PIB Backgrounder
பாதுகாப்புத் துறை தசாப்தம்: மேம்படுத்தப்பட்ட திறன், அதிகரித்த நம்பகத்தன்மை
प्रविष्टि तिथि:
17 JUN 2026 11:43AM by PIB Chennai
கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்ட நிர்வாகச் சீர்திருத்த நடவடிக்கைகள், பாதுகாப்புத் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. 2014 முதல் 2026 வரையிலான தசாப்தத்தில், நாட்டின் தற்காப்புத் திறனும் உலகளாவிய நம்பகத்தன்மையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. தற்சார்பு இந்தியா, இந்தியாவில் தயாரிப்போம் ஆகிய தொலைநோக்குத் திட்டங்களால், பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் உள்நாட்டுக் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கான வலுவான உள்கட்டமைப்புச் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் துறைக்கான ஒட்டுமொத்த பட்ஜெட் ஒதுக்கீடு 2013-14 நிதியாண்டில் வெறும் 2.53 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 2026-27 நிதியாண்டில் 7.85 லட்சம் கோடி ரூபாயாக வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பாதுகாப்புத் துறையின் நீடித்த உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான மூலதனச் செலவினம் 94,587 கோடி ரூபாயிலிருந்து 2.19 லட்சம் கோடி ரூபாயாகப் உயர்த்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு பாதுகாப்புத் தளவாட உற்பத்தி 2014-15 நிதியாண்டில் 46,429 கோடி ரூபாயில் இருந்து, 2025-26 நிதியாண்டில் 1.78 லட்சம் கோடி ரூபாயாகப் வளர்ச்சி கண்டுள்ளது. இதில் பொதுத்துறை பாதுகாப்பு நிறுவனங்கள் 76 சதவீத பங்களிப்பையும், தனியார்துறை 24 சதவீத பங்களிப்பையும் தந்துள்ளன. நாட்டின் பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி வரலாறு காணாத வகையில் 38,424 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. தற்போது உலகளவில் 80-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பாதுகாப்புத் தளவாடங்கள் தடையின்றி ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி நிறுவனங்களின் எண்ணிக்கை 145 ஆக அதிகரித்துள்ளது. பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதியை 2029-க்குள் 50,000 கோடி ரூபாயாக அதிகரிக்க புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி, மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீடு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டு 29,100 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பாதுகாப்புத் துறை கொள்முதல் நடைமுறைகளை எளிதாக்க 2020 கொள்முதல் கொள்கை, 2025 கொள்முதல் கையேடு ஆகியவை அமல்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்புத் துறை தொழில்துறை உரிமங்களின் எண்ணிக்கை 2015-ல் 258-ல் இருந்து, 2026 மார்ச் மாதத்தில் 834 ஆக உயர்ந்துள்ளது, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளதை எடுத்துக்காட்டுகிறது. உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு மாநிலங்களின் பாதுகாப்புத் தொழில் வழித்தடங்கள் முறையே 42,057 கோடி ரூபாய், 32,699 கோடி ரூபாய் முதலீட்டு ஒப்பந்தங்களை ஈர்த்து பிராந்திய அளவிலான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றன. பாதுகாப்புத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 6,670 கோடி ரூபாயைக் கடந்துள்ளது.
பாதுகாப்புத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க தொடங்கப்பட்ட ஐடெக்ஸ் திட்டத்தில் 676 புத்தொழில் நிறுவனங்கள், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் இணைந்துள்ளன. தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி மூலம் புதிய பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை உருவாக்க 50 கோடி ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது. பாதுகாப்புத் தளவாடங்களின் இறக்குமதியைக் குறைத்து, உள்நாட்டுத் தயாரிப்புகளை 65 சதவீதமாக உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 200 ஆண்டுகள் பழமையான ஆயுதத் தொழிற்சாலை வாரியம் 2021-ம் ஆண்டில் கலைக்கப்பட்டு, ஏழு புதிய பாதுகாப்புப் பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றியமைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் ஆகாஷ் ஏவுகணை, தேஜஸ் போர் விமானம், மிஷன் சக்தி செயற்கைக்கோள் எதிர்ப்பு சோதனை, ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பல், பிரசந்த் இலகுரக ஹெலிகாப்டர் போன்ற பல உள்நாட்டுத் தொழில்நுட்பத் தயாரிப்புகள் பாதுகாப்புத்துறையின் சாதனைகளாக திகழ்கின்றன. அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், ஜப்பான் போன்ற நட்பு நாடுகளுடன் பாதுகாப்புத் தளவாடக் கூட்டாண்மை வலுப்படுத்தப்பட்டுள்ளது. இளைஞர்களைப் பாதுகாப்புப் படையில் சேர்க்கும் அக்னிபாத் திட்டம் 2022-ல் தொடங்கப்பட்டு வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியா 2047-ஐ முன்னேறிக் கொண்டிருக்கும் வேளையில், பாதுகாப்புத் தயார்நிலையானது புத்தாக்கம், மீள்தன்மை, தற்சார்பு ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்டு வருகிறது. கடந்த தசாப்தத்தில் கட்டமைக்கப்பட்ட வலுவான அடித்தளம், சர்வதேச அளவிலான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்ப இந்தியாவை நிலைநிறுத்திக் கொள்வதற்கான வலிமையை வழங்குகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273854®=3&lang=1
***
SS/PD/KR
(रिलीज़ आईडी: 2273949)
आगंतुक पटल : 15