பிரதமர் அலுவலகம்
"அனைவருடம் இணைவோம், அனைவரும் உயர்வோம்"- மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுதல்: பட்ஜெட்டுக்கு பிந்தைய கருத்தரங்கில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
प्रविष्टि तिथि:
09 MAR 2026 12:00PM by PIB Chennai
நண்பர்களே,
பட்ஜெட்டுக்கு பிந்தைய இந்தத் தொடர் கருத்தரங்குகளில், இன்று நான்காவது மற்றும் மிக முக்கியமான அமர்வு நடைபெறுகிறது. மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவது என்பது வெறும் விவாதப் பொருள் மட்டுமல்ல - அதுவே இந்த பட்ஜெட்டின் முக்கிய நோக்கம் மற்றும் இந்த அரசின் உறுதியான தீர்மானம் ஆகும். கல்வி, திறன் மேம்பாடு, சுகாதாரம், சுற்றுலா, விளையாட்டு மற்றும் கலாச்சாரம் ஆகியவையே இந்த விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான அடிப்படைத் துறைகளாகும். எனவே, இந்த கருத்தரங்கில் இந்த முக்கியமான பரிமாணங்கள் குறித்து நாம் ஆலோசித்து வருகிறோம். பட்ஜெட் அறிவிப்புகளைச் செயல்படுத்துவதற்கு, இங்கு வருகை தந்துள்ள நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள், அறிஞர்கள், தொழில்முனைவோர் மற்றும் எனது இளைய நண்பர்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் மிகவும் முக்கியமானவை. பட்ஜெட் கருத்தரங்கின் இந்த நான்காவது அமர்வில் உங்கள் அனைவரையும் நான் அன்புடன் வரவேற்கிறேன்.
நண்பர்களே,
இந்தியா இன்று தடுப்பு மற்றும் முழுமையான ஆரோக்கியத்திற்கான ஒரு பரந்த தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டு வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில், நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது; மாவட்டங்கள் தோறும் நூற்றுக்கணக்கான புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மற்றும் நல்வாழ்வு மையங்கள் மூலம், சுகாதாரச் சேவைகள் நாடு முழுவதும் உள்ள கிராமங்களுக்கு விரிவடைந்துள்ளன. நமது யோகா மற்றும் ஆயுர்வேதம் உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருகின்றன. இவற்றின் பல்வேறு அம்சங்களைப் பற்றி நீங்கள் நிச்சயமாக விவாதிப்பீர்கள், ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தை நான் இங்கே கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன் - அதுதான் 'பராமரிப்புப் பொருளாதாரம்' வரும் 10 ஆண்டுகளில், நாட்டில் முதியவர்களின் எண்ணிக்கை வேகமாக உயரும். மேலும், இன்றும் கூட உலகின் பல நாடுகளில் பராமரிப்பாளர்களுக்கான தேவை பெருமளவில் உள்ளது. எனவே, சுகாதாரத் துறையில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு திறன் சார்ந்த புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி வருகின்றன. இந்த கருத்தரங்கில் பங்கேற்றுள்ள சுகாதாரத் துறை நிபுணர்கள், புதிய பயிற்சி மாதிரிகள் மற்றும் கூட்டாண்மைகளை பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன், இதன் மூலம் நாட்டின் பயிற்சி சூழலை மேலும் வலுப்படுத்த முடியும்.
நண்பர்களே,
இதனுடன் நெருங்கிய தொடர்புடைய மற்றொரு விஷயம் 'தொலைநிலை மருத்துவம்'. இன்று, தொலைதூரப் பகுதிகளில் உள்ள ஏராளமான மக்கள் இதன் மூலம் பயனடைந்து வருகின்றனர், மேலும் இதன் மீதான நம்பிக்கையும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இருப்பினும், இந்தத் துறையில் விழிப்புணர்வையும், அணுகல் வசதியையும் அதிகரிக்க வேண்டிய அவசியம் இன்னும் அதிகமாக இருப்பதாக நான் நம்புகிறேன்.
நண்பர்களே,
கடந்த பத்தாண்டுகளில், நாட்டின் மனப்போக்கில் ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று கிராமங்கள், நகரங்கள் மற்றும் மாநகரங்களின் எல்லைகளைத் தாண்டி, சாதிக்க வேண்டும் என்ற உந்துதலுடன் ஒவ்வொரு இளம் இந்தியரும் ஏதேனும் ஒரு புதிய விஷயத்தைச் செய்ய விரும்புகிறார்கள். புதிய தலைமுறையின் இந்த புதிய மனப்போக்குதான் தேசத்தின் மிகப்பெரிய பலம்; பிரகாசமான எதிர்காலத்திற்கான மிக உயர்ந்த மூலதனமும் இதுவே. இதைப் பயன்படுத்திக் கொள்ள, நமது கல்வி முறையை நாம் தொடர்ந்து நவீனப்படுத்தவும் மேம்படுத்தவும் வேண்டும். புதிய கல்விக் கொள்கை இதற்கான அவசியமான அடித்தளத்தை அமைத்துள்ளது. இப்போது, சந்தை தேவைகளுக்கு ஏற்ப நமது பாடத்திட்டங்கள் உடனுக்குடன் மாற்றியமைக்கப்படுவது அவசியமாகும்! நமது கல்வி முறையை நிஜ உலகப் பொருளாதாரத்துடன் இணைக்கும் செயல்முறையை நாம் துரிதப்படுத்த வேண்டும். செயற்கை நுண்ணறிவு மற்றும் தானியங்கி முறை, டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் வடிவமைப்பு சார்ந்த உற்பத்தி போன்ற பாடங்களில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
நண்பர்களே,
கல்வியை வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோருடன் இணைக்க நாடு தொடர்ந்து பணியாற்றி வருகிறது. பல்கலைக்கழக நகரியங்கள் போன்ற புதிய மாதிரிகள் இந்த அணுகுமுறையை பிரதிபலிக்கின்றன. இன்று, இந்தியா ஏ.வி.ஜி.சி துறையை - அதாவது அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் ஆகியவற்றை ஊக்குவித்து வருகிறது. இந்தியா ஒரு கண்டுபிடிப்பு சார்ந்த பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்று பல கல்வியாளர்களும் கல்வி நிறுவனங்களும் இந்த கருத்தரங்கில் இணைந்துள்ளனர். உங்கள் வளாகங்களை தொழில்துறை ஒத்துழைப்பு மற்றும் ஆராய்ச்சி சார்ந்த கற்றல் மையங்களாக மேம்படுத்துவது குறித்து ஆலோசிக் குமாறு உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன். இது மாணவர்களுக்கு நிஜ உலக அனுபவத்தை வழங்குவதோடு, திறன் மேம்பாட்டு சூழலையும் வலுப்படுத்தும்.
நண்பர்களே,
மிக முக்கியமான ஒரு விஷயம் ஸ்டெம் - அதாவது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம். நமது நாட்டில் ஸ்டெம் பாடங்களில் ஆர்வம் காட்டும் மகள்களின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருவது பெரும் பெருமைக்குரிய விஷயமாகும். எதிர்காலத் தொழில்நுட்பங்களுக்கு நாம் தயாராகி வரும் வேளையில், வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் எந்தவொரு மகளும் பின் தங்கிவிடக்கூடாது என்பது மிக முக்கியமானது. இந்த கருத்தரங்கில், நீங்கள் இந்த திசையில் விவாதிக்க வேண்டும். பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதில் நாம் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இளம் ஆராய்ச்சியாளர்கள் புதிய யோசனைகளைச் சோதித்துப் பார்க்கவும், அவற்றில் பணியாற்றவும் முழுமையான வாய்ப்புகளைக் கொண்ட ஒரு ஆராய்ச்சி சூழலை நாம் உருவாக்க வேண்டும்.
நண்பர்களே,
இளைஞர் சக்தி ஆரோக்கியமாகவும், ஒழுக்கத்துடனும், தன்னம்பிக்கையுடனும் இருக்கும்போதுதான் அது தேசத்தின் சக்தியாக மாறுகிறது. அதனால்தான், சமீபத்திய ஆண்டுகளில் விளையாட்டானது தேசிய வளர்ச்சியின் ஒரு முக்கிய அங்கமாகப் பார்க்கப்படுகிறது. 'கேலோ இந்தியா' போன்ற முன்முயற்சிகள் நாட்டின் விளையாட்டுச் சூழலில் புதிய ஆற்றலைப் பாய்ச்சியுள்ளன. நாடு முழுவதும் விளையாட்டு உள்கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கருத்தரங்கில், சில முக்கியக் கேள்விகள் குறித்து நீங்கள் ஆலோசிக்க வேண்டும்: சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து கூட திறமையானவர்களை எவ்வாறு துல்லியமாகக் கண்டறிய முடியும்? ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்களுக்கான கட்டமைக்கப்பட்ட நிதி உதவியை எவ்வாறு மேம்படுத்தலாம்? மூன்றாவதாக, நமது விளையாட்டு அமைப்புகளை எவ்வாறு இன்னும் அதிக நிபுணத்துவத்துடன் மாற்ற முடியும்? வரும் ஆண்டுகளில், காமன்வெல்த் போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளன, மேலும் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தவும் இந்தியா முயற்சித்து வருகிறது. இத்தகையச் சூழலில், இளம் விளையாட்டு வீரர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அவர்களை நாம் உருவாக்க வேண்டும், அப்போதுதான் சர்வதேசப் போட்டிகளில் இந்தியாவால் தனது கொடியை உயர்த்திப் பிடிக்க முடியும்.
நண்பர்களே,
புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் சுற்றுலாவும் கலாச்சாரமும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஒரு இடத்தில் சுற்றுலா வளரும்போது, அந்த இடத்தின் அல்லது நகரத்தின் நற்பெயரும் அதிகரிக்கிறது. இது அந்த நகரத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது. இந்தியாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்குப் பஞ்சமில்லை. ஆனால் நீண்ட காலமாக, சுற்றுலா என்பது ஒரு சில குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப் பட்டிருந்தது. தற்போது, நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவதில் நாம் கவனம் செலுத்தி வருகிறோம்.
நண்பர்களே,
இந்த கருத்தரங்கில், இந்தியாவின் சுற்றுலாச் சூழலை வலுப்படுத்துவதற்கான ஒரு முழுமையான அணுகுமுறை குறித்து நீங்கள் விவாதிக்க வேண்டும். பயிற்சி பெற்ற வழிகாட்டிகள், விருந்தோம்பல் திறன்கள், டிஜிட்டல் இணைப்பு, சமூகப் பங்களிப்பு, தூய்மை மற்றும் சுற்றுலா சார்ந்த பிற விஷயங்கள் குறித்து நீங்கள் வழங்கும் ஆலோசனைகள் மிகவும் முக்கியமானவை.
நண்பர்களே,
நிறுவனங்கள், தொழில்துறை மற்றும் கல்வித்துறை ஆகிய மூன்றும் இணைந்து செயல்படும்போது, மாற்றத்தின் வேகம் துரிதப்படுத்தப்படுகிறது. பட்ஜெட்டுக்கு பிந்தைய இந்தத் தொடர் கருத்தரங்குகள் எதிர்காலத்திற்கான ஒரு உறுதியான திசையை வழங்கும் என்று நான் நம்புகிறேன். இத்தகைய முயற்சிகள் வளர்ந்த இந்தியாவின் அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தும்.
மேலும் நண்பர்களே, இந்த கருத்தரங்கு ஒரு புதிய மரபாக மாறியிருப்பது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். பட்ஜெட்டிற்குப் பிறகு, குறிப்பாகச் செயலாக்கத்தின் போது, இந்த ஆண்டு லட்சக்கணக்கான மக்கள் - நிபுணர்கள், பயனாளிகள் மற்றும் இந்த அமைப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் என அனைவரும் இந்த கருத்தரங்குகளில் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளதாக என்னிடம் கூறப்பட்டது. சிறந்த மற்றும் நடைமுறைக்கு உகந்த ஆலோசனைகள் வந்து கொண்டிருப்பதாக நமது அதிகாரிகள் எனக்குத் தெரிவித்துள்ளனர்.
இதன் பொருள், சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது மட்டுமல்லாமல், நம்பிக்கையுடன் முன்னேறுவதற்கான புதிய ஆற்றலையும் புதிய வேகத்தையும் நாம் பெற்றுள்ளோம் என்பதாகும். இந்த கருத்தரங்குகள் ஒரு மிகச்சிறந்த அனுபவம் என்று நான் கூறுவேன். இந்த கருத்தரங்குகளில் பங்கேற்ற அனைவரும் பாராட்டுதலுக்கும் நன்றிகளுக்கும் உரியவர்கள். மீண்டும் ஒருமுறை, உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளையும் மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வணக்கம்!
----
(Release ID:2236826
AD/VK/KR
(रिलीज़ आईडी: 2281987)
आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Urdu
,
Gujarati
,
Malayalam
,
Manipuri
,
हिन्दी
,
Marathi
,
Punjabi
,
English
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Kannada