பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோயில் கங்கா விரைவுச் சாலை தொடக்க விழாவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்:

प्रविष्टि तिथि: 29 APR 2026 2:09PM by PIB Chennai

பாரத அன்னைக்கு வெற்றி!

அன்னை கங்கைக்கு வெற்றி!

அன்னை கங்கைக்கு வெற்றி!

உத்தரப் பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் படேல் அவர்களே, முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் ஜி அவர்களே, துணை முதலமைச்சர்கள் திரு. கேசவ் பிரசாத் மவுரியா, திரு. பிரிஜேஷ் பதக் ஜி அவர்களே, மத்திய அமைச்சரவை சக ஊழியர்கள் திரு. ஜித்தன் பிரசாதா அவர்களே, பங்கஜ் சவுத்ரி அவர்களே, உத்தரப் பிரதேச அரசின் அமைச்சர்களே, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களே, இதர மக்கள் பிரதிநிதிகளே மற்றும் இங்கே பெருந்திரளாகக் கூடியிருக்கும் எனது அன்பிற்குரிய சகோதர

சகோதரிகளே!

முதலில், நரசிம்மப் பெருமான் அவதரித்த இந்தப் புனித பூமியை வணங்குகிறேன். இங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவிலேயே அன்னை கங்கையின் அருள் பாய்கிறது. எனவே, இந்தப் பகுதி முழுவதுமே ஒரு புனிதத் தலத்திற்கு இணையானது. உத்தரப் பிரதேசத்திற்கு கிடைத்துள்ள இந்த 'கங்கா விரைவுச் சாலை' அன்னை கங்கையின் ஆசி என்றே நான் கருதுகிறேன். இப்போது நீங்கள் சில மணி நேரங்களிலேயே பிரயாக்ராஜ் சங்கமத்தை அடைய முடியும்; அதேபோல் காசி விஸ்வநாதரையும் தரிசித்து விட்டு விரைவில் வீடு திரும்ப முடியும்.

நண்பர்களே,

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அன்னை கங்கை எவ்வாறு உத்தரப் பிரதேசத்திற்கும், இந்த நாட்டிற்கும் வாழ்வாதாரமாகத் திகழ்ந்து வருகிறாரோ, அதேபோல் நவீன முன்னேற்றத்தின் இந்த யுகத்தில், அன்னை கங்கைக்கு அருகிலேயே செல்லும் இந்த விரைவுச் சாலை, உத்தரப் பிரதேச வளர்ச்சியைத் தாங்கிப் பிடிக்கும் புதிய வாழ்வாதாரமாக மாறும்.

கடந்த நான்கு, ஐந்து நாட்களாக நான் அன்னை கங்கையின் அரவணைப்பிலேயே இருப்பது ஒரு அற்புதமான தற்செயல் நிகழ்வாகும். ஏப்ரல் 24ம் தேதி நான் வங்காளத்தில் இருந்தபோது அன்னை கங்கையைத் தரிசித்தேன்; பிறகு நேற்று காசியில் இருந்தேன். இன்று காலை கூட பாபா விஸ்வநாதர், அன்னை அன்னபூரணி மற்றும் அன்னை கங்கையைத் தரிசிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. இப்போது அன்னை கங்கையின் பெயரால் அமைந்துள்ள இந்த விரைவுச் சாலையைத் தொடக்கி வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. இந்த விரைவுச் சாலைக்கு அன்னை கங்கையின் பெயரைச் சூட்டிய உத்தரப் பிரதேச அரசை நான் பாராட்டுகிறேன். இதில் எங்களது வளர்ச்சிக் கண்ணோட்டமும் பிரதிபலிக்கிறது, எங்களது பாரம்பரியமும் காட்சியளிக்கிறது. கங்கா விரைவுச் சாலைக்காக உத்தரப் பிரதேசத்தின் கோடிக்கணக்கான மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

இன்று ஜனநாயகத் திருவிழாவின் ஒரு முக்கியமான நாளாகும். மேற்கு வங்காளத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இப்போது நடைபெற்று வருகிறது. அங்கிருந்து வரும் செய்திகள் அங்கே விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெறுவதைக் காட்டுகின்றன. முதல் கட்டத்தைப் போலவே, மக்கள் தங்கள் வீடுகளை விட்டு பெருமளவில் வந்து வாக்களிக்கிறார்கள். நீண்ட வரிசையில் மக்கள் நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்கள் முழுவதும் பரவிக் கிடக்கின்றன.

கடந்த 6 முதல் 7 தசாப்தங்களாக நடக்காத ஒன்று, கற்பனை செய்து பார்ப்பது கூட கடினமாக இருந்த ஒன்று, இந்த முறை வங்காளத்தில் இவ்வளவு அச்சமற்ற சூழலில் வாக்குப்பதிவு நடக்கிறது. மக்கள் பயமின்றி வாக்களிக்கிறார்கள். இது நாட்டின் அரசியலமைப்பிற்கும், வலுவடைந்து வரும் ஜனநாயகத்திற்கும் ஒரு புனிதமான அடையாளமாகும். வங்காளத்து மக்கள் தங்கள் உரிமைகள் குறித்து விழிப்புணர்வுடன் இருந்து, பெருமளவில் வாக்களிப்பதற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்குப்பதிவு முடிய இன்னும் சில மணிநேரங்கள் உள்ள நிலையில், அதே உற்சாகத்துடன் இந்த ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்குமாறு வங்காள மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.

நண்பர்களே,

சிறிது காலத்திற்கு முன்பு பீகாரில் தேர்தல் நடந்தபோது, பாஜக-தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரு மாபெரும் வெற்றியைப் பதிவு செய்து சரித்திரம் படைத்தது. நேற்றைய தினம் குஜராத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், மாவட்ட பஞ்சாயத்துகள், நகர பஞ்சாயத்துகள் மற்றும் தாலுகா பஞ்சாயத்துகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகின. உத்தரப் பிரதேச மக்களாகிய நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள், அங்கே 80 முதல் 85 சதவீத நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இப்போது தேர்தல் நடைபெறும் இந்த ஐந்து மாநிலங்களிலும் பாஜக வரலாற்றுச் சிறப்புமிக்க 'வெற்றி ஹாட்ரிக்' அடிக்கப் போகிறது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். மே 4-ம் தேதி வெளியாகும் முடிவுகள், வளர்ந்த பாரதத்திற்கான உறுதியை வலுப்படுத்தும்; மேலும் நாட்டின் வளர்ச்சியின் வேகத்திற்குப் புதிய ஆற்றலை வழங்கும்.

நண்பர்களே,

நாட்டின் விரைவான வளர்ச்சிக்காக, நாம் நவீன உள்கட்டமைப்புகளை மிக வேகமாக உருவாக்க வேண்டும். டிசம்பர் 2021-ல், கங்கா விரைவுச் சாலைக்கு அடிக்கல் நாட்டுவதற்காக நான் ஷாஜகான்பூருக்கு வந்திருந்தேன். இன்னும் 5 ஆண்டுகள் கூட முழுமையாக நிறைவடையவில்லை, அதற்குள்ளாகவே நாட்டின் மிகப்பெரிய விரைவுச் சாலைகளில் ஒன்றாகவும், உத்தரப் பிரதேசத்தின் மிக நீளமான பசுமை வழி விரைவுச் சாலையாகவும் இது 5 ஆண்டுகளுக்குள்ளேயே கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்று ஹர்தோயிலிருந்து இதன் தொடக்க விழாவும் நடைபெறுகிறது.

கங்கா விரைவுச் சாலையின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்தது மட்டுமல்லாமல், அதன் விரிவாக்கத் திட்டப் பணிகளும் தொடங்கிவிட்டன. விரைவில், இந்த விரைவுச் சாலை மீரட்டையும் தாண்டி ஹரித்வாரைச் சென்றடையும். இதன் சிறந்த பயன்பாட்டிற்காக, ஃபரூக்காபாத் இணைப்பு விரைவுச் சாலை உருவாக்கப்பட்டு, மற்ற விரைவுச் சாலைகளுடன் இணைக்கப்படும். இதுதான் இரட்டை எஞ்சின் அரசின் தொலைநோக்குப் பார்வை! இதுதான் பாஜக அரசின் பணிகளின் வேகம்! இதுதான் பாஜக அரசு செயல்படும் விதம்!

சகோதர சகோதரிகளே,

சில நாட்களுக்கு முன்புதான் தில்லி - டேராடூன் விரைவுச் சாலையைத் தொடக்கி வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது நான் குறிப்பிட்டது போல, புதிதாகக் கட்டப்படும் இந்த விரைவுச் சாலைகள் 'வளர்ந்த பாரதத்தின்' உள்ளங்கை ரேகைகளாகும்; இந்த நவீன ரேகைகள் இன்று இந்தியாவின் ஒளிமயமான எதிர்காலத்தைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

நண்பர்களே,

ஒரு சாலைக்காகப் பல தசாப்தங்களாகக் காத்திருந்த காலம் இப்போது மலையேறிவிட்டது! முன்பெல்லாம் ஒரு அறிவிப்பு வெளியானால், அதற்கான கோப்புகள் பல ஆண்டுகள் அலைக்கழிக்கப்படும். தேர்தலுக்காக அடிக்கல் நாட்டப்படும், பிறகு அரசாங்கங்கள் வரும், போகும்; ஆனால் வேலை நடந்ததற்கான சுவடே இருக்காது. சில நேரங்களில் பழைய கோப்புகளைத் தேடிக் கண்டுபிடிக்கவே உயர் அதிகாரிகள் இரண்டு ஆண்டுகள் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. ஆனால், இரட்டை எஞ்சின் ஆட்சியில், அடிக்கல் நாட்டப்பட்டால் குறிப்பிட்ட காலத்திற்குள்ளேயே அதன் தொடக்க விழாவும் நடக்கும். அதனால்தான் இன்று உத்தரப் பிரதேச விரைவுச் சாலைகளின் வேகத்தை விட, உத்தரப் பிரதேச வளர்ச்சியின் வேகம் அதிகமாக உள்ளது.

நண்பர்களே,

இந்த விரைவுச் சாலை என்பது வெறும் அதிவேகச் சாலை மட்டுமல்ல. இது புதிய சாத்தியக்கூறுகள், புதிய கனவுகள் மற்றும் புதிய வாய்ப்புகளுக்கான நுழைவாயில் ஆகும். கங்கா விரைவுச் சாலை சுமார் 600 கிலோமீட்டர் நீளம் கொண்டது. மேற்கு உத்தரப் பிரதேசத்தில் - மீரட், புலந்ஷகர், ஹாப்பூர், அம்ரோஹா, சம்பல் மற்றும் படாயுன். மத்திய உத்தரப் பிரதேசத்தில் - ஷாஜகான்பூர், ஹர்தோய், உன்னாவ், ரேபரேலி. கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் - பிரதாப்கர், பிரயாக்ராஜ் மற்றும் இதர அருகிலுள்ள மாவட்டங்கள். இந்த கங்கா விரைவுச் சாலை இந்தப் பகுதிகளில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கும்.

நண்பர்களே,

இந்தப் பகுதிகள் அன்னை கங்கை மற்றும் அவற்றின் துணையாறுகளின் வளமான மண்ணால் ஆசீர்வதிக்கப்பட்டவை. ஆனால், முந்தைய அரசாங்கங்கள் விவசாயிகளைப் புறக்கணித்ததால், இங்குள்ள விவசாயிகள் தொடர்ந்து இன்னல்களுக்குள்ளேயே இருந்து வந்தனர்! விவசாயிகளின் விளை பொருட்கள் பெரிய சந்தைகளைச் சென்றடைய வழியில்லாமல் இருந்தது. குளிர்பதனக் கிடங்குகள் மற்றும் சரக்கு மேலாண்மை வசதிகள் இங்கு இல்லை. விவசாயிகள் தங்கள் கடின உழைப்பிற்கு ஏற்ற சரியான விலையைப் பெறவில்லை. இப்போது அந்தச் சிரமங்களுக்கான தீர்வுகள் விரைவாகக் கிடைக்கும். கங்கா விரைவுச் சாலையின் மூலம், மிகக் குறுகிய காலத்தில் பெரிய சந்தைகளை அணுக முடியும். விவசாயத்திற்குத் தேவையான உள்கட்டமைப்புகள் இங்கு மேம்படுத்தப்படும். இது நமது விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும்.

நண்பர்களே,

கங்கா விரைவுச் சாலை உத்தரப் பிரதேசத்தின் ஒரு முனையை மற்றொரு முனையுடன் இணைப்பது மட்டுமல்லாமல், தேசிய தலைநகர் பிராந்தியத்தின் அபரிமிதமான வாய்ப்புகளையும் நமக்கு அருகாமையில் கொண்டு வரும். கங்கா விரைவுச் சாலையில் வாகனங்கள் ஓடும் அதே வேளையில், அதன் இருபுறங்களிலும் புதிய தொழில் வாய்ப்புகளும் உருவாகும். இதற்காக, ஹர்தோய் போன்ற மாவட்டங்களில் தொழில் வழித்தடங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஹர்தோய், ஷாஜகான்பூர், உன்னாவ் உள்ளிட்ட 12 மாவட்டங்களிலும் புதிய தொழிற்சாலைகள் வரும். மருந்தியல் ஜவுளி போன்ற பல்வேறு துறைகளின் தொகுப்புகள் உருவாக்கப்படும். இது இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.

நண்பர்களே,

நமது இளைஞர்கள் முத்ரா யோஜனா மற்றும் 'ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு' போன்ற திட்டங்களின் வலிமையால் புதிய சாதனைகளைப் படைத்து வருகின்றனர். இங்கு சிறு தொழில்களும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் ஊக்குவிக்கப்படுகின்றன. மேம்பட்ட போக்குவரத்து வசதிகள் மூலம் அவர்களுக்குப் புதிய பாதைகள் திறக்கப்படும். மீரட்டின் விளையாட்டுப் பொருட்கள், சம்பல் பகுதியின் கைவினைப் பொருட்கள், புலந்ஷகரின் மட்பாண்டங்கள், ஹர்தோயியின் கைத்தறி, உன்னாவ் பகுதியின் தோல் பொருட்கள், பிரதாப்கரின் நெல்லிக்காய் தயாரிப்புகள் என இவை அனைத்தும் இனி நாட்டின் மற்றும் உலகின் பெரிய சந்தைகளைச் சென்றடையும். இதன் மூலம் லட்சக்கணக்கான குடும்பங்களின் வருமானம் உயரும்.

நீங்களே சொல்லுங்கள், பழைய சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் ஹர்தோய் மற்றும் உன்னாவ் போன்ற மாவட்டங்களில் தொழில் வழித்தடங்கள் உருவாக்கப்படும் என்று யாராவது கற்பனை செய்திருக்க முடியுமா? நமது ஹர்தோய் வழியாக ஒரு விரைவுச் சாலை செல்லும் என்று யாராவது எப்போதாவது நினைத்ததுண்டா? இந்தப் பணிகள் பாஜக ஆட்சியில் மட்டுமே சாத்தியம்.

நண்பர்களே,

முன்பெல்லாம் உத்தரப் பிரதேசம் ஒரு பின்தங்கிய மற்றும்  நலிந்த மாநிலம் என்று அழைக்கப்பட்டது. அதே உத்தரப் பிரதேசம் இன்று 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற முன்னேறி வருகிறது. இது மிகப் பெரிய இலக்கு. ஆனால் இதற்குப் பின்னால் அதே அளவிற்கான பெரிய தயார்நிலையும் உள்ளது. ஏனெனில் உ.பி.-யிடம் அத்தகைய மகத்தான திறன் உள்ளது. நாட்டின் மிகப்பெரிய இளைஞர் சக்தியைக் கொண்ட மாநிலமாக உ.பி. விளங்குகிறது. உ.பி.-யைத் தயாரிப்பு மையமாக மாற்ற இந்த வலிமையை நாங்கள் பயன்படுத்துகிறோம். உ.பி.-யில் புதிய தொழில்களும் தொழிற்சாலைகளும் அமைக்கப்பட்டு, பெரிய அளவிலான முதலீடுகள் வரும்போதுதான் பொருளாதார முன்னேற்றத்தின் கதவுகள் திறக்கும்; இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளும் உருவாகும்.

சகோதர சகோதரிகளே,

இந்தத் தொலைநோக்குப் பார்வையை மையமாக வைத்துத்தான் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ச்சியான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்பு இடப்பெயர்வுக்காக அறியப்பட்ட உத்தரப் பிரதேசம், இன்று முதலீட்டாளர்கள் மாநாடுகள் மற்றும் தொழில் வழித்தடங்களுக்காக அறியப்படுவதை நீங்களே உணர்கிறீர்கள். உ.பி. முதலீட்டாளர் மாநாடுகளில் பங்கேற்க இந்தியாவிலிருந்தும், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் நிறுவனங்கள் வருகின்றன. கோடிக்கணக்கான ரூபாய் உ.பி.-யில் முதலீடு செய்யப்படுகிறது. இன்று இந்தியா உலகின் இரண்டாவது பெரிய மொபைல் போன் தயாரிப்பாளராக உள்ளது என்றால், அதில் உத்தரப் பிரதேசத்தின் பங்களிப்பு மிக அதிகம். இன்று இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களில் பாதி நம் உத்தரப் பிரதேசத்தில் தான் தயாரிக்கப்படுகின்றன. சில வாரங்களுக்கு முன்புதான் நொய்டாவில் குறைக்கடத்தி ஆலைக்கான அடிக்கல்லையும் நான் நாட்டினேன்.

நண்பர்களே,

செயற்கை நுண்ணறிவு  யுகமான இதில், குறைக்கடத்தித் துறை எவ்வளவு பெரிய துறையாக மாறி வருகிறது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அதிலும் முன்னிலை வகிக்க உத்தரப் பிரதேசம் முன்னேறிச் செல்கிறது. வருங்காலத்தில், உ.பி. மக்களுக்கு அபரிமிதமான வாய்ப்புகளைக் கொண்ட ஒரு மிகப்பெரிய தளம் இதன் மூலம் திறக்கப்பட உள்ளது.

நண்பர்களே,

உத்தரப் பிரதேசத்தின் தொழில் வளர்ச்சி இன்று இந்தியாவின் பாதுகாப்பு வலிமையாகவும் மாறி வருகிறது. நாட்டின் இரண்டு பாதுகாப்பு வழித்தடங்களில் ஒன்று இன்று உ.பி.-யில் உள்ளது. பெரிய பாதுகாப்பு நிறுவனங்கள் இங்குத் தொழிற்சாலைகளை அமைத்து வருகின்றன. உலகம் அங்கீகரிக்கும் 'பிரம்மோஸ்' போன்ற ஏவுகணைகள் இன்று உ.பி.-யில் தயாரிக்கப்படுகின்றன. பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பதற்குத் தேவையான சிறு பாகங்களை இங்குள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இது உத்தரப் பிரதேசத்தின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைக்குப் பெரும் பலனை அளிக்கிறது. சிறிய மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள் கூட இப்போது பெரிய தொழில்களுடன் இணைவதைக் கனவு காண முடியும்.

நண்பர்களே,

இன்று உத்தரப் பிரதேசம் இவ்வளவு வேகமான வளர்ச்சியைக் கண்டு வருகிறது என்றால், அதற்குப் பழைய அரசியலைத் தூக்கியெறிந்துவிட்டு உ.பி. தனக்கென ஒரு புதிய அடையாளத்தை உருவாக்கியிருப்பதே காரணமாகும். ஒரு காலத்தில் சாலைகளில் இருந்த குழிகள்தான் உ.பி.-யின் அடையாளமாக இருந்தன என்பதை நினைத்துப் பாருங்கள். ஆனால், அதே உத்தரப் பிரதேசம் இன்று நாட்டின் அதிக விரைவுச் சாலைகளைக் கொண்ட மாநிலமாக மாறியுள்ளது. முன்னெல்லாம் பக்கத்து மாவட்டங்களுக்குச் செல்வது கூட மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் இன்று உத்தரப் பிரதேசத்தில் 5 சர்வதேச விமான நிலையங்கள் உட்பட மொத்தம் 21 விமான நிலையங்கள் உள்ளன. இப்போது நொய்டா சர்வதேச விமான நிலையமும் தொடங்கப்பட்டுள்ளது. கங்கா விரைவுச் சாலை வழியாகச் சென்றால், நொய்டா சர்வதேச விமான நிலையத்தை சில மணி நேரங்களிலேயே சென்றடைய முடியும்.

சகோதர சகோதரிகளே,

நமது உத்தரப் பிரதேசம் என்பது பகவான் ராமர் மற்றும் கிருஷ்ணர் வாழ்ந்த புனித பூமி. ஆனால் முந்தைய அரசாங்கங்கள், தங்களது தவறான செயல்களால் குற்றச் செயல்களையும் அராஜக ஆட்சி உ.பி.-யின் அடையாளமாக மாற்றியிருந்தன. உ.பி.-யின் மாஃபியாக்களை மையமாக வைத்து திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. ஆனால் இப்போது, உ.பி.-யின் சட்டம் ஒழுங்கு நாடு முழுமைக்கும் ஒரு முன்னுதாரணமாகக் காட்டப்படுகிறது.

சகோதர சகோதரிகளே,

வளங்களைச் சுரண்டிக் கொண்டிருந்த அதிகாரத்தை இழந்த சமாஜ்வாதி கட்சியினருக்கு, உ.பி.-யின் இந்த முன்னேற்றம் பிடிக்கவில்லை. அவர்கள் உத்தரப் பிரதேசத்தை மீண்டும் பழைய இருண்ட காலத்திற்குத் தள்ள நினைக்கிறார்கள். அவர்கள் மீண்டும் ஒருமுறை சமூகத்தைப் பிளவுபடுத்தவும், உடைக்கவும் முயற்சிக்கிறார்கள்.

நண்பர்களே,

சமாஜ்வாதி கட்சி என்பது வளர்ச்சிக்கும், பெண்களுக்கும் எதிரானதாகும். சமீபத்தில்தான் சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் போன்ற கட்சிகளின் உண்மையான முகத்தை இந்த நாடு மீண்டும் ஒருமுறை பார்த்தது. மத்தியில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நாடாளுமன்றத்தில் மகளிர் அதிகாரம் பெறும்  இட ஒதுக்கீடு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தத் திருத்தம் நிறைவேற்றப்பட்டிருந்தால், 2029 தேர்தலிலிருந்தே சட்டமன்றங்கள் மற்றும் மக்களவையில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும்! நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் பெரும் எண்ணிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், சட்டமன்ற உறுப்பினர்களாகவும் டெல்லிக்கும் லக்னோவிற்கும் சென்றிருப்பார்கள். அதுவும் மற்ற எந்தப் பிரிவினரின் இடங்களையும் குறைக்காமலேயே இது சாத்தியப்பட்டிருக்கும்! ஆனால், சமாஜ்வாதி கட்சி இந்த சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக வாக்களித்தது.

நண்பர்களே,

இந்த மசோதா நிறைவேறியிருந்தால் அனைத்து மாநிலங்களிலும் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும். அனைத்து மாநிலங்களிலும் ஒரே சீரான விகிதத்தில் தொகுதிகள் உயர்த்தப்படும் என்று நாடாளுமன்றத்தில் நாங்கள் தெளிவாகக் கூறியிருந்தோம். ஆனால், உத்தரப் பிரதேசத்தைத் திட்டி அரசியல் செய்யும் தி.மு.க போன்ற கட்சிகள், உ.பி.-யில் ஏன் இடங்கள் அதிகரிக்க வேண்டும் என எதிர்ப்புத் தெரிவித்தன. நாடாளுமன்றத்தில் இதே கருத்தையே சமாஜ்வாதி கட்சியும் எதிரொலித்ததை நீங்கள் பார்த்தீர்கள். இந்தச் சமாஜ்வாதி கட்சியினர் உங்களிடம் ஓட்டு வாங்கிக்கொண்டு, நாடாளுமன்றத்தில் உ.பி. மக்களைத் திட்டுபவர்களுடன் கைகோர்த்து நிற்கிறார்கள். அதனால்தான் உ.பி. மக்கள் சொல்கிறார்கள், "சமாஜ்வாதி கட்சி ஒருபோதும் திருந்தாது" என்று. இவர்கள் எப்போதும் பெண்களுக்கு எதிரான அரசியலையே செய்வார்கள். இவர்கள் எப்போதும் திருப்திப்படுத்தும் அரசியலுக்கும், குற்றவாளிகளுக்கும் ஆதரவாகவே நிற்பார்கள். வாரிசு அரசியலையும், சாதி அரசியலையும் தாண்டி இவர்களால் ஒருபோதும் சிந்திக்க முடியாது. இவர்கள் எப்போதும் வளர்ச்சிக்கு எதிரான அரசியலையே செய்வார்கள். சமாஜ்வாதி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் குறித்து உத்தரப் பிரதேச மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நண்பர்களே,

இன்று நாடு ஒரே ஒரு உறுதியுடன் முன்னேறிச் செல்கிறது – அதுதான் 'வளர்ச்சியைடந்த இந்தியா என்கிற உறுதி! இந்த உறுதியை நிறைவேற்றுவதில் உத்தரப் பிரதேசத்திற்கு மிகப் பெரிய பங்கு உண்டு. இன்று உலகம் முழுவதுமே போர், அமைதியின்மை மற்றும் நிலையற்ற தன்மையில் சிக்கியிருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். உலகின் பெரிய நாடுகளில் கூட நிலைமை மோசமாக உள்ளது. ஆனால், இந்தியா அதே வேகத்தில் வளர்ச்சியின் பாதையில் முன்னேறிச் செல்கிறது.

வெளியில் உள்ள எதிரிகளுக்கு இது பிடிப்பதில்லை. அதேபோல், அதிகாரப் பசியில் உள்ளே அமர்ந்திருக்கும் சிலரும் இந்தியாவைத் தாழ்த்திக் காட்ட முயல்கின்றனர். இருப்பினும், நாம் பாதுகாப்பாக இருப்பது மட்டுமல்லாமல், வளர்ச்சியில் புதிய சாதனைகளையும் படைத்து வருகிறோம். 'தற்சார்பு இந்தியா' இயக்கத்தை நாம் முன்னெடுத்துச் செல்கிறோம். மிக நவீன உள்கட்டமைப்புகளை நாம் உருவாக்கி வருகிறோம். இந்த திசையில் கங்கா விரைவுச் சாலை மற்றொரு வலுவான படியாகும்.

கங்கா விரைவுச் சாலை நம் வாசலுக்குக் கொண்டு வரப்போகும் வாய்ப்புகளை, உ.பி. மக்கள் தங்கள் கடின உழைப்பாலும் திறமையாலும் நனவாக்குவார்கள் என்று நான் நம்புகிறேன். இந்த உறுதியுடன், உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி!

பாரத மாதாவுக்கு வெற்றி!

பாரத மாதாவுக்கு வெற்றி!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

மிக்க நன்றி!

----

(Release ID:2256567)

AD/VK/KR

 

 


(रिलीज़ आईडी: 2280694) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam