குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
'அகத்தியர் – ஒருமைப்பாட்டின் குரு’ நூலை வெளியிட்டார் குடியரசு துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன்
பாரதத்தின் கலாச்சார ஒருமைப்பாட்டின் அடையாளம் அகத்தியர்: குடியரசு துணைத் தலைவர்
பாரதத்தை ஒருங்கிணைத்தவர்கள்
முனிவர்களும் ரிஷிகளும்: குடியரசு துணைத் தலைவர்
பாரதத்தின் ஒற்றுமை என்பது நவீன கருத்தல்ல; அது,தொன்மையான நாகரிக உண்மை: குடியரசு துணைத் தலைவர்
தமிழைக் கொண்டு வளர்ந்தவர்கள் அதிகம், ஆனால் இன்று தமிழுக்காக உழைத்தவர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளார்கள்: குடியரசு துணைத் தலைவர்
தேசியம் என்றாலே தமிழுக்கு எதிரானது என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது, அதை தகர்க்க வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது: குடியரசு துணைத் தலைவர்
பாரதத்தில் எந்த சக்தியாலும் பிரிவினையை ஏற்படுத்த முடியாது: குடியரசு துணைத் தலைவர்
प्रविष्टि तिथि:
15 JUN 2026 6:46PM by PIB Chennai
குடியரசு துணைத் தலைவர் திரு. சி. பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் இன்று புதுதில்லியில் உள்ள குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘அகத்தியர் – ஒருமைப்பாட்டின் குரு’ என்ற நூலை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர், தமிழ் இலக்கியம், பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் பணியில் 95 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாகச் செயல்பட்டு வரும் கலைமகள் இதழின் சேவையைப் பாராட்டினார். தமிழறிஞர்கள், வரலாற்றாசிரியர்கள், அறிவியலாளர்கள் மற்றும் தேசியத் தலைவர்கள் பலர் தங்களது எழுத்துகளால் கலைமகளின் தரத்தையும் நம்பகத்தன்மையையும் உயர்த்தியிருப்பதை அவர் நினைவுகூர்ந்தார்.
பாரதத்தின் நாகரிக ஒற்றுமையைப் பற்றி பேசும்போது அரசர்களையும் அரசியல் அமைப்புகளையும் நாம் நினைவுகூருகிறோம். ஆனால் உண்மையான ஒருமைப்பாட்டை உருவாக்கியவர்கள் நாட்டின் முனிவர்களும் ரிஷிகளும்தான் என்று குறிப்பிட்ட குடியரசு துணைத் தலைவர், அவர்களில் அகத்தியர் இந்தியாவின் கலாச்சார மற்றும் ஆன்மிக ஒற்றுமையின் மிகப் பெரிய அடையாளமாகத் திகழ்கிறார் என்றார்.
வட இந்திய மற்றும் தென்னிந்திய மரபுகளில் சமமாகப் போற்றப்படும் அகத்தியர், இமயமலை முதல் இந்து மகாசமுத்திரம் வரை பரந்து விரிந்த பாரதத்தின் ஒருமைப்பாட்டின் சின்னமாக விளங்குகிறார் என்று அவர் கூறினார். தமிழகத்தின் பொதிகை மலையும் காவிரியும் அகத்தியரை நினைவூட்டுகின்றன என்றும், தமிழ் இலக்கண வளர்ச்சிக்கும் தமிழ்ச் சங்க மரபுக்கும் அவர் ஆற்றிய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது என்றும் தெரிவித்தார். பாரதத்தின் வடக்கு – தெற்கு கலாச்சார இணைப்பை அகத்தியர் பிரதிபலிக்கிறார் என்றும் தெரிவித்தார்.
பாரதத்தின் மொழிகள் ஒன்றுக்கொன்று போட்டியிடுபவை அல்ல; மாறாக
பரஸ்பர மரியாதை மற்றும் நீண்டகால கலாச்சாரப் பரிமாற்றங்களின் மூலம் ஒன்றையொன்று வளப்படுத்திய சகோதர மொழிகள் என்பதையும் அகத்தியரின் மரபு உணர்த்துவதாக அவர் கூறினார்.
தமிழைக் கொண்டு வளர்ந்தவர்கள் அதிகம், ஆனால் இன்று தமிழுக்காக உழைத்தவர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளார்கள் என தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்களின் தமிழ்ப் பணியும் தியாக வாழ்வும் சரியான முறையில் அனைவருக்கும் கொண்டு செல்லப்படாததைப் பற்றிய வருத்தத்தை பகிர்ந்து கொண்ட குடியரசு துணைத் தலைவர், கரையானுக்கு இரையாக வேண்டிய தமிழைக் காத்தவர் தமிழ்த் தாத்தா உ.வே.சா என புகழ்ந்துரைத்தார்.
பாரதத்தின் ஒற்றுமை என்பது இன்றைய கருத்தாக்கம் அல்ல; ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக முனிவர்களும் ஞானிகளும் வளர்த்தெடுத்த தொன்மையான நாகரிக உண்மை என்பதை அகத்தியரின் வாழ்க்கையும் பாரம்பரியமும் நமக்கு நினைவூட்டுகின்றன என்றார்.
அனைத்து மொழிகளுக்கும் சிறப்புகள் உள்ளது எனக் குறிப்பிட்ட குடியரசு துணைத் தலைவர், சிலர் மொழி பேதங்களை வளர்த்து வீண் விவாதங்களை,பிரிவினை எண்ணங்களை வளர்க்கின்றனர் எனக் கூறினார்.
பாரதத்தில் எந்த சக்தியாலும் பிரிவினையை ஏற்படுத்த முடியாது என உறுதிபட தெரிவித்த அவர், இளைஞர்களுக்கு நமது பண்பாடு கலாச்சாரம் பற்றி நேர்மறை எண்ணங்கள் ஏற்படுத்தும் வகையில் விவாதங்கள் நடைபெற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
தேசியம் என்றாலே தமிழுக்கு எதிரானது என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது எனக் கூறிய அவர், அதை தகர்க்க வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது எனக் கூறினார்.
தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்கள் அகத்தியர் பெயரால் அகத்தீஸ்வரர் கோயில் என அமைந்திருக்கின்றன எனக் குறிப்பிட்ட அவர், காசியிலும் தமிழகத்திலும் ஒரே பெயரில் கோயில் அமைந்துள்ளது நமது பண்பாட்டின் ஒருமைப்பாட்டுக்கு சான்று எனக் கூறினார்.
ஆங்கிலேயர்கள் வராமல் இருந்தால் இந்தியா ஒன்றுபட்டிருக்காது என்ற கருத்தாக்கம் என்பது இட்டுக் கட்டியது எனக் கூறிய அவர், பாரதத்தின் பண்பாடும் கலாச்சாரமும் தம்மை எப்பொழுதும் இணைத்தே வந்துள்ளது எனப் பேசினார்.
பாரதத்தின் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என அனைத்துத் திசைகளிலும் அகத்தியர் குறித்த செய்திகள், கதைகள் மற்றும் மரபுகள் பரவி இருப்பதை ஆராய்ச்சி அடிப்படையில் நூலாசிரியர்கள் மிகச் சிறப்பாக எடுத்துரைத்திருப்பதாக குடியரசு துணைத் தலைவர் பாராட்டினார். அகத்தியரின் பெருமையையும் பாரதத்தின் கலாச்சார ஒருமைப்பாட்டையும் உலகளவில் எடுத்துச் செல்லும் முக்கிய நூலாக இது அமையும் என்றார்.
நிகழ்ச்சியில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் அகில பாரதிய பிரச்சார் பிரமுக் திரு. சுனில் அம்பேகர், கலைமகள் இதழின் ஆசிரியர் திரு. கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன், மூத்த எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் திரு. மாலன், நூலாசிரியர்களான திரு. ஓ. ஷாமா பட் மற்றும் டாக்டர் எம். என். சுதா, நூலின் தமிழாக்கத்தை செய்த பேராசிரியர் கல்யாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
****
TV/SH
(रिलीज़ आईडी: 2273219)
आगंतुक पटल : 43