உள்துறை அமைச்சகம்
பயங்கரவாதத்திற்கு எதிராக மத்திய அரசு மற்றொரு முக்கிய நடவடிக்கை - மேலும் 23 நபர்கள் 'பயங்கரவாதிகள்' என அறிவிப்பு
மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பயங்கரவாதக் குழுக்களை ஒழிப்பதில் அரசு உறுதியாக உள்ளது - மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா
प्रविष्टि तिथि:
04 JUL 2026 12:38PM by PIB Chennai
பயங்கரவாதத்திற்கு எதிரான பிரதமர் திரு நரேந்திர மோடி அரசின் சமரசமற்ற கொள்கையின் கீழ் மற்றொரு முக்கிய நடவடிக்கையாக, மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் வழிகாட்டுதலின் கீழ், மத்திய உள்துறை அமைச்சகம் மேலும் 23 நபர்களை 'பயங்கரவாதிகள்' என அறிவித்துள்ளது. நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதை உறுதி செய்வதற்காக, ஒவ்வொரு பயங்கரவாதக் குழுவையும் ஒழிப்பதில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மதிய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “பயங்கரவாதத்திற்கு எதிரான சமரசமற்ற கொள்கை என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையைத் தொடரும் வகையில், தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்புடைய 23 பயங்கரவாதச் செயல்பாட்டாளர்களை, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்துறை அமைச்சகம் பயங்கரவாதிகளாக இன்று (04.07.2026) அறிவித்துள்ளது. இவ்வாறு அறிவிக்கப்பட்ட பயங்கரவாதிகள், இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகள், பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துதல், பயங்கரவாதத்தைத் தூண்டுதல், ஆயுதக் கடத்தல், எல்லை வழியாக ஊடுருவுதல், பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவுதல், நிதி திரட்டுதல், பயங்கரவாதிகளைச் சேர்த்தல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளனர். இன்று அறிவிக்கப்பட்ட 23 பயங்கரவாதிகளில், 17 பேர் பாகிஸ்தான் நாட்டினர். 6 பேர் இந்திய நாட்டினர். இருப்பினும், அவர்கள் அனைவரும் தற்போது பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரிலும் இருந்து பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதை உறுதி செய்வதற்காக, ஒவ்வொரு பயங்கரவாதக் குழுவையும் ஒழிப்பதில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது.” என்று கூறியுள்ளார்.
இந்த நபர்களை முறையாகப் பயங்கரவாதிகளாக அறிவிப்பது, அவர்களின் நிதி கட்டமைப்புகள், நடமாட்டங்கள், ஆள்சேர்ப்புத் திறன்கள், பயங்கரவாதத்துடன் தொடர்புடைய செயல்பாடுகளைக் கட்டுப்படுத்து ஆகியவற்றுக்கு வழிவகுக்கும். இதன் மூலம் பயங்கரவாதச் சூழலமைப்பைத் தகர்க்க உதவுவது மட்டுமல்லாமல், தேசவிரோத, பயங்கரவாதச் செயல்களுக்கு எதிரான ஒரு வலுவான தடுப்பாக அமையும். மேலும், இது தேசிய, சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த சட்ட, புலனாய்வு, தடுப்பு நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான திறனை மேம்படுத்தும்.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் 1967-ல் மத்திய அரசு 2019-ம் ஆண்டில் மேற்கொண்ட திருத்தத்தைத் தொடர்ந்து, இதுவரை மொத்தம் 57 நபர்கள் அச்சட்டத்தின் 35-வது பிரிவின் கீழ் 'பயங்கரவாதிகள்' என வகைப்படுத்தப்பட்டு, அதன் நான்காவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு தற்போது மேலும் பின்வரும் 23 நபர்களையும் 'பயங்கரவாதிகள்' என அறிவித்து, அவர்களை மேற்கூறிய நான்காவது அட்டவணையில் பட்டியலிட்டுள்ளது.
இன்று அறிவிக்கப்பட்டவர்களின் விவரம்:
1. மசூத் இல்யாஸ் காஷ்மீரி - ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புடன் தொடர்புடைய பாகிஸ்தான் நாட்டவர் ஆவார்.
2. முகமது முசாதிக் - ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புடன் தொடர்புடைய பாகிஸ்தான் நாட்டவர் ஆவார்.
3. முஃப்தி முகமது அஸ்கர் கான், அபு சாத் அல்லது சாத் ஜிமிகி என்ற புனைப்பெயர்களில் அறியப்படுபவர் - ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புடன் தொடர்புடைய பாகிஸ்தான் நாட்டவர் ஆவார்.
4. ஹாஃபிஸ் அப்துல் ஷகூர் என்ற காரி ஜர்ரார் - இவர் ஒரு பாகிஸ்தானியர் ஆவார். ஜெய்ஷ்-இ-முகமது, ஹர்க்கத் - உல்- முஜாஹிதீன் அமைப்புகளுடன் தொடர்புடையவர்.
5. அப்துல்லா ஜிஹாதி என்ற ஷாநவாஸ் என்ற அல்-ஹிஜாமா பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இவர் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புடன் தொடர்புடையவர்.
6. ஃபிர்தௌஸ் அஹ்மத் பட் - லஷ்கர்-இ-தைபா அமைப்புடன் தொடர்புடைய ஒரு இந்தியர் (தற்போது பாகிஸ்தானில் வசித்து வருகிறார்).
7. குலாம் ஃபரித் (என்கிற குல்ஷன் குமார்) - அவர் ஒரு பாகிஸ்தானியர் - ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புடன் தொடர்புடையவர்.
8. ஹரூன் ரஷீத் கனாய் என்ற ஷுனு - இவர் இந்தியக் குடிமகன். தற்போது பாகிஸ்தானில் வசித்து வருகிறார். லஷ்கர்-இ-தைபா அமைப்புடன் தொடர்புடையவர்.
9. பிலால் அகமது மிர், 'அகமது பாய் ' என்ற புனைப்பெயரால் அறியப்படுபவர், ஒரு இந்தியக் குடிமகன். தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாஃபராபாத்தில் வசித்து வருகிறார். இவர் லஷ்கர்-இ-தைபா, தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் ஆகியவற்றுடன் தொடர்புடையவர்.
10. அபித் கயூம் லோன் - இவர் ஒரு இந்தியக் குடிமகன். தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசித்து வருகிறார். லஷ்கர்-இ-தைபா அமைப்புடன் தொடர்புடையவர்.
11. நசீர் அகமது குஜ்ஜார் என்ற அபு மனாசில் - இந்தியக் குடிமகன். தற்போது பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் வசித்து வருகிறார். லஷ்கர்-இ-தைபா அமைப்புடன் தொடர்புடையவர்.
12. அப்துல் ரவுஃப் (ஹாஃபிஸ் அப்துல் ரவுஃப் அல்லது ஹாஃபிஸ் அப்துர் ரவுஃப் என்றும் அழைக்கப்படுபவர்) - லஷ்கர்-இ-தைபா, ஜமாத்-உத்-தாவா, ஃபலாஹ்-இ-இன்சானியத் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒரு பாகிஸ்தானியர் ஆவார்.
13. அஷ்ஃபாக் அகமது (என்கிற இஷ்ஃபாக் அகமது) - ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புடன் தொடர்புடைய ஒரு பாகிஸ்தானியர் ஆவார்.
14. ஹாஃபிஸ் காலித் வலீத் (என்கிற ஹாஃபிஸ் காலித் நாயக்/காலித் வலீத்) - லஷ்கர்-இ-தைபா, ஜமாத்-உத்-தாவா அமைப்புகளுடன் தொடர்புடைய ஒரு பாகிஸ்தான் நாட்டவர் ஆவார்.
15. மௌலானா இம்தத் உல்லா மக்கி (மௌலானா இம்தத், இம்தத் பாய், அல்லது மௌலானா இம்ததுல்லா என்றும் அழைக்கப்படுபவர்) - பாகிஸ்தானியர், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புடன் தொடர்புடையவர்.
16. மௌலானா சைஃபுல்லா காலித் (என்கிற வாலியுல், முகமது சலீம், வாஜித்) - பாகிஸ்தானியர். இவர் லஷ்கர்-இ-தைபா, பாகிஸ்தான் மார்க்கஸி முஸ்லிம் லீக் ஆகியவற்றுடன் தொடர்புடையவர்.
17. முகமது யாகூப் (என்கிற அபு சுமாமா, சமமா இல்யாஸ், வாரிஸ் அலி) என்பவர் லஷ்கர்-இ-தைபா (LeT) அமைப்புடன் தொடர்புடைய ஒரு பாகிஸ்தான் நாட்டவர் ஆவார்.
18. மௌலானா யூசுஃப் தைபி (என்கிற முகமது யூசுஃப்) - லஷ்கர்-இ-தைபா, ஜமாத்-உத்-தாவா அமைப்புகளுடன் தொடர்புடைய பாகிஸ்தானியர் ஆவார்.
19. ஓவைஸ் ஃபாரூஸ் (என்கிற ஓவைஸ் அகமது மிர் / ஓவைஸ் ஃபாரூஸ் மிர்) என்பவர் லஷ்கர்-இ-தைபா அமைப்புடன் தொடர்புடைய ஒரு இந்தியர் ஆவார். தற்போது பாகிஸ்தானுக்குப் பயணம் செய்து, லஷ்கர்-இ-தைபாவின் பயங்கரவாதப் படையில் உள்ளார்.
20. காரி யாகூப் ஷேக் (காரி முகமது யாகூப் ஷேக், யாகூப் ஷேக், காரி ஷேக் முகமது யாகூப், முகமது யாகூப் என்றும் அழைக்கப்படுபவர்) - பாகிஸ்தானியர் ஆவார் . இவர் பாகிஸ்தான் மார்க்கஸி முஸ்லிம் லீக், ஜமாத்-உத்-தாவா ஆகியவற்றுடன் தொடர்புடையவர்.
21. ராணா இஃப்திகார் (ராணா வலீத் ஆதிஃப், ராணா இஃப்திகார் ஹைதர், ராணா இஃப்திகார் அகமது அல்லது ஹைதர் கான் என்றும் அழைக்கப்படுபவர்) - லஷ்கர்-இ-தைபா, ஜமாத்-உத்-தாவா அமைப்புகளுடன் தொடர்புடைய ஒரு பாகிஸ்தானியர் ஆவார்.
22. வசிம் நூர் ஜாட் என்ற காரி வசிம் - ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புடன் தொடர்புடைய ஒரு பாகிஸ்தானியர் ஆவார்.
23. முகமது ஷாஹித் ஃபைசல் (என்கிற உஸ்தாத், முஹந்திஸ், ஜாகிர்) - பாகிஸ்தான் குடியுரிமை பெற்ற பூர்வீக இந்தியர். தற்போது ராவல்பிண்டியில் உள்ளார். லஷ்கர்-இ-தைபா, அல்-கொய்தா, ஐஎஸ்ஐஎஸ் ஆகியவற்றுடன் தொடர்புடையவர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280998®=3&lang=1
****
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2281086)
आगंतुक पटल : 11