சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உரிமம் வழங்கும் நடைமுறைகளை நெறிப்படுத்த, மருத்துவ சாதனங்கள் விதிகள் 2017-ல் திருத்தங்களுக்குப் பரிந்துரை

प्रविष्टि तिथि: 28 JUN 2026 11:12AM by PIB Chennai

தரம், பாதுகாப்பு, செயல்திறன் ஆகியவற்றை உறுதி செய்வதோடு, மருத்துவ சாதனங்களுக்கான உரிமம் வழங்கும் செயல்முறையை எளிமையாக்கி விரைவுபடுத்தும் நோக்கத்தில், 2017-ம் ஆண்டு மருத்துவ சாதன விதிகளில் திருத்தங்களைப் பரிந்துரைத்து, சுகாதாரம், குடும்ப நல அமைச்சகம் ஓர் வரைவு அறிவிப்பை அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட திருத்தங்கள், பல்வேறு வகைகளில் உள்ள மருத்துவ சாதனங்களுக்கான உற்பத்தி உரிமங்களை வழங்குவதற்கான காலக்கெடுவை முறைப்படுத்த வகை செய்கின்றன. இந்த முயற்சியானது, வணிகம் செய்வதை எளிதாக்குதல், ஒழுங்குமுறைத் திறனை மேம்படுத்துதல், நாட்டில் தரமான மருத்துவ சாதனங்கள் உரிய நேரத்தில் கிடைப்பதை எளிதாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

2017-ம் ஆண்டின் மருத்துவ சாதன விதிகளின் கீழ், மருத்துவ சாதனங்கள் நான்கு பிரிவுகளாக—வகுப்பு ஏ, வகுப்பு பி, வகுப்பு சி, வகுப்பு டி என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் வகுப்பு டி, அதிக சக்தி கொண்ட சாதனங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிற்கும் உற்பத்தி உரிமங்களுக்கான விண்ணப்பங்களைச் செயலாக்கம் செய்வதற்கு இந்த விதிகள் சட்டப்பூர்வ காலக்கெடுவை நிர்ணயிக்கின்றன. முன்மொழியப்பட்ட திருத்தங்கள் இந்தக் காலக்கெடுவைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இதன் மூலம், தரம், பாதுகாப்பு, செயல்திறன் தரநிலைகளைப் பராமரிக்கும் அதே வேளையில், விரைவான ஒழுங்குமுறை ஒப்புதல்கள் சாத்தியமாக்கும்.

ரத்த அழுத்த கணிப்புக் கருவிகள் போன்ற சாதனங்கள் 'பி' வகை மருத்துவ சாதனங்களாகும். இதன் உற்பத்தி உரிமம் வழங்குவதற்கான காலக்கெடு 140 நாட்களில் இருந்து 115 நாட்களாகக் குறைக்க முன்மொழியப்பட்டுள்ளது.

அதேபோல், இதய ஸ்டென்ட்கள், இடுப்பு, முழங்கால் இம்பிளான்ட், பிற எலும்பியல் இம்பிளான்ட் போன்ற சாதனங்களை உள்ளடக்கிய வகுப்பு சி, வகுப்பு டி மருத்துவ சாதனங்களுக்கு, உற்பத்தி உரிமம் வழங்குவதற்கான காலக்கெடு 105 நாட்களில் இருந்து 90 நாட்களாகக் குறைக்க முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த வரைவுத் திருத்தங்கள், விண்ணப்பங்களை ஆய்வு செய்தல், அறிவிக்கப்பட்ட அமைப்புகளின் தணிக்கை, இணக்கத்தைச் சரிபார்த்தல், உரிமங்களை வழங்குதல் உள்ளிட்ட உரிமம் வழங்கும் செயல்முறையின் ஒவ்வொரு கட்டத்திற்கும் வரையறுக்கப்பட்ட காலக்கெடுவை அறிமுகப்படுத்துகின்றன. இது அதிக வெளிப்படைத்தன்மையையும், செயல்திறனையும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் பெறுவதற்காக, வரைவு அறிவிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, அதிகாரப்பூர்வ அரசிதழிலும் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பான சிடிஎஸ்சிஓ (CDSCO) இணையதளத்திலும் கிடைக்கிறது. சம்பந்தப்பட்ட தரப்பினர், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் தங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

                                                                                                                             வரைவு அரசிதழ் அறிவிப்பு பின்வரும் இணைப்பில் உள்ளது : https://egazette.gov.in/WriteReadData/2026/273896.pdf

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278555&reg=48&lang=1

****

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2278583) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati