PIB Backgrounder
ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்த ஜிஎஸ்டி: வரிக் கட்டமைப்பை எளிதாக்கி, இந்தியாவை வலுப்படுத்துகிறது
प्रविष्टि तिथि:
30 JUN 2026 2:15PM by PIB Chennai
இந்தியாவின் மறைமுக வரிக் கட்டமைப்பில் சரக்கு மற்றும் சேவை வரி ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு வரிகளுக்கு மாற்றாக ஒரு ஒருங்கிணைந்த கட்டமைப்பை இது உருவாக்கியுள்ளது. 'ஒரே நாடு, ஒரே வரி' என்ற தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்த இது பெரிதும் உதவியுள்ளது. 2017-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்ததிலிருந்து, தொடர்ச்சியான சீர்திருத்தங்கள், டிஜிட்டல் கட்டமைப்புகள், மத்திய-மாநில அரசுகளின் வலுவான ஒருங்கிணைப்பு மூலம் ஜிஎஸ்டி வரிமுறை தொடர் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. 2025-ம் ஆண்டில் ஜிஎஸ்டி வரிக்கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்ட அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள், குறைவான வரி விகிதங்கள், வரி விலக்குகள், எளிதான வழிமுறைகள் மூலம் இந்த அமைப்பை மேலும் எளிதாக்கியுள்ளன. இத்தகைய நடவடிக்கைகள் பலதரப்பட்ட குடும்பங்கள், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், விவசாயிகள், கைவினைக்கலைஞர்கள், ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு வணிகத் துறையினருக்குப் பயனளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
ஜிஎஸ்டி சீர்திருத்தப் பயணம்
2017 ஜூலை 1 அன்று தொடங்கப்பட்ட இந்த வரிமுறை, நாட்டின் பொருளாதாரச் சீர்திருத்தப் பயணத்தில் ஒரு வரலாற்றுச் சாதனையாகும். கடந்த ஒன்பது ஆண்டுகளில், 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை இது வலுப்படுத்தியுள்ளது. சீரமைக்கப்பட்ட வரி விகிதங்கள், தரப்படுத்தப்பட்ட நடைமுறைகள் ஆகியவற்றின் மூலம் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், பொருளாதார வளர்ச்சியை இது ஏற்படுத்தியுள்ளது. இப்புதிய வரிமுறை 17 வெவ்வேறு வரிகளையும் 13 கூடுதல் கட்டணங்களையும் உள்ளடக்கியுள்ளது.
அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள்
பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் வணிகங்களின் வரி நடைமுறைகளை எளிதாக்கவும் 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்தது. மாற்றியமைக்கப்பட்ட இந்த வரி விகிதங்களும் வரி விலக்குகளும் 2025 செப்டம்பர் 22 முதல் நடைமுறைக்கு வந்தன. இந்த சீர்திருத்தங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளை மேலும் பிரகாசமாக்கியுள்ளன.
நுகர்வோர், சிறு வணிகர்களுக்கான நன்மைகள்
மலிவான விலையில் பொருட்கள் கிடைப்பதால் நுகர்வு அதிகரித்து சேமிப்பு உயர்கிறது. காப்பீடு, அத்தியாவசிய மருந்துகளுக்கு வழங்கப்பட்டுள்ள வரி விலக்குகள் குடும்பப் பாதுகாப்பை உறுதி செய்கின்றன. சிமெண்ட், கைவினைப் பொருட்கள் போன்ற முக்கியப் பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டதால் உற்பத்திச் செலவு குறைந்து வணிகப் போட்டித்திறன் மேம்பட்டுள்ளது.
சிறிய அளவிலான வரி செலுத்துவோருக்காகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சரக்கு வழங்குநர்களுக்கான பதிவு வரம்பு 20 லட்சத்திலிருந்து 40 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. காம்போசிஷன் திட்ட வரம்பு 1.5 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முந்தைய நிலுவைத் தொகைகளுக்கான வட்டி, அபராதங்கள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
தரவு அடிப்படையிலான வரி நிர்வாகம்
தொழில்நுட்பம் சார்ந்த கட்டமைப்பை நோக்கி வரி நிர்வாகம் நகர்ந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு, தரவு பகுப்பாய்வு போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்கள் வரி ஏய்ப்பைக் கண்டறியப் பயன்படுத்தப்படுகின்றன.
பொருளாதார வளர்ச்சி
ஜிஎஸ்டி வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 2017-ல் 66.5 லட்சத்தில் இருந்து, 2026 மே மாதத்தில் 1.65 கோடியாக உயர்ந்துள்ளது. இது பொருளாதார வளர்ச்சியை பிரதிபலிக்கிறது. ஒட்டுமொத்த வரி வசூலும் ஆண்டுதோறும் சீராக உயர்ந்து வருகிறது. 2025-26 நிதியாண்டில் வரி வசூல் சுமார் 22.27 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 2026-27 நிதியாண்டின் ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் வசூல் சுமார் 4.37 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.
இந்த வரி சீர்திருத்தங்கள் பொதுமக்கள், வணிகங்களின் தேவைகளை பூர்த்தி செய்து, வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய பயணத்திற்கு வலு சேர்க்கின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279318®=3&lang=1
***
SS/PD/SH
(रिलीज़ आईडी: 2279501)
आगंतुक पटल : 11