பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர், 2026 மார்ச் 28 அன்று உத்தரப் பிரதேசத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்

சுமார் ₹11,200 கோடி செலவில் உருவாக்கப்பட்ட நொய்டா சர்வதேச விமான நிலையத்தின் முதற்கட்டத்தை பிரதமர் திறந்து வைக்கிறார்

प्रविष्टि तिथि: 26 MAR 2026 9:52AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி 2026 மார்ச் 28 அன்று உத்தரப் பிரதேசத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். காலை சுமார் 11:30 மணியளவில், அவர் கௌதம் புத்த நகர், ஜேவரில் உள்ள நொய்டா சர்வதேச விமான நிலையத்தின் முனையக் கட்டடத்தைப் பார்வையிடுவார். அதனைத் தொடர்ந்து, நண்பகல் சுமார் 12 மணியளவில், பிரதமர் நொய்டா சர்வதேச விமான நிலையத்தின் முதற்கட்டத்தைத் திறந்து வைத்து, அந்த நிகழ்ச்சியில் பொது மக்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.

நொய்டா சர்வதேச விமான நிலையத்தின் திறப்பு விழா, இந்தியாவை ஒரு உலகளாவிய விமானப் போக்குவரத்து மையமாக மாற்றுவதற்கான பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். தேசிய தலைநகர் பிராந்தியத்திற்கான ஒரு முக்கிய சர்வதேச நுழைவாயிலாகக் கருதப்படும் இந்த விமான நிலையம், நாட்டின் விமான நிலைய உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும், பிராந்திய, சர்வதேச இணைப்பை மேம்படுத்துவதிலும் ஒரு முக்கிய படியாக விளங்குகிறது. நொய்டா சர்வதேச விமான நிலையம், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்குத் துணையாக, தில்லி தேசிய தலைநகரப் பிராந்தியத்திற்கான இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விரு விமான நிலையங்களும் இணைந்து ஒரு ஒருங்கிணைந்த விமானப் போக்குவரத்து அமைப்பாகச் செயல்பட்டு, நெரிசலைக் குறைத்து, பயணிகளின் கொள்ளளவை விரிவுபடுத்தி, தில்லி தேசிய தலைநகரப் பகுதியை முன்னணி உலகளாவிய விமானப் போக்குவரத்து மையங்களில் ஒன்றாக நிலைநிறுத்தும்.

நொய்டா சர்வதேச விமான நிலையம், இந்தியாவின் மிகப்பெரிய புதிய விமான நிலையத் திட்டங்களில் ஒன்றாகும். நொய்டா சர்வதேச விமான நிலையத்தின் முதல் கட்டம், பொது-தனியார் ஒத்துழைப்பு மாதிரியின் கீழ் சுமார் ₹11,200 கோடி மொத்த செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையம் ஆரம்பத்தில் ஆண்டுக்கு 1 கோடியே 20 லட்சம் பயணிகளைக் கையாளும் திறனைக் கொண்டிருக்கும். இது முழுமையாக மேம்படுத்தப்பட்டவுடன் ஆண்டுக்கு 7 கோடி பயணிகள் வரை கையாள முடியும். இது பெரிய ரக விமானங்களைக் கையாளும் திறன் கொண்ட 3,900 மீட்டர் ஓடுபாதையையும், அனைத்து பருவநிலைகளிலும், 24 மணி நேர செயல்பாடுகளை கொண்டிருக்கும் வகையில் இன்ஸ்ட்ரூமென்ட் லேண்டிங் சிஸ்டம் (ILS) உள்ளிட்ட நவீன அமைப்புகளைக் கொண்டுள்ளது.

 

இந்த விமான நிலையம், ஒருங்கிணைந்த சரக்கு முனைய மண்டலங்களைக் கொண்ட பல்முனை சரக்கு மையம் உட்பட, ஒரு வலுவான சரக்குப் போக்குவரத்துச் சூழல் அமைப்பையும் கொண்டுள்ளது. இந்த சரக்குப் போக்குவரத்து வசதியானது ஆண்டுக்கு 2.5 லட்சம் மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான சரக்குகளைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதை சுமார் 18 லட்சம் மெட்ரிக் டன்கள் வரை விரிவாக்க முடியும். அத்துடன், 40 ஏக்கர் பரப்பளவில் பிரத்யேகமான பராமரிப்பு, பழுதுபார்ப்பு, முழுமையான சீரமைப்பு வசதியையும் இது உள்ளடக்கியுள்ளது.

ஒரு நீடித்த, எதிர்காலத்திற்குத் தயாரான உள்கட்டமைப்புத் திட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ள நொய்டா சர்வதேச விமான நிலையம், திறன்மிக்க அமைப்புகளையும் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வுள்ள நடைமுறைகளையும் ஒருங்கிணைத்து, நிகர-பூஜ்ஜிய உமிழ்வு நிலையமாகச் செயல்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் கட்டடக்கலை வடிவமைப்பு இந்தியப் பாரம்பரியத்திலிருந்து உத்வேகம் பெற்று, கலாச்சார அழகியலை நவீன உள்கட்டமைப்புடன் ஒன்றிணைக்கிறது.

யமுனா விரைவுச்சாலைப் பகுதியில் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள நொய்டா சர்வதேச விமான நிலையம், சாலை, ரயில், மெட்ரோ, பிராந்திய போக்குவரத்து அமைப்புகள் என அனைத்துடனும் தடையற்ற ஒருங்கிணைப்பைக் கொண்டுள்ளது. இது, பயணிகள், சரக்குகள் என இரண்டிற்குமான திறன் வாய்ந்த போக்குவரத்து இணைப்பை உறுதிசெய்யும் ஒரு பல்முனைப் போக்குவரத்து மையமாகத் திகழும்.

 

(Release ID: 2245509)

TV/PLM/KR

 


(रिलीज़ आईडी: 2267854) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , Odia , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Bengali-TR , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam