பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
azadi ka amrit mahotsav

ஆறு மாநிலங்களில் உள்ள 19 மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில், மூன்று பன்முக ரயில் வழித்தடங்கள் அமைக்கும் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 05 MAY 2026 7:14PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, 05-மே-2026 அன்று ரயில்வே அமைச்சகத்தின் 3 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 23,437 கோடியாகும். இத்திட்டங்கள் பின்வருமாறு:

அ) நாக்தா – மதுரா இடையே, 3-வது, 4-வது ரயில் வழித்தடம்

ஆ) குண்டக்கல் – வாடி இடையே, 3-வது, 4-வது ரயில் வழித்தடம்

இ) புர்வால் – சீதாபூர் இடையே, 3-வது, 4-வது ரயில் வழித்தடம்

ரயில் வழித்தடங்களை அதிகரிப்பதன் மூலம், ரயில் போக்குவரத்தை வெகுவாக மேம்படுத்தும். இதன் விளைவாக, இந்திய ரயில்வேயின் செயல்பாட்டுத் திறன், சேவை மீதான நம்பகத்தன்மை அதிகரிக்கும். இந்த 'பன்முக வழித்தட'த் திட்டங்கள், ரயில்வேயின் செயல்பாடுகளைச் சீராக பராமரிக்கவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் உதவிடும். இத்திட்டங்கள் பிரதமர் திரு நரேந்திர மோடியின் 'புதிய இந்தியா' என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப அமைந்துள்ளன. இப்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் விரிவான வளர்ச்சிப் பணிகளின் மூலம் வேலைவாய்ப்பு, சுயதொழில் வாய்ப்புகள் மேம்படுத்தப்பட்டு, தற்சார்பு நிலையை அடைய வழிவகுக்கும்.

ஒருங்கிணைந்த திட்டமிடல், சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் மேற்கொள்ளப்படும் ஆலோசனைகள் மூலம், பல்வேறு போக்குவரத்து முறைகளை இணைக்கும் வசதி, சரக்குகளைக் கையாளுதல் திறனை  மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, 'பிரதமரின் விரைவு சக்தி தேசிய முன்னோடித் திட்டத்தின்' கீழ், இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டங்கள் மக்கள், சரக்குகள் மற்றும் சேவைகளுக்கு  தடையற்ற போக்குவரத்திற்கான இணைப்பை வழங்கும்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள 19 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த 3 திட்டங்கள், இந்திய ரயில்வேயின் தற்போதைய கட்டமைப்பை 901 கி.மீ. அளவுக்கு விரிவுபடுத்த உதவிடும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2258123&reg=3&lang=2

(Release ID: 2258123)

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2269828) வருகையாளர் எண்ணிக்கை : 39