ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜல் ஜீவன் இயக்கம் 2.0-இன் கீழ் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுடன் சீர்திருத்தங்கள் சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின

प्रविष्टि तिथि: 02 JUN 2026 7:36PM by PIB Chennai

இந்தியாவின் கிராமப்புறங்களுக்குத் தடையற்ற, பாதுகாப்பான மற்றும் தரமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்யும் நோக்கில், ஜல் ஜீவன் இயக்கம் 2.0-இன் கீழ் தமிழ்நாடு, புதுச்சேரி, அருணாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களுடன் சீர்திருத்தங்கள் சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்திடப்பட்டன.

 

மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் திரு. சி.ஆர். பாட்டீல், இணை அமைச்சர் திரு. வி. சோமண்ணா ஆகியோர் முன்னிலையில், இணையவழி வாயிலாக நடைபெற்ற தனித்தனி கூட்டங்களில் அந்தந்த மாநில முதல்வர்கள் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

 

இந்த ஒப்பந்தம், கிராம ஊராட்சிகளின் தலைமையில், பொதுமக்களின் பங்களிப்புடன் கிராமப்புறக் குடிநீர் விநியோகக் கட்டமைப்பை நீண்ட காலத்திற்குப் பராமரிப்பதே முக்கிய நோக்கமாகும். இது, 2047-க்குள் 'வளர்ச்சியடைந்த இந்தியா' என்ற தேசிய இலக்கை எட்ட வழிவகுக்கும்.

 

தமிழ்நாடு

 

மத்திய அமைச்சர் திரு. சி.ஆர். பாட்டீல் முன்னிலையில், தமிழக முதல்வர் திரு. ச. ஜோசப் விஜய் மற்றும் மாநில உயர் அதிகாரிகள் இணையவழி வாயிலாகக் கலந்துகொண்டனர். தேசிய ஜல் ஜீவன் இயக்கத்தின் இணைச் செயலாளர் திரு. டி. செந்தில் பாண்டியன் மற்றும் தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ககன்தீப் சிங் பேடி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

 

தமிழக முதல்வர் திரு. ச. ஜோசப் விஜய் ஆற்றிய உரை:

 

* ஜல் ஜீவன் இயக்கத்தை அமல்படுத்துவதற்கான காலக்கெடுவை 2028 டிசம்பர் வரை நீட்டித்ததற்காக மத்திய அரசுக்கும், ஜல் சக்தி அமைச்சகத்திற்கும் தனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொண்டார்.

* தமிழகத்தில் வற்றாத ஜீவநதிகள் போன்ற பெரிய நீர் ஆதாரங்கள் இல்லாததால், நம்பகமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யப் பெருமளவிலான உள்கட்டமைப்பு மற்றும் நீண்ட காலத் திட்டமிடல் அவசியமாகிறது என்று குறிப்பிட்டார்.

* தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி போன்ற கடுமையான நீர் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய, ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட காவிரி கூட்டுக் குடிநீர் திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

* மத்திய அரசின் நிதி உதவி, கிராமப்புற குடிநீர் உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், ஒவ்வொரு கிராமப்புறக் குடும்பத்திற்கும் நிலையான முறையில் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யவும் உதவும் என்று கூறி, மத்திய-மாநில அரசுகளின் கூட்டு ஒத்துழைப்பு இந்த சேவையை மேலும் வலுப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

 

மத்திய அமைச்சர் திரு. சி.ஆர். பாட்டீல் வழங்கிய ஆலோசனைகள்:

 

* ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் தமிழ்நாடு இதுவரை செய்துள்ள சிறப்பான முன்னேற்றங்களைப் பாராட்டிய அமைச்சர், விடுபட்ட பணிகளையும் மாநில அரசு விரைவில் முடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

* நிதி ஆணையக் குழுவின் மானியங்கள் மற்றும் கிராமப்புற வளர்ச்சி நிதிகளைத் திறம்படப் பயன்படுத்தி, கிராம அளவில் மழைநீர் சேகரிப்பு, நீர் ஆதார நிலைத்தன்மை, நீர் பாதுகாப்பு ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்துமாறு தமிழக அரசை அவர் கேட்டுக்கொண்டார்.

 

புதுச்சேரி

 

மத்திய அமைச்சர் திரு. சி.ஆர். பாட்டீல் முன்னிலையில், புதுச்சேரி முதல்வர் திரு. என். ரங்கசாமி மற்றும் அதிகாரிகள் இணையவழி வாயிலாகக் கலந்துகொண்டனர். மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திருமதி. ஸ்வாதி மீனா நாயக் மற்றும் புதுச்சேரி பொதுப்பணித்துறையின் ஆணையர் மற்றும் செயலாளர் மருத்துவர் ஏ. முத்து அம்மா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்; இதனைப் புதுச்சேரி இணை உள்ளுறை ஆணையர் திரு. ரவி தீப் சிங் சாஹர் பரிமாறிக்கொண்டார்.

 

புதுச்சேரி முதல்வர் திரு. என். ரங்கசாமி ஆற்றிய உரை:

 

* இத்திட்டத்தை வெற்றிகரமாக வடிவமைத்துச் செயல்படுத்தியதற்காகப் பிரதமருக்கும், ஜல் சக்தி அமைச்சகத்திற்கும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். இத்திட்டம் கிராமப்புற மக்களின் ஆரோக்கியம், கண்ணியம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திய மிக முக்கியமான மக்கள் நலத் திட்டமாகும் என்று அவர் வர்ணித்தார்.

* புதுச்சேரி உள்ளாட்சித் துறை, ஜல் ஜீவன் இயக்கம் 2.0-இன் நோக்கங்களை முழுமையாக நிறைவேற்ற ஜல் சக்தி அமைச்சகத்துடன் நெருங்கிச் செயல்படத் தயாராக உள்ளது என்று உறுதி அளித்தார்.

* நீர் ஆதாரங்களின் நிலைத்தன்மை, குடிநீர் தரத்தைக் கண்காணிக்க டிஜிட்டல் அமைப்புகளைப் பயன்படுத்துதல், குறைகளைத் தீர்ப்பதற்கான இணையவழி வசதிகள் மற்றும் பொதுமக்களால் நிர்வகிக்கப்படும் குடிநீர் அமைப்புகளை ஊக்குவிப்பது போன்றவற்றுக்குத் தங்களின் அரசு முன்னுரிமை அளிக்கும் என்று குறிப்பிட்டார்.

 

மத்திய அமைச்சர் திரு. சி.ஆர். பாட்டீல் வழங்கிய ஆலோசனைகள்:

 

* கடந்த 2021-ஆம் ஆண்டிலேயே புதுச்சேரி 'அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர்' சான்றிதழைப் பெற்று சாதனை படைத்ததற்காகப் பாராட்டு தெரிவித்தார்.

* இனிவரும் காலங்களில், தடையற்ற மற்றும் நம்பகமான குடிநீர் சேவையைத் தொடர்ந்து வழங்குவதிலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், கிராம ஊராட்சி அளவிலான சேவை வழங்கல், கிராம அடையாள அட்டை உருவாக்கம் மற்றும் திருத்தப்பட்ட பராமரிப்புக் கொள்கைகளை அறிவிப்பதிலும் புதுச்சேரி கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

 

* அருணாச்சலப் பிரதேசம்:  இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் திரு. பெமா காண்டு, மாநிலத்தின் கடினமான மலைப்பாங்கான நிலப்பரப்பைக் குறிப்பிட்டு, நீர் ஆதாரங்களைப் பாதுகாக்கக் கிராம மக்களின் பங்களிப்போடு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.

* ஜார்கண்ட்: முதல்வர் திரு. ஹேமந்த் சோரன் பேசுகையில், வனப்பகுதிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் குழாய்கள் பதிப்பதில் உள்ள சவால்களைக் கடந்து பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்றார். கிராம அளவில் மகளிர் குழுக்கள் மூலம் குடிநீர் கட்டமைப்புகள் பராமரிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

* நாகாலாந்து:  முதல்வர் திரு. நெய்பியூ ரியோ, மலைப்பாங்கான கிராமங்களில் தூரத்திலுள்ள நீரூற்றுகளை நம்பியிருந்த மக்களுக்கு, இந்த இயக்கம் பாதுகாப்பான குடிநீரை இல்லங்களுக்கே கொண்டு சேர்த்து பெண்களின் சிரமத்தைக் குறைத்துள்ளதாகத் தெரிவித்துத் தனது நன்றியைப் பகிர்ந்து கொண்டார்.

 

மத்திய ஜல் சக்தித் துறைச் செயலாளர் திரு. அசோக் கே. கே. மீனா பேசுகையில், இந்த ஒப்பந்தம் வெறும் குழாய் உள்கட்டமைப்பை அமைப்பது மட்டுமல்லாமல், கிராம அளவில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கிராமக் குடிநீர்-சுகாதாரக் குழுக்களை முழு அதிகாரமுடைய தற்சார்பு அமைப்புகளாக மாற்றுவதற்கான மத்திய-மாநில அரசுகளின் கூட்டு உறுதிப்பாடு என்று குறிப்பிட்டார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2268118&reg=3&lang=1

Release ID: 2268118

****

TV/EA/SH


(रिलीज़ आईडी: 2268183) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , हिन्दी , Gujarati