PIB Backgrounder
இந்தியாவின் திவால்நிலைக் கட்டமைப்பு
நிதி நெருக்கடியிலிருந்து கட்டமைக்கப்பட்ட தீர்வு வரை
இடுகை இடப்பட்ட நாள்:
28 MAY 2026 11:52AM by PIB Chennai
திவால் மற்றும் நொடித்துப்போதல் சட்டம் (ஐபிசி) 2016 மூலம் இந்தியாவின் திவால்நிலைக் கட்டமைப்பு ஒரு பெரிய மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. இது நிதி நெருக்கடிகளைத் தீர்ப்பதற்காக, கடன் வழங்குநரால் இயக்கப்படுகின்ற, காலவரையறைக்கு உட்பட்ட ஓர் ஒருங்கிணைந்த வழிமுறையை அறிமுகம் செய்தது. பல ஆண்டுகளாக, இந்தச் சட்டம், மீட்பு வழிமுறைகளை வலுப்படுத்தி, தீர்வு முடிவுகளை மேம்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, மார்ச் 2026 வரை அங்கீகரிக்கப்பட்ட தீர்வுத் திட்டங்கள் மூலம் கடன் வழங்குநர்கள் ஏறத்தாழ ரூ. 4.32 லட்சம் கோடியைப் பெற்றுள்ளனர். இந்த அனுபவத்தின் அடிப்படையில், திவால் மற்றும் நொடித்துப்போதல் (திருத்த) சட்டம் 2026, தாமதங்களைக் குறைக்கவும், கடன் வழங்குநர்களின் மேற்பார்வையை வலுப்படுத்தவும், நடைமுறைத் தெளிவை மேம்படுத்தவும் பல சீர்திருத்தங்களை அறிமுகம் செய்கிறது. இந்தத் திருத்தம், திவால் தீர்வு மற்றும் நொடித்துப்போதல் நடைமுறையை மிகவும் திறமையானதாகவும், கணிக்கக்கூடியதாகவும், தீர்வு நோக்கியதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியாவில் திவால்நிலைத் தீர்வை மேம்படுத்துதல்
சுதந்திரத்திற்குப் பின், இந்திய நிறுவனங்கள் இயல்பான வணிக நடவடிக்கைகளை ஆதரிக்கும் சட்டக் கட்டமைப்புகளுக்குள் இயங்கின. நிதி நெருக்கடி ஏற்பட்டபோது, தீர்வு காண்பதற்காக அவை பல சட்ட வழிமுறைகளைச் சார்ந்திருந்தன. இவற்றில் நிறுவனச் சட்டம், கடன் மீட்பு நடைமுறைகள், பாதுகாக்கப்பட்ட கடனளிப்போர் கட்டமைப்புகள் ஆகியவை அடங்கும். ஒவ்வொரு வழிமுறையும் தனித்தனி அமைப்புகளையும் நடைமுறைகளையும் பின்பற்றியது. இது பெரும்பாலும் ஒருங்கிணைப்பைச் சிக்கலானதாகவும், அதிக நேரம் எடுக்கக்கூடியதாகவும் மாற்றியது.
இந்த சவால்களை எதிர்கொள்ள, அரசு திவால் மற்றும் நொடித்துப்போதல் சட்டம் 2016-ஐ அறிமுகம் செய்தது. இது ஏற்கனவே இருந்த சட்டங்களை ஒரே அமைப்பாக ஒருங்கிணைத்தது. மேலும், இந்தச் சட்டம் கடன் வழங்குநர்களின் பங்களிப்பை வலுப்படுத்தியதுடன், அனைத்துத் தரப்பினரின் நலன்களையும் சமநிலைப்படுத்தி சொத்து மதிப்பை அதிகமாக்குவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.
அமைப்புமுறை பரிணாம வளர்ச்சி அடைந்தபோது, நடைமுறை அனுபவம் மேம்படுத்த வேண்டிய பகுதிகளை முன்னிலைப்படுத்தியது. செயல்திறனையும் விளைவுகளையும் மேம்படுத்துவதற்காக செம்மைப்படுத்தல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. தொடர்ச்சியான இந்தச் சீர்திருத்த நடைமுறை, ஒருங்கிணைப்பின் அடுத்த கட்டத்தைக் குறிக்கும் வகையில், திவால் மற்றும் நொடித்துப்போதல் (திருத்த) சட்டம், 2026 இயற்றப்படுவதற்கு வழிவகுத்தது.
திவால் மற்றும் நொடித்துப்போதல் சட்டம், 2016: இந்தியாவின் முதன்மையான திவால்நிலைச் சட்டம்
ஐபிசி-க்கு முந்தைய கட்டமைப்பும் சீர்திருத்தத்தின் தேவையும்
திவால் மற்றும் நொடித்துப்போதல் சட்டத் தொகுப்பு 2016 இயற்றப்படுவதற்கு முன், இந்தியாவில் திவால்நிலைத் தீர்வு என்பது ஒன்றோடொன்று மேற்பொருந்தும் பல சட்டக் கட்டமைப்புகளின் மூலம் செயல்பட்டு வந்தது. நிதி நெருக்கடியை எதிர்கொண்ட நிறுவனங்கள், நிறுவனங்கள் சட்டம், நலிந்த தொழில் நிறுவனங்கள் சட்டம், கடன் மீட்பு வழிமுறைகள், சர்ஃபேசி சட்டம் உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட கடனளிப்போர் கட்டமைப்புகள் போன்ற பல்வேறு சட்டங்களின் கீழ் கையாளப்பட்டன. இந்த நடைமுறைகள் தனித்தனி நிறுவனங்கள், அமைப்புகள் மூலம் செயல்பட்டதால், பெரும்பாலும் துண்டு துண்டான நடவடிக்கைகளும் ஒன்றோடொன்று மேற்பொருந்தும் அதிகார வரம்புகளும் ஏற்பட்டன.
இதன் விளைவாக, தீர்வு காணும் நடைமுறைகள் நீண்டகாலம் பிடிப்பதாகவும் நிச்சயமற்றதாகவும் மாறின. வழக்குகள் பல ஆண்டுகள் நிலுவையில் இருந்தன. அதே நேரத்தில் நெருக்கடிக்குள்ளான சொத்துக்களின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வந்தது. தாமதங்கள், கடன் வழங்குநர்கள் நிலுவைத் தொகையை வசூலிக்கும் திறனைப் பலவீனப்படுத்தியதுடன், லாபகரமான வணிகங்களை மீட்டெடுக்கும் வாய்ப்பையும் குறைத்தன. ஒருங்கிணைக்கப்பட்ட, காலவரையறைக்குட்பட்ட ஒரு நடைமுறை இல்லாதது, ஒட்டுமொத்த கடன் ஒழுக்கத்தையும் முதலீட்டாளர் நம்பிக்கையையும் பாதித்தது.
இந்தக் கட்டமைப்பு சவால்களை உணர்ந்து, ஒரு விரிவான சீர்திருத்தமாக திவால் மற்றும் நொடித்துப்போதல் சட்டம் 2016-ஐ அரசு அறிமுகம் செய்தது.
ஓர் ஒருங்கிணைந்த மற்றும் காலவரையறைக்குட்பட்ட திவால்நிலைக் கட்டமைப்பு
திவால் மற்றும் நொடித்துப்போதல் சட்டத் தொகுப்பு 2016, நிறுவனங்கள், கூட்டாண்மை நிறுவனங்கள், தனிநபர்கள் மத்தியில் திவால்நிலையைத் தீர்ப்பதற்கு ஓர் ஒருங்கிணைந்த கட்டமைப்பை நிறுவியது. இது பல திவால் சட்டங்களை ஒரே கட்டமைப்பில் கொண்டுவந்து, ஒருங்கிணைக்கப்பட்ட, கணிக்கக்கூடிய தீர்வு நடைமுறையை உருவாக்கியது.
கடன் பெற்றவர் கட்டுப்பாட்டில் உள்ள முறையிலிருந்து, கடன் வழங்குநர் வழிநடத்தும் தீர்வுக் கட்டமைப்பிற்கு மாறுவதே இந்தச் சட்டத்தொகுப்பு அறிமுகம் செய்யப்பட்டதன் முக்கிய நோக்கமாகும். வெறும் மீட்பு நடவடிக்கைகளைத் தாண்டி, மதிப்பை அதிகப்படுத்துதல், லாபகரமான வணிகங்களைத் தொடர்வது, சம்பந்தப்பட்டவர்களைச் சமச்சீராக நடத்துவது ஆகியவற்றின் மீது முக்கியத்துவம் ஏற்பட்டது. நீண்டகாலத் தாமதங்கள் நிறுவனத்தின் மதிப்பைச் சிதைப்பதற்கு முன்பே, ஆரம்ப நிலையிலேயே நிதி நெருக்கடி கவனிக்கப்படுவதை இந்தச் சட்டத்தொகுப்பு உறுதிசெய்கிறது.
இந்தக் கட்டமைப்பின் மையத்தில் பெருநிறுவன திவால்நிலைத் தீர்வு நடைமுறை உள்ளது. இது பெருநிறுவன திவால்நிலையைத் தீர்ப்பதற்கு ஒரு கட்டமைக்கப்பட்ட வழிமுறையை வழங்குகிறது. நிதிசார் கடன் வழங்குநர்களை உள்ளடக்கிய கடன் வழங்குநர்கள் குழு, தீர்வுத் திட்டங்களை மதிப்பீடு செய்கிறது. பின்னர் அவர்கள், நெருக்கடியில் உள்ள நிறுவனத்தின் எதிர்காலம் குறித்து முக்கியமான வணிக முடிவுகளை எடுக்கின்றனர்.
இந்தச் சட்டத்தொகுப்பு, தீர்வு காண்பதற்கு காலவரையறைக்குட்பட்ட கட்டமைப்பையும் அறிமுகம் செய்தது. இது 180 நாட்களுக்குள் முடிக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் இது 330 நாட்கள் வரை நீட்டிக்கப்படலாம். இந்தக் காலக்கெடு அடிப்படையிலான அணுகுமுறை என்பது, காலவரையற்ற தாமதங்களைத் தடுப்பதையும், நெருக்கடியில் உள்ள வணிகங்களின் பொருளாதார மதிப்பைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது. பரிந்துரைக்கப்பட்ட காலக் கட்டமைப்பிற்குள் தீர்வு எட்டப்படாவிட்டால், அந்த நிறுவனம் சட்டத்தொகுப்பின் விதிகளுக்கு இணங்க நொடித்துப்போதலுக்கு உள்ளாகிறது.
ஐபிசி-ன் கீழ் நிறுவனக் கட்டமைப்பு
ஐபிசி கட்டமைப்பின் செயல்திறன், சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட, ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனச் சூழலமைப்பைச் சார்ந்துள்ளது. இந்தக் கட்டமைப்பின் கீழ் இந்திய திவால் மற்றும் நொடித்துப்போதல் வாரியம் என்பது, திவால் நடைமுறைகளை, திவால் தொடர்பான தொழில் முறையாளர்களை, தொடர்புடைய நிறுவனங்களை மேற்பார்வையிடுவதற்குப் பொறுப்பான ஒழுங்குமுறை ஆணையமாகச் செயல்படுகிறது. மேலும், இது திவால் சூழலமைப்பின் செயல்பாட்டை நிர்வகிக்கும் விதிமுறைகளையும் தரங்களையும் வகுக்கிறது.
திவால் தொடர்பான தொழில்முறையாளர்கள் என்பவர்கள் யார்?
திவால் தொடர்பான தொழில்முறையாளர்கள் என்போர், நெருக்கடியில் உள்ள நிறுவனங்களின் விவகாரங்களை நிர்வகித்து, சொத்துக்களைப் பாதுகாத்து, கடன் வழங்குநர்களின் கூட்டங்களுக்கு வழிவகுக்கின்றனர். அவர்கள் சட்டத்தொகுப்பு, பொருத்தமான விதிமுறைகளுக்கு இணங்க, தீர்வு நடைமுறையை மேற்பார்வையிடுகின்றனர்.
மேலும், பெருநிறுவன திவால்நிலை விவகாரங்கள், இந்தக் கட்டமைப்பின் கீழ் தீர்ப்பளிக்கும் அதிகார அமைப்பாகச் செயல்படும் தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்தால் தீர்ப்பளிக்கப்படுகின்றன. அதன் முடிவுகளுக்கு எதிரான மேல்முறையீடுகள் தேசிய நிறுவனச் சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தால் விசாரிக்கப்படுகின்றன. இந்த அமைப்புகள் ஒன்றிணைந்து, இந்தியாவில் திவால்நிலைத் தீர்வுக்காக ஒரு கட்டமைக்கப்பட்ட, மேற்பார்வையிடப்பட்ட, சட்டபூர்வமாகச் செயல்படுத்தக்கூடிய ஒரு வழிமுறையை உருவாக்குகின்றன.
