயரத்தில் ஆழ்த்துவதிலும் காங்கிரஸ் முக்கியப் பங்கு வகித்தது. நாடு சுதந்திரம் அடைந்தபோது, பாரக் பள்ளத்தாக்கின் கடல் வழிப் போக்குவரத்தைத் துண்டிக்கும் வகையில் எல்லைகள் வரையப்படுவதற்குக் காங்கிரஸ் அனுமதித்தது. ஒரு காலத்தில் வர்த்தகப் பாதையாகவும், தொழில் மையமாகவும் அறியப்பட்ட பாரக் பள்ளத்தாக்கு, அதன் வலிமையிலிருந்து பிரிக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகும் காங்கிரஸ் அரசாங்கங்கள் பல தசாப்தங்களாக ஆட்சி செய்தன, ஆனால் பாரக் பள்ளத்தாக்கின் வளர்ச்சிக்காகக் குறிப்பிடத்தக்க எதையும் செய்யவில்லை.
நண்பர்களே,
பாஜக-வின் இரட்டை எஞ்சின் அரசாங்கம் இந்த நிலையை மாற்றிக் கொண்டிருக்கிறது. பாரக் பள்ளத்தாக்கை மீண்டும் ஒருமுறை வர்த்தகம் மற்றும் வணிகத்தின் முக்கிய மையமாக மாற்ற நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். இன்று, இந்தத் திசையில் ஒரு மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான அடி எடுத்து வைக்கப்பட்டுள்ளது. இன்று, சுமார் 24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஷில்லாங் - சில்சார் அதிவேக வழித்தடத்திற்கான பூமி பூஜை நடத்தப்பட்டுள்ளது. 24 ஆயிரம் கோடி ரூபாய் - எவ்வளவு? எவ்வளவு? 24 ஆயிரம் கோடி ரூபாய். எவ்வளவு? எவ்வளவு? எவ்வளவு?
காங்கிரஸ் ஆட்களிடம் ஒரு காகிதத்தையும் பேனாவையும் கொடுத்து, அந்தப் பேப்பரில் 24 ஆயிரம் கோடி என்று எழுதச் சொல்லுங்கள், அதில் எத்தனை பூஜ்யங்கள் போட வேண்டும் என்று கூட அவர்களுக்குத் தெரியாது. காங்கிரஸாரின் சிந்தனைப் பூட்டுகள் எங்கே சிக்கிக்கொள்கிறதோ, அங்கிருந்துதான் எங்களது பணி தொடங்குகிறது. இது வடகிழக்கு இந்தியாவின் முதல் 'அணுகல் கட்டுப்படுத்தப்பட்ட' அதிவேக வழித்தடமாக அமையும்.
நண்பர்களே,
இது வெறும் நெடுஞ்சாலைத் திட்டம் மட்டுமல்ல, வடகிழக்கு மக்களின் பல தசாப்த கால காத்திருப்பின் முடிவாகும். இந்த வழித்தடத்தின் மூலம் சில்சார், மிசோரம், மணிப்பூர் மற்றும் திரிபுரா ஆகிய அனைத்தும் இணைக்கப்படும். இந்த மாநிலங்களுக்கு அப்பால் வங்கதேசம் மற்றும் மியான்மர் உள்ளன, அதற்கடுத்து தென்கிழக்கு ஆசியாவின் பரந்த சந்தை உள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பாரக் பள்ளத்தாக்கு இன்று ஒரு மிகச் சிறந்த எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைத்துக் கொண்டிருக்கிறது. இது அஸ்ஸாம் மற்றும் ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களின் விவசாயிகளுக்கும், இங்குள்ள இளைஞர்களுக்கும் பயனளிக்கும். இத்தகைய சிறந்த போக்குவரத்து இணைப்பின் மூலம், இந்தப் பிராந்தியம் முழுவதிலும் தொழில்துறை வலுப்படும், சுற்றுலாத்துறை பயனடையும், எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியாவின் ஒவ்வொரு மூலையும் உங்களுடன் எளிதாக இணைக்கப்படும்.
நண்பர்களே,
சில்சாரில் நிலவும் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைகளால் நீங்கள் நீண்ட காலமாகத் துயரப்பட்டு வருகிறீர்கள். இப்போது, சில்சார் மேம்பாலத்தின் மூலம் இந்தப் பிரச்சினையும் குறையும். சில்சார் மருத்துவக் கல்லூரி, சில்சார் என்.ஐ.டி மற்றும் அஸ்ஸாம் பல்கலைக்கழகத்தில் பயிலும் இளம் மாணவர்களுக்கு இது ஒரு சிறந்த வசதியாகும். இது அவர்கள் பயணத்திற்காகச் செலவிடும் பொன்னான நேரத்தைச் சேமிக்கும்.
நண்பர்களே,
அஸ்ஸாமின் இரயில்வே இணைப்பை மேம்படுத்தவும் பாஜக-வின் இரட்டை எஞ்சின் அரசாங்கம் விரிவாகப் பணியாற்றி வருகிறது. குறிப்பாக, இரயில்வே மின்மயமாக்கல் எங்களது முக்கிய முன்னுரிமையாக இருந்து வருகிறது. தற்போது, அஸ்ஸாமின் 2,500 கிலோமீட்டருக்கும் அதிகமான இரயில்வே கட்டமைப்பு மின்மயமாக்கப்பட்டுள்ளது. இனி இங்கு அதிவேக இரயில்கள் இயங்கும், மேலும் இது பாரக் பள்ளத்தாக்கின் தூய்மையான சுற்றுச்சூழலுக்கும் பயனளிக்கும்.
நண்பர்களே,
பாரக் பள்ளத்தாக்கின் விவசாயிகளும், இங்குள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும் அஸ்ஸாமின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளனர். விவசாயிகளின் நலனுக்காக இரட்டை எஞ்சின் அரசாங்கம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நேற்றுதான் குவஹாத்தியிலிருந்து, பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதி' திட்டத்தின் அடுத்த தவணையை நான் விடுவித்தேன். இதுவரை, நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பிரதமரின் விவசாயிகளுக்கான வருவாய் ஆதரவு நிதியின் கீழ் லட்சக்கணக்கான கோடி ரூபாயைப் பெற்றுள்ளனர்; அஸ்ஸாம் மாநில விவசாயிகள் மட்டுமே 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் பெற்றுள்ளனர். சற்று சிந்தித்துப் பாருங்கள், கடந்த 10 ஆண்டுகளில் இங்குள்ள விவசாயிகளின் பைகளில் 20 ஆயிரம் கோடி ரூபாயை நாங்கள் சேர்த்துள்ளோம்.
காங்கிரஸ் 10 ஆண்டுகள் ஆட்சி செய்தது, பிரதமர் கூட அஸ்ஸாமிலிருந்து தான் தேர்ந்தெடுக்கப்பட்டார், இருந்தபோதிலும் விவசாயிகளுக்கு ஒரு பைசா கூட வழங்கப்படவில்லை. ஒரு பைசா கூட இல்லை! நாங்கள் 20 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கியுள்ளோம். நேற்று பாரக் பள்ளத்தாக்கின் ஆயிரக்கணக்கான விவசாயிகளும் தங்களது கணக்குகளில் இந்தச் சமீபத்திய தவணையைப் பெற்றுள்ளனர். தேர்தலுக்குப் பிறகு காலம் வரும்போதும், அவர்கள் இதைத் தொடர்ந்து பெறுவார்கள். இந்தத் தொகை, கிராமங்களில் உள்ள சிறு விவசாயிகள் தங்களது சிறிய விவசாயத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பெரிய அளவில் உதவி வருகிறது.
நண்பர்களே,
பாரக் பள்ளத்தாக்கு இனி அதன் பயிர்களுக்காக மட்டுமல்லாமல், விவசாயம் சார்ந்த கல்வி மற்றும் ஆராய்ச்சிக்காகவும் அறியப்படும். பாரக் பள்ளத்தாக்கின் முதல் விவசாயக் கல்லூரி பத்தர்கண்டியில் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் இன்று தொடங்குகின்றன. இது விவசாயிகளுக்குப் பயனளிப்பதோடு, இங்குள்ள இளைஞர்கள் விவசாயம் சார்ந்த புத்தொழில் நிறுவனங்களைத் தொடங்குவதற்குத் தேவையான ஆதரவையும், ஊக்கத்தையும், வாய்ப்புகளையும் வழங்கும்.
நண்பர்களே,
வளர்ச்சிப் போட்டியில் பின்தங்கியிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதே பாஜக-வின் கொள்கையாகும். காங்கிரஸ் அரசாங்கங்கள் எல்லைப் பகுதிகளை நாட்டின் 'கடைசி கிராமங்களாகக்' கருதின. நாங்களோ எல்லைக் கிராமங்களை நாட்டின் 'முதல் கிராமங்களாகக்' கருதுகிறோம். அதனால்தான், 'துடிப்பான கிராமங்கள் திட்டத்தின்' அடுத்த கட்டம் கச்சார் மாவட்டத்திலிருந்தே தொடங்கப்பட்டது. இதன் மூலம் பாரக் பள்ளத்தாக்கின் பல கிராமங்கள் முன்னேற்றம் காண்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நண்பர்களே,
இங்கே தேயிலைத் தோட்டங்களில் ஏராளமான தோழர்கள் பணியாற்றுகிறார்கள். தேயிலைத் தோட்டங்களுடன் தொடர்புடைய ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு நில உரிமைகளை வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்கப் பணியை அஸ்ஸாம் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இது அந்தக் குடும்பங்களின் எதிர்காலத்தையே மாற்றியமைக்கும் ஒரு மிகப்பெரிய தொடக்கமாகும். நிலப் பட்டங்களைப் பெறுவதன் மூலம், இந்தக் குடும்பங்கள் பாதுகாப்பைப் பெற்றுள்ளன மற்றும் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்துள்ளன.
நண்பர்களே,
தயவுசெய்து சற்று பின்னால் தள்ளி நில்லுங்கள், அங்கே இடமில்லை, உங்களால் இனி முன்னே வர முடியாது. தயவுசெய்து அவர்களைச் சற்றுத் தள்ளியே நிற்கச் சொல்லுங்கள், அவர்களால் இனி முன்னே வர இயலாது. அஸ்ஸாமைச் சேர்ந்த எனது சகோதர சகோதரிகள் மிகவும் புரிந்துணர்வு கொண்டவர்கள். உங்கள் அன்பு, உங்கள் ஆசீர்வாதம் ஆகியவை எனக்கு ஒரு மிகப்பெரிய பலம், உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நண்பர்களே,
கிட்டத்தட்ட 200 ஆண்டுகளாகத் தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றி வரும் தலைமுறையினரின் போராட்டங்களை கௌரவித்ததற்காக ஹேமந்த அவர்களின் அரசாங்கத்தை நான் பாராட்டுகிறேன். பாருங்கள், எனது வார்த்தைகளுக்குச் சாட்சியாக மேகங்கள் கூட இடிக்கத் தொடங்கிவிட்டன. முந்தைய அரசாங்கங்கள் யாரைத் தங்கள் விதிப்படி விட்டுவிட்டனவோ, அவர்களை இப்போது பாஜக அரசாங்கம் அரவணைத்து கவனித்துக் கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
நண்பர்களே,
இது நிலத்தின் மீதான சட்டப்பூர்வ உரிமைகள் சார்ந்த விஷயம் மட்டுமல்ல. இதன் மூலம், இந்த லட்சக்கணக்கான குடும்பங்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஏராளமான நலத்திட்டங்களுடன் மிக விரைவாக இணைய முடியும். அது வீட்டுவசதித் திட்டங்களாக இருக்கட்டும், மின்சாரம், தண்ணீர் அல்லது எரிவாயு திட்டங்களாக இருக்கட்டும், இனி இந்தக் குடும்பங்கள் அவற்றின் முழுப் பலனையும் பெற முடியும்.
நண்பர்களே,
சமீபத்திய ஆண்டுகளில், பாஜக அரசாங்கம் தேயிலைத் தோட்டங்களில் பல பள்ளிகளைத் திறந்துள்ளது, குழந்தைகளுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கியுள்ளது மற்றும் அரசு வேலைகளுக்கான பாதைகளை உருவாக்கியுள்ளது. இத்தகைய முயற்சிகள் தேயிலைத் தோட்ட இளைஞர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கான கதவுகளைத் திறந்து வருகின்றன.
நண்பர்களே,
பாஜக-வின் இரட்டை எஞ்சின் அரசாங்கத்திற்கு கல்வி, திறன் மேம்பாடு மற்றும் சுகாதார வசதிகள் ஆகியவை முக்கிய முன்னுரிமைகளாக இருந்து வருகின்றன. கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் காங்கிரஸின் அலட்சியத்தால் அஸ்ஸாம் நீண்ட காலமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. இன்று, அஸ்ஸாம் கல்வி மற்றும் சுகாதாரத்தின் முக்கிய மையமாக உருவெடுத்து வருகிறது. பாரக் பள்ளத்தாக்கு இதனால் பெரும் பயனடைந்துள்ளது. கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பான ஏராளமான முக்கிய நிறுவனங்கள் இப்போது இங்கே நிறுவப்பட்டுள்ளன.
நண்பர்களே,
காங்கிரஸ் அஸ்ஸாம் இளைஞர்களை வன்முறை மற்றும் பயங்கரவாதத்தின் நச்சுச் சுழற்சியில் மட்டுமே சிக்க வைத்திருந்தது. அஸ்ஸாமை 'பிரித்தாளும் சூழ்ச்சி' கொள்கைகளின் ஆய்வகமாக காங்கிரஸ் மாற்றியது. இன்று, அஸ்ஸாம் இளைஞர்களுக்கு முன்னால் ஏராளமான வாய்ப்புகள் விரிந்து கிடக்கின்றன. இந்தியாவின் செமிகண்டக்டர் துறையில் அஸ்ஸாம் ஒரு முக்கிய அங்கமாக மாறி வருகிறது. அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய ஒரு சுற்றுச்சூழல் மற்றும் திறமையானவர்கள் குழு இங்கே உருவாக்கப்பட்டு வருகிறது. ஐஐடி மற்றும் ஐஐஎம் போன்ற நிறுவனங்கள் இங்கே நிறுவப்படுகின்றன. மருத்துவக் கல்லூரிகள், எய்ம்ஸ் மற்றும் புற்றுநோய் மருத்துவமனைகளின் வலுவான கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. அமைதி மற்றும் முன்னேற்றத்தின் இந்த புதிய யுகம் பல தியாகங்கள் மற்றும் முயற்சிகளுக்குப் பிறகு வந்துள்ளது. இனி, அஸ்ஸாமை மீண்டும் பழைய காலத்திற்குத் தள்ள முயற்சிக்கும் ஒவ்வொரு சக்தியும் உறுதியுடன் முறியடிக்கப்பட வேண்டும்.
நண்பர்களே,
இன்று சில்சாரிலிருந்து நான் அஸ்ஸாம் மக்களை எச்சரிக்கவும் விரும்புகிறேன். நீங்கள் அஸ்ஸாமிலிருந்து காங்கிரஸை அகற்றிவிட்டீர்கள். இன்று நாட்டின் ஒவ்வொரு மாநிலமும் காங்கிரஸிற்குப் பாடம் புகட்டி வருகின்றது. காங்கிரஸ் அடுத்தடுத்துத் தேர்தல்களில் தோல்வியடைந்து வருகிறது. சமீப காலத்திலேயே, காங்கிரஸ் தனது வரலாற்றில் நூறாவது தோல்வியைப் பூர்த்தி செய்யப் போகிறது. தொடர் தோல்விகளால் ஏற்பட்ட விரக்தியில், காங்கிரஸ் நாட்டிற்கு எதிராகவே ஒரு முன்னணியைத் தொடங்கியுள்ளது. நாட்டின் பிம்பத்தைக் கெடுப்பதில் காங்கிரஸ் தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
டெல்லியில் இவ்வளவு பெரிய ஏஐ உச்சி மாநாடு நடைபெற்றதை நீங்கள் பார்த்தீர்கள். இன்று உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு மீது மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள நிலையில், உலகளவில் புதிய நம்பிக்கையை உருவாக்கிய அந்த உச்சி மாநாட்டை டெல்லி வெற்றிகரமாக நடத்தியது. உலகம் முழுவதிலுமிருந்து தலைவர்கள், முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் டெல்லிக்கு வந்திருந்தனர். இந்த உச்சி மாநாட்டை அவதூறு செய்வதற்காக, காங்கிரஸ் 'கிழிந்த ஆடை' போராட்டத்தை நடத்தியது. இப்போது காங்கிரஸிடம் தங்கள் சொந்த ஆடைகளைக் கிழித்துக் கொள்வதைத் தவிர வேறு எதுவும் மிஞ்சவில்லை. இந்த அநாகரீகமான மற்றும் அவமானகரமான போராட்டத்தை நாடே விமர்சித்தது. ஆனால் டெல்லியில் உள்ள காங்கிரஸின் 'ராஜ குடும்பம்' இந்த அவதூறை ஒரு பதக்கமாகக் கருதுகிறது; தேசத்தைக் கொச்சைப்படுத்துபவர்களைப் பாராட்டுகிறது. நாட்டிற்கு எதிராக நிற்கும் இத்தகைய காங்கிரஸால் எந்த மாநிலத்திற்கும் நல்லது செய்ய முடியாது, அஸ்ஸாம் இளைஞர்களின் நலனைப் பற்றியும் அவர்களால் ஒருபோதும் சிந்திக்க முடியாது.
நண்பர்களே,
இப்போது உலகம் முழுவதும், ஏன் நமது அண்டை நாடுகளிலும் கூடப் போர்ச் சூழல் நிலவுகிறது. போரின் கொடூரங்களை நீங்கள் நன்கு அறிவீர்கள், தினமும் அவற்றைப் பார்க்கிறீர்கள். போரினால் உருவாகும் சூழ்நிலைகள் - நமது குடிமக்கள் முடிந்தவரை குறைந்த அளவே சிரமங்களைச் சந்திப்பதை உறுதி செய்ய நமது அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. போரின் தாக்கம் நமது மக்கள் மீது மிகக் குறைவாக இருப்பதே எங்களது முயற்சி. இச்சமயத்தில், காங்கிரஸ் ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சியாகச் செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் மீண்டும் ஒருமுறை தேசிய நலன் சார்ந்த இந்த முக்கியமான பணியில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. நாட்டில் பீதியை உருவாக்கவும், தேசத்தைச் சிக்கல்களில் மாட்ட வைக்கவும், பின்னர் மோடியைத் திட்டவும் காங்கிரஸ் தன்னால் இயன்றவரை முயற்சி செய்கிறது.
நண்பர்களே,
காங்கிரஸிடம் அஸ்ஸாமிற்கான தொலைநோக்குப் பார்வையும் இல்லை, நாட்டிற்கான பார்வையும் இல்லை. எனவே, அவர்கள் வதந்திகள், பொய்கள் மற்றும் ஏமாற்று வேலைகளைத் தங்கள் ஆயுதமாக மாற்றிக்கொண்டுள்ளனர்; ஏதோ ஒரு 'போலி வீடியோ' தொழிற்சாலையையே அவர்கள் திறந்துவிட்டது போல் உள்ளது. இந்தியாவின் வேகமான வளர்ச்சியைச் செரித்துக் கொள்ள முடியாத உலக சக்திகள், நாட்டின் முன்னேற்றத்தில் அதிருப்தி கொண்டுள்ள வெளிநாட்டுச் சக்திகள் - துரதிர்ஷ்டவசமாக காங்கிரஸ் அவர்களின் கைப்பாவையாக மாறி வருகிறது. அதனால்தான் அஸ்ஸாமின் ஒவ்வொரு குடிமகனும், ஒவ்வொரு இளைஞனும் காங்கிரஸிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நண்பர்களே,
அஸ்ஸாம், பாரக் பள்ளத்தாக்கு ஆகிய இரண்டுமே இப்போது வளர்ச்சியின் பாதையில் முன்னேறி வருகின்றன. பாரக் பள்ளத்தாக்கு அதன் மொழி, இலக்கியம் மற்றும் கலாச்சாரத்திற்காக அறியப்படுகிறது. பாரக் பள்ளத்தாக்கு வளர்ச்சியின் புதிய மையமாக அங்கீகரிக்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.
நண்பர்களே,
எங்களை ஆசீர்வதிப்பதற்காக நீங்கள் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் திரண்டு வந்துள்ளீர்கள். அரசியல் தலையெழுத்தைத் தீர்மானிப்பவர்கள், வாய்ப்புகளைத் தேடுபவர்கள் - அவர்களுக்கு இன்று பாரக் பள்ளத்தாக்கின் இந்தத் தோற்றமும், நாளை போடோ சமூகத்தின் எழுச்சியும், தேயிலைத் தோட்டத் தொழிலாளர் குழுக்களின் திரட்சியும் இந்தத் தேர்தலின் முடிவு என்னவாக இருக்கும் என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் வந்து ஆசீர்வாதம் வழங்கிய உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வளர்ச்சித் திட்டங்களுக்காக மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைக் கூறுகிறேன். என்னுடன் சேர்ந்து சொல்லுங்கள் -
பாரத் மாதாவுக்கு ஜே!
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
----
(Release ID: 2240110
AD/VK/KR
(रिलीज़ आईडी: 2282063)
आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada