நிதி அமைச்சகம்
மேற்கு வங்கத்தில் இந்திய - பங்களாதேஷ் எல்லையில் ரூ.34 கோடி மதிப்பிலான 24 கிலோ வெளிநாட்டு தங்கம் பறிமுதல்: 7 பேரை கைது செய்தது வருவாய் புலனாய்வு இயக்குநரகம்
प्रविष्टि तिथि:
01 JUL 2026 5:37PM by PIB Chennai
வெளிநாட்டுத் தங்கம் எல்லை தாண்டி கடத்தப்படுவதைத் தடுக்கும் முக்கிய நடவடிக்கையாக, மேற்கு வங்கத்தில் உள்ள இந்தியா - பங்களாதேஷ் எல்லையில் செயல்பட்டு வந்த தங்கக் கடத்தல் கும்பலை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் வெற்றிகரமாகக் கண்டறிந்து முறியடித்துள்ளது.
ரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில், மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாநகரில் இருந்து சாக்தஹா நோக்கித் தனித்தனி மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்த ஏழு பேரை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். பிடிபட்ட நபர்களைச் சோதனை செய்ததில், அதிகாரிகளின் சோதனையில் இருந்து தப்பிப்பதற்காகத் தங்களது இடுப்பில் பிரத்யேகமாகத் தைக்கப்பட்ட துணி வார்ப்பட்டைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு முத்திரையிடப்பட்ட 180 தங்கக் கட்டிகள் கண்டறியப்பட்டு மீட்டெடுக்கப்பட்டன.
மீட்கப்பட்ட வெளிநாட்டுத் தங்கம், ஒட்டுமொத்தமாகச் சுமார் 24 கிலோ எடையும், தோராயமாக ரூ.34 கோடி மதிப்பும் கொண்டது. கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட தங்கம் 1962-ஆம் ஆண்டு சுங்கச் சட்டத்தின் விதிகளின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டதுடன், கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், கடத்தல்காரர்கள் இந்தியா - பங்களாதேஷ் எல்லைக்கு அருகிலுள்ள பகுதிகளில் இருந்து தங்கத்தைச் சேகரித்து, அடுத்த கட்டக் கடத்தல்காரர்களிடம் ஒப்படைப்பதற்காகக் கொண்டு சென்றது தெரியவந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279942®=3&lang=1
****
TV/EA/SH
(रिलीज़ आईडी: 2280094)
आगंतुक पटल : 7