அணுசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அணுசக்தி மூலம் தாமிரம் - குளோரின் வெப்ப வேதியியல் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு உலகின் முதலாவது ஹைட்ரஜன் உற்பத்தி நிலையத்தை அணுசக்தித்துறை தொடங்கியுள்ளது

प्रविष्टि तिथि: 26 JUN 2026 9:14PM by PIB Chennai

இந்தியாவின் தூய்மையான எரிசக்தி மற்றும் மேம்பட்ட அணு தொழில்நுட்பத் திட்டத்தில் ஒரு சாதனையாக, கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் அமைந்துள்ள அதிவேக சோதனை ஈனுலையிலிருந்து  உருவாகும் அணு பதன வெப்பத்தைப் பயன்படுத்தி, தாமிரம்-குளோரின்  வெப்பவேதியியல் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு உலகின் முதலாவது ஹைட்ரஜன் உற்பத்தி நிலையத்தை அணுசக்தித் துறை இன்று (26.06.2026) தொடங்கியது. இந்த நிலையத்தை, இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் திரு ஸ்ரீகுமார் ஜி. பிள்ளை முன்னிலையில் அணுசக்தித் துறையின் செயலாளரும், அணுசக்தி ஆணையத்தின்  தலைவருமான டாக்டர் அஜித் குமார் மொஹந்தி திறந்து வைத்தார்.

மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தாமிரம்-குளோரின் வெப்பவேதியியல் நடைமுறையின் மூலம், அணுசக்தியைப் பயன்படுத்தி ஹைட்ரஜன் உற்பத்தியை உறுதிசெய்ய ஒரு தொழில்நுட்ப செயல்விளக்க மையமாக இந்த நிலையம் நிறுவப்பட்டுள்ளது. அணு பதன வெப்பத்தை ஹைட்ரஜன் உற்பத்தியுடன் வெற்றிகரமாக ஒருங்கிணைத்திருப்பது முன்னோடி தொழில்நுட்ப முன்னேற்றத்தைக் குறிப்பதோடு, மேம்பட்ட அணு உலைகளைப் பயன்படுத்தி பெருமளவில், கார்பன் இல்லாத ஹைட்ரஜன் உற்பத்திக்கு நம்பிக்கைக்குரிய பாதையையும் திறக்கிறது.

எதிர்காலத்தில் முக்கிய ஆற்றல் கடத்தியாக ஹைட்ரஜன் கருதப்படுகிறது. மேலும், தூய்மையான, நீடித்த எரிசக்தி அமைப்புகளை நோக்கிய உலகளாவிய மாற்றத்தில் இது முக்கியப் பங்கு வகிக்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது. உலக அளவில் உருவாக்கப்பட்டு வரும் பல்வேறு ஹைட்ரஜன் உற்பத்தித் தொழில்நுட்பங்களில், தாமிரம்-குளோரின் வெப்பவேதியியல் சுழற்சி, ஒப்பீட்டளவில் குறைந்த இயக்க வெப்பநிலை மற்றும் உயர் வெப்ப இயக்கவியல் செயல்திறன் காரணமாக மிகவும் நம்பிக்கைக்குரிய ஒன்றாகக் கருதப்படுகிறது. வேக அணு உலைகளிலிருந்து கிடைக்கும் அணுக்கரு வெப்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த நடைமுறை புதைபடிம எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் கணிசமாகக் குறைக்கிறது; வழக்கமான ஹைட்ரஜன் உற்பத்தி முறைகளுடன் தொடர்புடைய பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை முற்றிலுமாக நீக்குகிறது.

இந்த ஆலை அணுசக்தி உதவியுடன் ஹைட்ரஜன் உற்பத்தித் தொழில்நுட்பங்களை வணிக ரீதியாகப் பயன்படுத்துவதற்கு பெரிய அளவில் விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட எதிர்கால ஆராய்ச்சிகளுக்கும் உதவும்.

தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய டாக்டர் அஜித் குமார் மொஹந்தி, "ஹைட்ரஜன் உற்பத்தி போன்ற வளர்ந்து வரும் தூய்மையான எரிசக்தி தொழில்நுட்பங்களுடன் அணுசக்தியை ஒருங்கிணைப்பது, நிலையான எரிசக்தி எதிர்காலத்தை நோக்கிய ஒரு முக்கியப் பாதையாகும். நம்பகமான, கரியமில வாயு இல்லாத மின்சாரத்தையும், உயர்-வெப்பநிலை பதன வெப்பத்தையும் வழங்கும் தனித்துவமான திறனைக் கொண்ட அணுசக்தியானது, இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பு, கரியமில வாயு நீக்க இலக்குகள் மற்றும் நீண்டகால நிலையான வளர்ச்சி நோக்கங்களுக்குப் பங்களிப்பு செய்யும். மேலும் பெருமளவில் ஹைட்ரஜன் உற்பத்திக்கும் மிகவும் பொருத்தமானதாக உள்ளது. ஒரு மேம்பட்ட அறிவியல் கருத்தை செயல்பாட்டு யதார்த்தமாக மாற்றியமைத்த, பாபா அணு ஆராய்ச்சி மையம்இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம்  ஆகியவற்றின் விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுக்களின் தொடர்ச்சியான அர்ப்பணிப்புக்கு  வாழ்த்து தெரிவிக்கிறேன். இந்தச் சாதனை, மேம்பட்ட அணுசக்தி தொழில்நுட்பங்கள் மற்றும் தூய்மையான எரிசக்தி அமைப்புகளில் இந்தியாவின் வளர்ந்து வரும் திறன்களுக்கு ஒரு சான்றாகும்," என்றார்.

அணுசக்தி மற்றும் தூய்மையான ஹைட்ரஜன் தொழில்நுட்பங்களின் ஒருங்கிணைப்பு மூலம் தற்சார்பு இந்தியா எனும் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் இந்த ஆலையின் தொடக்க விழா முக்கிய முன்னெடுப்பாக அமைகிறது. இது உள்நாட்டுப் புத்தாக்கத்திற்கான அணுசக்தித் துறையின்  தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதோடு, ஆற்றல்மிக்க பாரதத்திற்கு ஒரு நிலையான, பாதுகாப்பான மற்றும் குறைந்த கார்பன் கொண்ட எரிசக்தி எதிர்காலத்தை உருவாக்குவதற்கான இந்தியாவின் உறுதியையும் வலுப்படுத்துகிறது.

***

TV/SMB/RJ


(रिलीज़ आईडी: 2278382) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Marathi , हिन्दी