குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
78-வது பட்டயக் கணக்காளர் தினக் கொண்டாட்டங்களில் குடியரசுத் துணைத் தலைவர் பங்கேற்பு
प्रविष्टि तिथि:
01 JUL 2026 7:54PM by PIB Chennai
பட்டயக் கணக்காளர்கள் "நம்பிக்கையின் தூதர்கள்" என்றும், வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கான இந்தியாவின் பயணத்தில் அவர்கள் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளனர் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் திரு சி. பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். புது தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் கழகத்தின் (ICAI) 78-வது பட்டயக் கணக்காளர் தினம் மற்றும் அதன் நிறுவன தினக் கொண்டாட்டங்களில் உரையாற்றிய அவர், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் அறநெறி சார்ந்த நிர்வாகத்தை உறுதி செய்வதன் மூலம், இந்தியாவின் பொருளாதார மற்றும் நிறுவன ரீதியான வளர்ச்சியின் மையத்தில் இந்தத் துறை திகழ்கிறது என்று குறிப்பிட்டார்.
கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் விரைவான பொருளாதார முன்னேற்றத்தைக் குறிப்பிட்ட திரு சி. பி. ராதாகிருஷ்ணன், குறுகிய காலத்திலேயே நாடு உலகின் நான்காவது பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுத்துள்ளதாகவும், விரைவில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கவிருப்பதாகவும் தெரிவித்தார். பொருளாதார மைல்கற்கள் முக்கியம் என்றாலும், பிரதமர் திரு நரேந்திர மோடியால் முன்வைக்கப்பட்ட 2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வை, வெளிப்படையான நிர்வாகம், நம்பகமான நிறுவனங்கள், அனைவரையும் உள்ளடக்கிய வாய்ப்புகள் மற்றும் ஒவ்வொரு குடிமகனுக்கும் செழிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது என்று அவர் கூறினார். அறநெறி சார்ந்த மாண்புகள் இல்லாத பொருளாதார வளர்ச்சி ஒருபோதும் சமூகத்திற்கு உண்மையான நன்மையை அளிக்காது என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஐயன் திருவள்ளுவரின் வரிகளை மேற்கோள் காட்டிய குடியரசுத் துணைத் தலைவர், அறவழியில் ஈட்டப்படும் செல்வம் மட்டுமே நிலையான மகிழ்ச்சியைத் தரும் என்று கூறினார். நேர்மையான தொழில் நிறுவனங்களைப் பாதுகாப்பதன் மூலமும், நெறிமுறையற்ற நடைமுறைகளுக்கு எதிராக உறுதியாகச் செயல்படுவதன் மூலமும் நியாயமான போட்டியை உறுதி செய்யுமாறு பட்டயக் கணக்காளர்களை அவர் வலியுறுத்தினார். எளிதாக வர்த்தகம் மேற்கொள்வது அவசியம் என்றாலும், அது எப்போதும் சட்ட வரம்பிற்கு உட்பட்டே இருக்க வேண்டும் என்றும், இந்தச் சமநிலையை உறுதி செய்வதில் பட்டயக் கணக்காளர்களுக்கு முக்கியப் பொறுப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில், இந்திய பட்டயக் கணக்காளர்கள் கழகத்தின் சக மதிப்பாய்வுக் குழு இணையதளத்தை குடியரசுத் துணைத் தலைவர் தொடங்கி வைத்தார். மேலும், 78-வது பட்டயக் கணக்காளர்கள் தினக் கொண்டாட்டங்களில் பொதுமக்களின் பங்கேற்பை ஊக்குவிப்பதற்காக, இந்திய அரசின் ‘மைகவ்’ (MyGov) தளத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட 'ஐசிஏஐ ஜன் உத்சவ்' (Jan Utsav) வலைப்பக்கத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280078®=3&lang=1
****
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2280138)
आगंतुक पटल : 9