பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர், பிரான்ஸ் அதிபர் இடையே அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை

இடுகை இடப்பட்ட நாள்: 14 JUN 2026 8:37PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, 2026 ஜூன் 14 அன்று நீஸ்  நகரில் பிரான்ஸ் அதிபர் திரு  இம்மானுவேல் மேக்ரோனுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா, பிரான்ஸ் இடையிலான உறவுகள் சிறப்பு உலகளாவிய உத்திசார் கூட்டாண்மை என்ற நிலைக்கு உயர்த்தப்பட்ட பிறகு, இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற முதல் சந்திப்பாக இது அமைந்தது.

இருதரப்பு உறவுகளின் பல்வேறு அம்சங்கள் குறித்துத் தலைவர்கள்  விரிவான கலந்துரையாடல்களை நடத்தினர். அனைத்துத் துறைகளிலும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பின் சிறப்பான வளர்ச்சி குறித்து திருப்தி தெரிவித்த அவர்கள், பாதுகாப்பு தளங்கள், மேம்பட்ட தொழில்நுட்பங்களின் இணை-வடிவமைப்பு, இணை-மேம்பாடு, இணை-உற்பத்தியில் கவனம் செலுத்தி அதை மேலும் தீவிரப்படுத்த இசைவு தெரிவித்தனர். விண்வெளித் துறையில் ஒத்துழைப்பின் வளமான பாரம்பரியத்தை இரு தலைவர்களும் குறிப்பிட்டதுடன், மனித விண்வெளிப் பயணம், விண்வெளி சூழ்நிலை விழிப்புணர்வு ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் விவாதித்தனர். விண்வெளித்துறையில் தனியாரின் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர். சிவில் அணுசக்தித் துறையில், இந்தியாவின் சாந்தி சட்டம், சிறிய, மேம்பட்ட மாதிரி அணு உலைகள் உட்பட, ஒத்துழைப்பிற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

ஹொரைசன் 2047 செயல்திட்டத்தின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை ஆய்வு செய்த தலைவர்கள், பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்பம், புத்தாக்கம், திறமைகளின் பரிமாற்றம், மக்கள் மற்றும் கலாச்சாரப் பரிமாற்றங்கள் ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், பல்வகைப்படுத்தவும் உறுதியான யோசனைகளைப் பகிர்ந்து கொண்டனர். இந்தச் சூழலில், இருதரப்பு வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள சீரான வளர்ச்சியை அவர்கள் குறிப்பிட்டதுடன், ஐந்து ஆண்டுகளுக்குள் அதனை இரட்டிப்பாக்க ஒரு உயர்நிலைக் கட்டமைப்பை அமைக்கவும் ஒப்புக்கொண்டனர். இருதரப்பு வர்த்தகம், முதலீட்டை விரிவுபடுத்த ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கும் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை விரைவாகச் செயல்படுத்த அவர்கள் வலியுறுத்தினர். சிறு, நடுத்தர நிறுவனங்கள், விமானப் போக்குவரத்து, ரயில்வே துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் தலைவர்கள் விவாதித்தனர். கான்பூரில் விமானவியல் திறன் மேம்பாட்டிற்கான சிறப்பு மையத்தை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தை அவர்கள் வரவேற்றனர்.

மேற்கு ஆசியா, உக்ரைன் நிலவரம் உள்ளிட்ட சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்தும் தலைவர்கள் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். எவியானில் நடைபெறவுள்ள ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்க ஆவலுடன் இருப்பதாகப் பிரதமர் தெரிவித்ததுடன், உச்சிமாநாட்டிற்கு வழிவகுக்கும் ஆழமான கலந்துரையாடல்களில் இந்தியாவை ஈடுபடுத்தியதற்காக அதிபருக்கு நன்றி தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையே உள்ள  திறமையாளர்கள, மாணவர்களின் பரிமாற்றத்தை அதிகரிப்பது குறித்தும், கல்வித் தகுதிகளை பரஸ்பரம் அங்கீகரிப்பதை விரிவுபடுத்துவது குறித்தும் அவர்கள் விவாதித்தனர். புதிய கல்விக் கொள்கையின் கீழ் இந்தியாவில் தங்கள் வளாகங்களைத் திறக்குமாறு பிரான்ஸ் பல்கலைக்கழகங்களுக்குப் பிரதமர் அழைப்பு விடுத்தார்.

இரு நாடுகளின் மக்களுக்கும் மேலும் பல வாய்ப்புகளை உருவாக்குவதிலும், சர்வதேச அமைதி, நிலைத்தன்மை, செழிப்பை மேம்படுத்துவதிலும் இந்திய-பிரான்ஸ் சிறப்பு உலகளாவிய உத்திசார் கூட்டாண்மையின் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் மீண்டும் வலியுறுத்தினர். பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, பிரதமர் திரு மோடிக்கு அதிபர் மேக்ரோன் மதிய விருந்து அளித்து கவுரவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2272748&reg=48&lang=1

***

SS/BR/PD

 


(வெளியீட்டு அடையாள எண்: 2274053) வருகையாளர் எண்ணிக்கை : 43