பிரதமர் அலுவலகம்
இந்தியா - பிரான்ஸ் கண்டுபிடிப்பு மன்றத் தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
प्रविष्टि तिथि:
18 FEB 2026 12:07PM by PIB Chennai
"மேன்மைதங்கிய அவர்களே, எனது அருமை நண்பர் அதிபர் மேக்ரான் அவர்களே, இரு நாடுகளையும் சேர்ந்த கண்டுபிடிப்பாளர்களே, உங்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்! போஞ்சூர் (Bonjour)!
இன்று உலகின் இரண்டு சிறந்த கண்டுபிடிப்பு மையங்கள் ஒன்றாக இணைந்துள்ளன. இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையிலான உறவு என்பது வெறும் கண்டுபிடிப்புகளைப் பற்றியது மட்டுமல்ல; அது ஒருவருக்கொருவர் கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் பகிரப்பட்ட விழுமியங்களைப் பற்றியதுமாகும். இந்த உணர்வோடு, அதிபர் மேக்ரான் அவர்களும் நானும் இணைந்து 2026-ம் ஆண்டை 'இந்தியா - பிரான்ஸ் கண்டுபிடிப்பு ஆண்டாகக்' கொண்டாட முடிவு செய்துள்ளோம். இது வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல; புதியவற்றைக் கண்டறியவும், உலகை வழிநடத்தவும் நாம் கொண்டுள்ள கூட்டு உறுதிப்பாடாகும்.
நண்பர்களே,
இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளும் பல உத்திசார் தொழில்நுட்பத் துறைகளில் இணைந்து பணியாற்றியுள்ளன. இந்த ஒத்துழைப்பின் மூலம் கட்டியெழுப்பப்பட்ட நம்பிக்கை, நமது உறவை 'சிறப்பு உலகளாவிய உத்திசார் கூட்டாண்மை' என்ற நிலைக்கு உயர்த்தியுள்ளது. வரும் ஆண்டுகளில், அனைத்துத் துறைகளிலும் நமது கூட்டுப் படைப்பாற்றல் ஒட்டுமொத்த உலகிற்கும் ஒரு சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்ய உதவும்.
நண்பர்களே,
ஆயிரக்கணக்கான ஆண்டுகால பயணத்தில், கணிதம், மருத்துவம், உலோகம் மற்றும் கட்டிடக்கலை போன்ற துறைகளில் மனித நலனுக்காக இந்தியா பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளது. 21-ம் நூற்றாண்டில், இந்தியாவின் இளைஞர்கள் 'உலகளாவிய நன்மைக்காகக் கண்டுபிடி' (Innovate for Global Good) என்ற தாரக மந்திரத்துடன் இந்தப் பாரம்பரியத்தை முன்னோக்கி எடுத்துச் செல்கின்றனர்.
இந்தியாவின் துடிப்பான புத்தொழில் சூழல் முதல் நமது உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி ஆய்வகங்கள் வரை, ஒரு புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில், 'புத்தொழில் இந்தியா' திட்டம் இந்தியாவை உலகின் மூன்றாவது மிகப்பெரிய புத்தொழில் சூழலாக மாற்றியுள்ளது. 2014-ம் ஆண்டில் இந்தியாவில் நான்கு யூனிகார்ன் நிறுவனங்கள் மட்டுமே இருந்தன; இன்று நம்மிடம் 120-க்கும் மேற்பட்ட யூனிகார்ன்கள் உள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு 350 பில்லியன் டாலர்களுக்கும் (சுமார் 300 பில்லியன் யூரோக்கள்) அதிகம். இன்று உலகின் ஒவ்வொரு பெரிய தொழில்நுட்ப நிறுவனமும் ஏதோ ஒரு வகையில் இந்தியாவின் புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளுடன் இணைந்துள்ளன.
நண்பர்களே,
கடந்த பத்தாண்டுகளில், பள்ளிகள் முதல் தொழிற்சாலைகள் வரை கண்டுபிடிப்புகளுக்கு உகந்த சூழலை நாம் உருவாக்கியுள்ளோம். பள்ளிகளில் உள்ள அடல் புத்தாக்க ஆய்வகங்கள் முதல் வழிகாட்டுதல், கல்வி உதவித்தொகை மற்றும் மூலதனம் வரை ஒரு வலுவான வலையமைப்பை இந்தியா கொண்டுள்ளது. இன்று உலகின் மிகப்பெரிய ஹேக்கத்தான் சூழலை இந்தியா கொண்டுள்ளது. தனியார் துறை ஆராய்ச்சித் திட்டங்கள் நேரடி ஆதரவை வழங்குகின்றன, அதே சமயம் 'புத்தொழில் இந்தியா 2.0' ஆழமான தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளுக்கான மூலதனத்தைத் திரட்டுகிறது.
"நண்பர்களே,
நமது அடல் புத்தாக்க இயக்கம் வரும் பிப்ரவரி 24-ஆம் தேதியுடன் ஒரு பத்தாண்டை நிறைவு செய்கிறது. இந்த குறுகிய காலத்தில், இது உலகின் மிகப்பெரிய அடிதட்டு அளவிலான கண்டுபிடிப்பு இயக்கங்களில் ஒன்றாக மாறியுள்ளது. 10,000-க்கும் மேற்பட்ட அடல் புத்தாக்க ஆய்வகங்கள், ஒரு கோடிக்கும் அதிகமான மாணவர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களை ஒருங்கிணைத்து வருகின்றன. இந்த இயக்கம் 100-க்கும் மேற்பட்ட மையங்கள், பல ஆழமான தொழில்நுட்பப் புத்தொழில் நிறுவனங்களையும் வளர்த்தெடுத்துள்ளது. இங்கு கூடியுள்ள அனைத்துத் தொழில் துறைத் தலைவர்களும் அடல் புத்தாக்க இயக்கத்துடன் தீவிரமாக இணையுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.
