குடியரசுத் தலைவர் செயலகம்
மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற ‘ஆன்மீக விழிப்புணர்வு மூலம் பழங்குடியின சமூகத்தை மேம்படுத்துதல்’ என்ற நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் பங்கேற்பு
प्रविष्टि तिथि:
18 JUN 2026 3:29PM by PIB Chennai
2026 ஜூன் 18 அன்று மத்தியப் பிரதேசத்தில் உள்ள பெதுலில், பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஐஸ்வரிய விஷ்வ வித்யாலயா ஏற்பாடு செய்திருந்த ‘ஆன்மிக விழிப்புணர்வு மூலம் பழங்குடியின சமூகத்தை மேம்படுத்துதல்’ என்ற விழாவில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், நுகர்வு கலாச்சாரம் ஆதிக்கம் செலுத்தும் இன்றைய வேகமான உலகில், சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் ஆன்மீகத் தூய்மை என்பது அவசியமானதாக மாறியுள்ளது என்று குறிப்பிட்டார். இந்த அடித்தளத்தின் மூலம் தான், சமத்துவமான நடத்தை நெறிமுறைகளையும், இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் வகையிலான நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்கக்கூடிய வாழ்க்கை முறையையும் கட்டமைக்க முடியும் என்று அவர் கூறினார். மன அழுத்தம், மோதல்கள் நிறைந்துள்ள தற்போதைய உலகில், இந்தத் தேவை வரலாற்றிலேயே முன்னெப்போதையும் விட அதிகமாக உள்ளது. இத்தகைய சூழலில், ‘ஆன்மீக விழிப்புணர்வு மூலம் பழங்குடியின சமூகத்தை வலுப்படுத்துதல்’ போன்ற மாநாடுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன என்று அவர் வலியுறுத்தினார்.
இந்திய வாழ்வியல் மாண்புகளின்படி செயல்படும் எந்தவொரு அமைப்பும், சமூகத்தின் எந்தவொரு பிரிவினரின் அதிகாரமளித்தல், பொருளாதார வளர்ச்சியுடன் மட்டுமே நின்றுவிடக் கூடாது என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்று குடியரசுத்தலைவர் கூறினார். ஒரு தனிநபர் தனது சமூகப் பொறுப்புகளை உணர்ந்து, அதேவேளையில் தன்னம்பிக்கை, சுயமரியாதை, விழிப்புணர்வுடன் செயல்படும்போதுதான் உண்மையான அதிகாரமளித்தல் நிகழ்கிறது.
வளர்ச்சிக்கும் பாரம்பரிய மாண்புகளுக்கும் இடையிலான சமநிலையே வலிமையான, செழிப்பான சமூகத்தின் அடித்தளம் என்று குடியரசுத்தலைவர் கூறினார். நமது வேர்கள், அடிப்படை மாண்புகளிலிருந்து வலிமைப் பெற்று, அதே வேளையில் அவற்றை மேலும் வலுப்படுத்துவதே அர்த்தமுள்ள வளர்ச்சியாகும். இத்தகைய முழுமையான கண்ணோட்டத்துடன் செயல்படும்போதுதான், சமூகத்தில் நல்லிணக்கம், சமத்துவத்தின் வலிமையான போக்கு காணப்படும். அப்போதுதான் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான புதிய அளவுகோல்களை நம்மால் உருவாக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2274575®=3&lang=1
***
SS/RB/PD
(रिलीज़ आईडी: 2279708)
आगंतुक पटल : 33