PIB Backgrounder
azadi ka amrit mahotsav

லட்சாதிபதி பெண்களுக்கு டிஜிட்டல் அதிகாரமளிக்கும் ஷீ-லீப்ஸ் செயலி

प्रविष्टि तिथि: 01 JUL 2026 11:08AM by PIB Chennai

கிராமப்புறங்களில் உள்ள சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கு டிஜிட்டல் முறையில் அதிகாரமளிக்கும் நோக்கில் 'ஷீ-லீப்ஸ்' என்ற புதிய செயலி தொடங்கப்பட்டுள்ளது. புதுதில்லியில் நடைபெற்ற தேசிய ஊரக வளர்ச்சி மாநாட்டில் இந்த செயலியின் சேவை தொடங்கிவைக்கப்பட்டது. 'கிராமங்களின் மறுமலர்ச்சியின் மூலம் தேசத்தின் மறுமலர்ச்சி' என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த இரண்டு நாள் மாநாடு, ‘வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கு வளர்ச்சியடைந்த கிராமங்கள்’ என்ற மத்திய அரசின் தொலைநோக்கு பார்வையை நனவாக்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. கிராமப்புறப் பொருளாதாரத்தை வலுவாகவும் நிலையானதாகவும் மாற்றுவதற்கு இத்தளம் வழிவகுக்கிறது. டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் அமைப்பால் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் செயலி, லோக்ஓஎஸ் தளத்தின் கீழ் செயல்படுகிறது. இது சுயஉதவிக் குழுக்கள், கிராம அமைப்புகள், கூட்டமைப்புகளின் பல்வேறு செயல்பாடுகளை டிஜிட்டல் மயமாக்க உதவுகிறது.

இந்த டிஜிட்டல் தளம், நாடு முழுவதும் உள்ள கிராமப்புற பெண் தொழில்முனைவோருக்கு முழுமையான அதிகாரமளித்தல், பெண்களால் நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களை வலுப்படுத்துதல் ஆகியவற்றை முக்கிய நோக்கங்களாகக் கொண்டுள்ளது. கிராமப்புற உற்பத்தியாளர்களை முறையான மதிப்புக் கட்டமைப்புகளுடன் இணைத்தல், சுயஉதவிக் குழு உறுப்பினர்களின் குடும்பங்களின் நிதி நிலையை மேம்படுத்துதல், கிராமப்புற தொழில்முனைவோர் குறித்த தரவுகளை ஒருங்கிணைத்தல் ஆகிய நடவடிக்கைகளும் இந்த செயலியின் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன. இந்த செயலி 34 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் சேவைகளை வழங்க உள்ளது. இது பொருளாதார நடவடிக்கைகளை நிகழ்நேரத்தில் கண்காணித்து, உள்ளூர் முதல் தேசிய அளவிலான கொள்கை முடிவுகளை எடுக்கப் பேருதவியாக இருக்கும்.

பெண்களின் வருமான வளர்ச்சி, தொழில் திறனைக் கண்காணிப்பதன் மூலம் லட்சாதிபதி பெண்கள் திட்டத்தை இச்செயலி வலுப்படுத்தும். மத்திய அரசு லட்சாதிபதி பெண்கள் திட்டத்தின் இலக்கை 3 கோடியிலிருந்து 6 கோடிப் பெண்களாக அண்மையில் உயர்த்தியுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் லட்சாதிபதி பெண்களின் நல்வாழ்விற்காக 10 லட்சம் கோடி ரூபாய் நிதி வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இது பெண்களின் மேம்பாட்டிற்கான மத்திய அரசின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. டிஜிட்டல் உள்கட்டமைப்பு, பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, உள்ளடக்கிய நிலையான கிராமப்புற மேம்பாட்டிற்கான முக்கிய உந்துசக்தியாக ஷீ-லீப்ஸ் திகழும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279679&reg=3&lang=1

***

SS/PD


(रिलीज़ आईडी: 2279701) आगंतुक पटल : 24
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali , Bengali-TR , English , Gujarati , Urdu , हिन्दी , Odia , Telugu