நண்பர்களே,
வளர்ச்சியடைந்த இந்தியா எனும் பயணத்திற்குப் புதிய கண்டுபிடிப்புகளே இயந்திரமாகத் தேவைப்படுகின்றன. அதனால்தான் இந்த ஆண்டு பட்ஜெட்டில் கண்டுபிடிப்புச் சூழலை வலுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. படைப்பாற்றலை ஊக்குவிக்க 15,000 பள்ளிகளிலும், 500 கல்லூரிகளிலும் அடல் புத்தாக்க ஆய்வகங்கள் நிறுவப்பட உள்ளன. செயற்கை நுண்ணறிவு (ஏஐ), குவாண்டம் தொழில்நுட்பங்கள், உயிரி தொழில்நுட்பம், செமிகண்டக்டர்கள் மற்றும் தூய்மையான எரிசக்தி போன்ற துறைகளில் நாம் தீவிரமாகப் பணியாற்றி வருகிறோம். அத்துடன் ஜவுளி, ரசாயனம், விளையாட்டுப் பொருட்கள், துல்லியமான கருவிகள், மின்னணுவியல் மற்றும் உள்கட்டமைப்பு என ஒவ்வொரு துறையிலும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்போம்.
நண்பர்களே,
பெண்களால் வழிநடத்தப்படும் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு இந்தியா ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்வது குறித்து நாம் பெருமிதம் கொள்கிறோம். இன்று கிட்டத்தட்ட 50 சதவீதப் புத்தொழில் நிறுவனங்களில் குறைந்தது ஒரு பெண் இயக்குநராக உள்ளார். ஸ்டெம் எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறைகளில் ஏராளமான இளம்பெண்கள் பட்டம் பெற்று வருகின்றனர். விவசாயம், சுகாதாரம் அல்லது விண்வெளிப் பயணங்கள் என எதுவாக இருந்தாலும் பெண்கள் இன்று முன்னணியில் உள்ளனர்.
நண்பர்களே,
இந்தியாவின் வேகமும் அளவும், பிரான்ஸின் வலிமையுடன் இணையும் போது, உலகிற்குப் புதிய பாதைகள் திறக்கின்றன. இன்று இரு நாடுகளையும் சேர்ந்த சிறந்த சிந்தனையாளர்கள் ஒன்றிணைந்துள்ளனர். இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் திறமைகளைத் திறந்த மனதுடன் வரவேற்கின்றன. 2030-ம் ஆண்டிற்குள் 30 ஆயிரம் இந்திய மாணவர்களைத் தங்கள் நாட்டில் வரவேற்பதை பிரான்ஸ் இலக்காகக் கொண்டுள்ளது. இளைஞர்களின் ஆற்றலையும் சிந்தனையையும் ஒன்றிணைப்பதற்கான இது ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாகும்."
"நண்பர்களே,
இந்தியா - பிரான்ஸ் உறவில் 2026-ம் ஆண்டு உண்மையிலேயே ஒரு சிறப்பான ஆண்டாகும். இது மக்களிடையேயான பரிமாற்றங்களை ஆழப்படுத்துவதுடன், தொழில்துறைகளுக்கு இடையிலான கூட்டாண்மையை விரிவுபடுத்தும். இன்று நாம் இங்கே இந்தியாவில் கூடியிருப்பது போலவே, வரும் 2026 ஜூன் மாதம் பிரான்சில் நடைபெறவுள்ள 'இந்தியா இன்னோவேட்ஸ் 2026' (Bharat Innovates 2026) நிகழ்வின் மூலம் இந்தியாவின் சிறந்த தொழில்நுட்பப் புத்தொழில் நிறுவனங்களை நாம் அங்கு காட்சிப்படுத்துவோம். இந்தப் புத்தொழில் நிறுவனங்கள் சுகாதாரம், காலநிலை மற்றும் பாதுகாப்பு போன்ற உலகளாவிய சவால்களுக்குத் தீர்வுகளை உருவாக்கி வருகின்றன.
நண்பர்களே,
பிரான்ஸ் மற்றும் உலகெங்கிலும் உள்ள தலைவர்கள், தலைமை நிர்வாக அதிகாரிகள், முதலீட்டாளர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு நான் அன்பான அழைப்பு விடுக்கிறேன். தொழில்நுட்பம் மனிதகுலத்திற்குச் சேவை செய்யும், உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்யும் ஒரு எதிர்காலத்தை உருவாக்க இந்தியாவுடன் கைகோருங்கள். இந்த உணர்வோடு, உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது நண்பர் அதிபர் மேக்ரான் அவர்கள், இந்த நிகழ்விற்காகத் தனது நேரத்தை ஒதுக்கியதற்கும், ஆழமான கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டதற்கும், இந்தியா - பிரான்ஸ் உறவின் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கைக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு உண்மையான நண்பராகவும், இந்தியா - பிரான்ஸ் இடையிலான வலுவான நட்புறவின் அடையாளமாகவும் திகழும் அவருக்கு எனது நன்றிகள். மிக்க நன்றி."
----
(Release ID:2229476)
AD/VK/KR
(रिलीज़ आईडी: 2276921)
आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam