குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
'ஆர்கனைசர்' இதழ், நாட்டின் ஆன்மாவின் குரலாக திகழ்ந்து வருகிறது: குடியரசு துணைத் தலைவர் திரு சி. பி. ராதாகிருஷ்ணன்
प्रविष्टि तिथि:
03 JUL 2026 7:53PM by PIB Chennai
உண்மையான செய்திகளுக்கு மதிப்பளித்தல், நம்பகத்தன்மையைப் பேணுதல், மிக உயர்ந்த தொழில்முறை நெறிமுறைகளைக் கடைப்பிடித்தல் ஆகியவற்றுடன் தகவல்களை அளித்து, வினாக்களை எழுப்பி, அறிவுப்பூர்வமான பொது விவாதங்களை ஊக்கப்படுத்தும் போதுதான் ஜனநாயக விழுமியங்கள் செழித்தோங்குகின்றன என்று குடியரசு துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் கூறினார். துணிச்சலுடனும், பொறுப்புணர்வுடனும், பயன்படுத்தப்படும்போது மட்டுமே பத்திரிகை சுதந்திரம் அர்த்தமுள்ளதாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
புதுதில்லியில் நடைபெற்ற 'ஆர்கனைசர்' வார இதழின் 80-வது நிறுவன நாள் விழாவில் உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர், அந்த இதழின் 80 ஆண்டுகாலப் பயணத்தை "தொடர்ச்சி, மன உறுதி, தலைமுறைகளைக் கடந்து பொது விவாதங்களில் நீடித்த அர்ப்பணிப்பு" கொண்டதாக விவரித்தார். 1949-ல் பத்திரிக்கைகளின் தணிக்கைக்கு எதிராக இந்த வார இதழ் மேற்கொண்ட சட்டப் போராட்டத்தைக் குறிப்பிட்ட அவர், சுதந்திர இந்தியாவில் ஊடக சுதந்திரத்தின் பரிணாம வளர்ச்சியில் அந்த நிகழ்வு ஒரு மைல்கல்லாக அமைந்ததாகவும், கடினமான கேள்விகளை எழுப்பத் துணியும் சுதந்திரமான பத்திரிகையின் முக்கியத்துவத்தை அது வலுப்படுத்தியதாகவும் கூறினார்.
பல தசாப்தங்களாக, ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, கலாச்சாரம், நிர்வாகம் தொடர்பான தேசிய விவாதங்களில் 'ஆர்கனைசர்' வார இதழ் தீவிரமாகப் பங்கேற்று வருவதாக குடியரசு துணைத் தலைவர் குறிப்பிட்டார். ஜம்மு-காஷ்மீர் விவகாரங்கள், பிரஜா பரிஷத் இயக்கம், சீனா, பாகிஸ்தானுடனான போர்களின் போது, தேசிய பாதுகாப்பு, சுதேசி இயக்கம், ராம ஜென்மபூமி இயக்கம், இந்தியாவின் பொது வாழ்வில் நிகழ்ந்த பிற முக்கிய நிகழ்வுகள் ஆகியவற்றில், அந்த இதழ் ஆற்றிய பங்களிப்பை குடியரசு துணைத் தலைவர் சுட்டிக்காட்டினார்.
அவசரநிலைக் காலத்தின்போது அந்த இதழ் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பை நினைவுகூர்ந்த அவர், அரசியலமைப்புச் சார்ந்த ஜனநாயக நடைமுறைகளைப் பாதுகாப்பதில் உறுதியாக இருந்தவர்களுக்கு 'ஆர்கனைசர்' மற்றும் அதன் சகோதர இதழாக திகழும் 'தி மதர்லேண்ட்' ஆகியவை ஒருங்கிணைப்பு மையங்களாகத் திகழ்ந்தன என்று அவர் குறிப்பிட்டார். துணிச்சலுடன் பயன்படுத்தப்படும் போது தான் பத்திரிகை சுதந்திரம் அதன் உண்மையான மதிப்பைப் பெறுகிறது என்பதை இத்தகைய தருணங்கள் நமக்கு நினைவூட்டுகின்றன என்று திரு சி பி ராதாகிருஷ்னன் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280891®=3&lang=1
(Release ID: 2280891)
****
TV/SV/SH
(रिलीज़ आईडी: 2280949)
आगंतुक पटल : 15