பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் மோதல் குறித்து மாநிலங்களவையில் பிரதமர் உரையாற்றினார்

प्रविष्टि तिथि: 24 MAR 2026 3:37PM by PIB Chennai

மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் மோதலால் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்த அரசின் நிலைப்பாட்டை முன்வைத்து, பிரதமர் திரு நரேந்திர மோடி மாநிலங்களவையில் உரையாற்றினார். மூன்று வாரங்களுக்கும் மேலாக நீடித்து வரும் இந்தப் போர், இந்தியாவிற்கு மிகவும் கவலையளிக்கும் விளைவுகளுடன் ஒரு கடுமையான உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், இந்த மோதல் இந்தியாவின் வர்த்தகப் பாதைகளைச் சீர்குலைப்பதாகவும், பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் உரங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் வழக்கமான விநியோகத்தைப் பாதிப்பதாகவும் தெரிவித்தார். வளைகுடா நாடுகளில் வசிக்கும்  கிட்டத்தட்ட ஒரு கோடி இந்தியர்களின் பாதுகாப்பும் வாழ்வாதாரமும் ஆழ்ந்த கவலைக்குரிய விஷயமாக உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். "இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில், இந்திய நாடாளுமன்றத்தின் இந்த மேலவையிலிருந்து அமைதி மற்றும் பேச்சுவார்த்தைக்கான ஒருமித்த குரல் உலகம் முழுவதும் ஒலிப்பது அவசியமாகும்," என்று திரு மோடி வலியுறுத்தினார்.

 

இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை முன்வைத்த அவர், வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களையும், ஹார்முஸ் நீரிணை போன்ற சர்வதேச நீர்வழிகளுக்கு இடையூறு விளைவிப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது  என்றும், பொதுமக்கள், பொது உள்கட்டமைப்பு, மற்றும் எரிசக்தி, போக்குவரத்து தொடர்பான உள்கட்டமைப்புகள் மீதான அனைத்துத் தாக்குதல்களையும் இந்தியா திட்டவட்டமாக எதிர்த்துள்ளது என்றும் அறிவித்தார்.

நீண்டகால அபாயங்களைச் சுட்டிக்காட்டிய பிரதமர், எண்ணெய், எரிவாயு, உரங்கள் போன்ற அத்தியாவசியப் பொருளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் பாதுகாப்பாக வந்து சேர்வதை உறுதி செய்வதே இந்தியாவின் நோக்கம் என்றாலும், இந்தப் போரினால் ஏற்பட்ட உலகளாவிய இடையூறுகள் நீடித்தால், அது தவிர்க்க முடியாமல் கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்று கவலை தெரிவித்தார். "எனவே, கடந்த பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து மீள்திறன் கட்டமைப்பு நடவடிக்கைகளையும் இந்தியா துரிதப்படுத்துகிறது," என்று திரு மோடி வலியுறுத்தினார்.

 

நிலைமை ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டிருக்கிறது என்பதை ஒப்புக்கொண்ட பிரதமர், எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு இந்தியக் குடிமக்களைக் கேட்டுக்கொண்டார். இந்தப் போரின் பாதகமான விளைவுகள் நீண்ட காலத்திற்கு நீடிக்க வாய்ப்புள்ளது என்று எச்சரித்த அதே வேளையில், அவர் நாட்டு மக்களுக்கு உறுதியான வாக்குறுதியை அளித்தார். "அரசு விழிப்புடன் உள்ளது, அது தயாராக இருக்கிறது. மேலும் அது தனது வியூகத்தை வகுத்து, ஒவ்வொரு முடிவையும் மிகுந்த தீவிரத்துடன் எடுத்து வருகிறது. இந்த நாட்டு மக்களின் நலனே எங்களுக்குப் பிரதானம்; இதுவே நமது அடையாளம், இதுவே நமது வலிமை," என்று பிரதமர் குறிப்பிட்டார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2244438&reg=3&lang=1     

***

 (Release ID: 2244438)

TV/RB/KR


(रिलीज़ आईडी: 2267830) आगंतुक पटल : 25
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Bengali , Bengali-TR , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam