PIB Backgrounder
கிசான் சாரதி தளம்: தொழில்நுட்பம் மூலம் விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல்
இடுகை இடப்பட்ட நாள்:
29 JUN 2026 11:28AM by PIB Chennai
மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், மத்திய வேளாண்மை, விவசாயிகள் நல அமைச்சகத்தின் கூட்டு முயற்சியால் 2021 ஜூலை மாதத்தில் தொடங்கப்பட்ட 'கிசான் சாரதி' தளம், நாட்டின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த விவசாய ஆலோசனை வழங்கும் டிஜிட்டல் தளமாகத் திகழ்கிறது. விவசாயிகளுக்குத் தகுந்த நேரத்தில், நம்பகமான, பன்மொழி ஆலோசனைகளை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும். மத்திய வேளாண் புள்ளியியல் ஆராய்ச்சி நிறுவனம், டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் ஆகியவை இணைந்து இத்தளத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகின்றன.
விவசாயிகள், வேளாண் வல்லுநர்களுக்கிடையே தொடர்பை ஏற்படுத்துவதற்காக இந்தத் தளம் 'ஊடாடும் தகவல் பரவல் அமைப்பு' என்னும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இதன் மூலம் ஆய்வகங்களில் கண்டறியப்படும் நவீன வேளாண் நுட்பங்கள் நேரடியாக விவசாயகளிடம் கொண்டு செல்லப்படுகின்றன. இந்தத் தளம் நாட்டின் 730-க்கும் மேற்பட்ட வேளாண் அறிவியல் மையங்கள், 100-க்கும் மேற்பட்ட இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் நிறுவனங்கள், 65-க்கும் அதிகமான வேளாண் பல்கலைக்கழகங்களை ஒன்றிணைத்து தேசிய அளவிலான வலுவான ஆலோசனை அமைப்பை உருவாக்கியுள்ளது.
விவசாயிகளுக்கான சேவைகள்
விவசாயிகள் தங்களுக்குத் தேவையான வானிலை அறிவிப்புகள், சந்தை நிலவரங்கள், அரசுத் திட்டங்கள் குறித்த விவரங்களை இத்தளத்தின் மூலம் எளிதாகப் பெறலாம். குறிப்பாகப் பிரதமரின் கிசான் திட்டம் போன்ற மத்திய அரசுத் திட்டங்கள் குறித்தும் இதில் அறிந்துகொள்ள முடியும். ஜூன் 25, 2026 நிலவரப்படி, 102 மத்திய அரசுத் திட்டங்கள் உட்பட மொத்தம் 610 திட்டங்கள் குறித்து இந்த இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன.
முக்கியத் தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், தோட்டக்கலைப் பயிர்கள், கால்நடை வளர்ப்பு, மீன்வளம் போன்ற பல்வேறு துறைகளுக்கான ஆலோசனைகள் 13 பிராந்திய மொழிகளில் நேரடி உரையாடல் மூலம் வழங்கப்படுகின்றன. விவசாயிகள் தங்களின் சந்தேகங்களை உள்ளூர் மொழிகளிலேயே கேட்டுத் தெளிவுபெறலாம். வாட்ஸ்அப், மொபைல் செயலி, வலைத்தளம், கிசான் அழைப்பு மையங்கள் போன்ற பல்வேறு வழிகளில் விவசாயிகள் இச்சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பயனாளிகள் எண்ணிக்கை
தற்போதைய நிலவரப்படி, நாட்டின் 37 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 768 மாவட்டங்கள், 6.63 லட்சம் கிராமங்களில் இச்சேவை விரிவடைந்துள்ளது. இத்தளத்தில் 2.95 கோடி விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்; அவர்களுள் 56.16 லட்சம் பேர் பெண் பயனாளிகள் ஆவர். வளர்ச்சியடைந்த இந்தியா இலக்கை நோக்கி நாடு முன்னேறும் வேளையில், டிஜிட்டல் விவசாயப் புரட்சியின் மூலம் விவசாயத் துறையைத் தற்சார்பு உடையதாக மாற்றுவதில் கிசான் சாரதி முக்கியப் பங்கு வகிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278757®=3&lang=1
***
SS/PD/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2278946)
வருகையாளர் எண்ணிக்கை : 6