திவால் மற்றும் நொடித்துப்போதல் சட்டத்தின் வெற்றி
திவால் மற்றும் நொடித்துப்போதல் சட்டத் தொகுப்பு 2016 இயற்றப்பட்டபின், இந்தியாவின் திவால் மற்றும் கடன் சூழலமைப்பைக் குறிப்பிடத்தக்க அளவுக்கு அது வலுப்படுத்தியுள்ளது. இந்தக் கட்டமைப்பு, மீட்பு வழிமுறைகளை மேம்படுத்தி, கடன் வழங்குநர்களின் கட்டுப்பாட்டை வலுப்படுத்தி, நெருக்கடியில் உள்ள நிறுவனங்களுக்கு மிகவும் கட்டமைக்கப்பட்ட தீர்வு நடைமுறையை உருவாக்கியுள்ளது.
மார்ச் 2026 வரை, இந்தச் சட்டத்தின் கீழ் 8,987 பெருநிறுவன திவால்நிலை தீர்வு நடைமுறைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அங்கீகரிக்கப்பட்ட தீர்வுத் திட்டங்கள் மூலம் 1,419 பெருநிறுவனக் கடனாளிகளுக்குத் தீர்வு கிடைத்துள்ளது. அதே சமயம், பிரிவு 12A-ன் கீழ் சமரசங்கள், மேல்முறையீடுகள், மறுஆய்வுகள், திரும்பப் பெறுதல்கள் மூலம் பல வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.
மார்ச் 2026 நிலவரப்படி, கடன் வழங்குநர்கள் ஐபிசி-ன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட தீர்வுத் திட்டங்கள் மூலம் சுமார் 4.32 லட்சம் கோடி ரூபாயை வசூலித்துள்ளனர். மீட்கப்பட்ட தொகை, நொடித்துப்போதல் மதிப்பில் 116.85 சதவீதமாகவும், நியாயமான மதிப்பில் 94.56 சதவீதத்திற்கு அதிகமாகவும் இருந்தது.
இந்தக் கட்டமைப்பு, வங்கித் துறைக்கான மீட்பு முடிவுகளையும் மேம்படுத்தியது. இந்தியாவில் வங்கித்துறையின் போக்குகள், முன்னேற்றம் குறித்த இந்திய ரிசர்வ் வங்கியின் 2024-25-ம் ஆண்டுக்கான அறிக்கை (2025, டிசம்பர் 29 அன்று வெளியிடப்பட்டது), வணிக வங்கிகளால் பல்வேறு வழிகள் மூலம் மீட்கப்பட்ட மொத்தத் தொகையான ரூ. 1,04,099 கோடியில், ஐபிசி மட்டும் குறிப்பிடத்தக்க வகையில் ரூ.54,528 கோடி பங்களிப்பு செய்துள்ளது என்றும், இது மொத்த மீட்புத் தொகையில் 52.4% ஆகும் என்றும் குறிப்பிடுகிறது. இது சர்ஃபேசி, கடன் மீட்புத் தீர்ப்பாயங்கள், லோக் அதாலத்துகள் மூலம் மீட்கப்பட்ட தொகையை விட அதிகமாகும்.
ஐபிசி-யின் கீழ் தீர்வு காணப்பட்ட நிறுவனங்களிடையே, தீர்வுக்குப் பிந்தைய வலுவான மீட்பு ஏற்பட்டுள்ளதாக ஐஐஎம் அகமதாபாத் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. கடன் வழங்குநர்கள், ஒப்புக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளில் 32%-ஐயும், நொடித்துப்போதல் மதிப்பில் 168%-ஐயும் மீட்டுள்ளனர். தீர்வு காணப்பட்ட நிறுவனங்கள் 76% விற்பனை வளர்ச்சியைக் கண்டன, மூன்றாவது ஆண்டில் செயல்பாட்டுச் சமநிலையை அடைந்தன, மேலும் பணியாளர் செலவினங்களில் 50% உயர்வைக் கண்டன. இது அதிக வேலைவாய்ப்பைக் குறிக்கிறது. தீர்வு காணப்பட்ட நிறுவனங்களின் மொத்த சொத்துக்கள் 50% வளர்ந்தன, மூலதனச் செலவினம் 130% உயர்ந்தது, லாபத்தன்மை தொழில்துறை அளவுகோல்களுடன் ஒத்துப்போனது. பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பீடுகள் ரூ. 2 லட்சம் கோடியிலிருந்து ரூ. 6 லட்சம் கோடியாக மும்மடங்கு உயர்ந்தன, அதே நேரத்தில் பணப்புழக்கம் 80% மேம்பட்டது. மேலும், கடன் செலவில் 3% குறைப்பு, சுயேச்சையான இயக்குநர்கள் மூலம் மேம்பட்ட நிர்வாகத்தை ஐஐஎம் பெங்களூரு ஆய்வு ஒன்று காட்டுகிறது. இவ்வாறு, ஐபிசி நடைமுறை மூலம் தீர்வுக்கு உட்படும் நிறுவனங்கள், விற்பனை, லாபத்தன்மை, சொத்து வளர்ச்சி, சந்தை மதிப்பீடு, பணப்புழக்கம் உள்ளிட்ட தங்கள் வணிகத்தின் பல்வேறு அம்சங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் காட்டியுள்ளதை இந்த ஆய்வுகள் நிரூபிக்கின்றன.
மேலும், கடன் கட்டுப்பாட்டில் ஐபிசி-யின் தாக்கம், ஐஐஎம் பெங்களூரு நடத்திய விரிவான ஆய்வின் மூலமும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வு, பெருநிறுவனக் கடன் கணக்குகள், நிறுவன அளவிலான நிதித் தரவுகள், வாராக்கடன் தரவுகள் ஆகியவற்றைப் பகுப்பாய்வு செய்துள்ளது. கடன் வாங்குபவர்களை நிர்ணயிக்கப்பட்ட கடன் செலுத்தும் அட்டவணைகளைக் கடைப்பிடிக்க ஐபிசி தூண்டியுள்ளது என்று இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. ஆய்வுக்குட்பட்ட காலத்தில், 'காலாவதியானவை' எனக் கருதப்படும் கடன் கணக்குகளில், ரூபாய் மதிப்பு, கணக்குகளின் எண்ணிக்கை ஆகிய இரண்டின் அடிப்படையிலும், குறிப்பிடத்தக்க குறைவு ஏற்பட்டுள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது. இதேபோல், கடன் கணக்குகள் 'காலாவதியானவை' பிரிவிலிருந்து 'சாதாரண' பிரிவிற்கு மாறும் வருடாந்தர விகிதம் அதிகரித்துள்ளது. இது பெருநிறுவனங்களின் கடன் கலாச்சாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்ற கருத்தை ஏற்கிறது. ஒரு கடன் கணக்கு 'சாதாரண' பிரிவிற்கு மாறுவதற்கு முன் 'காலாவதியானவை' பிரிவில் இருக்கும் சராசரி நாட்களின் எண்ணிக்கை கூட 248-344 நாட்களில் இருந்து 30-87 நாட்களாகக் குறைந்துள்ளது. இது, கடன் வாங்குபவர்களும் கடன் வழங்குநர்களும் தவறுகளை விரைவில் தீர்க்க முயற்சிக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
அதே நேரத்தில், செயல்பாட்டுச் சவால்கள் தொடர்ந்து நீடித்தன. பல வழக்குகளில் சராசரித் தீர்வு காலக்கெடு, 330 நாட்கள் என்ற சட்டப்பூர்வ வரம்பைத் தாண்டியது. தீர்ப்பளிப்பதில் ஏற்பட்ட தாமதங்களும், நீடித்த வழக்கு விசாரணையும் சில நடவடிக்கைகளில் அளவு அதிகரிப்பை பாதித்தன.
இந்த சவால்கள் இருந்தபோதும், திவால் மற்றும் நொடித்துப்போதல் சட்டம் என்பது இந்தியாவின் நிதி மற்றும் பெருநிறுவனத் தீர்வு கட்டமைப்பில் ஒரு பெரிய கட்டமைப்பு சீர்திருத்தமாகும். திவால் மற்றும் நொடித்துப்போதல் (திருத்த) சட்டம், 2026 உள்ளிட்ட திருத்தங்கள், காலக்கெடு, நிறுவன செயல்திறன், மீட்பு முடிவுகளை மேலும் மேம்படுத்த முற்படுகின்றன.
திவால் மற்றும் நொடித்துப்போதல் சட்டத்தொகுப்பின் சட்டரீதியான முன்னேற்றம்
திவால் மற்றும் நொடித்துப்போதல் (திருத்த) சட்டம் 2026-க்கு வழிவகுத்த சீர்திருத்தம், தொடர்ச்சியான சட்டத் திருத்தங்கள் மூலம் திவால் கட்டமைப்பில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சி அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
2026-க்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட முக்கியத் திருத்தங்களில் பின்வருவன அடங்கும்:
• 2018-ம் ஆண்டு திருத்தம்: விண்ணப்பங்களைத் திரும்பப் பெறுவதற்கான விதிகள், வாக்களிப்பு வரம்புகளில் மாற்றங்கள் உட்பட, தீர்வுக் கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க செம்மைப்படுத்தல்களை அறிமுகம் செய்தது. இது கடன் வழங்குநர்களின் பங்கேற்பை மேலும் வலுப்படுத்தியதுடன் முதன்மைச் சட்டத்தின் பிரிவு 29A-ன் கீழ் தகுதி அளவுகோல்களை மாற்றியமைத்தது.
• 2019-ம் ஆண்டு திருத்தம்: நடைமுறையை நிறைவு செய்வதற்கு 330 நாட்கள் என்ற ஒட்டுமொத்த கால வரம்பை அறிமுகம் செய்ததன் மூலம், திவால்நிலைத் தீர்வுக்கான கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டது.
• 2020-ம் ஆண்டு திருத்தம்: தீர்வு காணப்பட்ட பின் பெருநிறுவனக் கடனாளிகளுக்கு விலக்குரிமை உள்ளிட்ட முக்கியப் பாதுகாப்பு அம்சங்களை அறிமுகம் செய்தது. மேலும், கொவிட்-19-க்கு தீர்வுகாணும் விதமாக, குறிப்பிட்ட சில கடன்தவறுகளுக்கான திவால் நடவடிக்கைகளையும் இது நிறுத்திவைத்தது.
• 2021-ம் ஆண்டு திருத்தம்: குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான முன்-தொகுக்கப்பட்ட திவால்நிலைத் தீர்வு நடைமுறையை அறிமுகம் செய்தது. இது, கடன் வழங்குநரின் மேற்பார்வையுடனும் கண்காணிப்புடனும், கடன் பெற்றவரின் சிக்கலைத் தீர்க்க விரைவான வழியை வழங்குகிறது. மேலும், திவால்நிலை நடவடிக்கைகளின் செயல்திறனையும் காலக்கெடுவையும் மேம்படுத்துவதற்கான விதிகளையும் இது உள்ளடக்கியது.
திவால் மற்றும் நொடித்துப்போதல் (திருத்த) சட்டம், 2026-ஐப் புரிந்துகொள்ளுதல்
ஏறத்தாழ ஒரு தசாப்த கால அமலாக்க அனுபவத்திற்குப் பின், திவால் மற்றும் நொடித்துப்போதல் சட்டத் தொகுப்பு 2016 அடிப்படையில் 2026-ம் ஆண்டின் திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது திவால் தீர்வு மற்றும் நொடித்துப்போதல் நடவடிக்கைகளின் போது ஏற்படும் நடைமுறைத் தாமதங்கள், சட்டரீதியான தெளிவின்மைகளால் எழும் வழக்குகள், செயல்பாட்டுச் சவால்களுக்குத் தீர்வு காண முற்படுகிறது.
இந்தச் சட்டம், திவால்நிலை நடைமுறையின் பல்வேறு கட்டங்களில் சீர்திருத்தங்களை அறிமுகம் செய்கிறது. இது வழக்குகளை ஏற்றுக்கொள்வதற்கும் ஒப்புதல் அளிப்பதற்குமான காலக்கெடுவை வலுப்படுத்துகிறது. நொடித்துப்போகும்போது கடன் வழங்குவோர் குழுக்களின் பங்கினை இது விரிவுபடுத்துகிறது. மேலும், பிணையத்தின் மீதான உரிமைகோரல்கள், தவிர்ப்புப் பரிவர்த்தனைகள், தீர்வுத் திட்டங்கள் தொடர்பான விதிகளை இது தெளிவுபடுத்துகிறது.
இந்தத் திருத்தம், அங்கீகரிக்கப்பட்ட தீர்வுத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான பாதுகாப்பு அம்சங்களை அறிமுகம் செய்கிறது. குறிப்பிட்ட நேர்வுகளில் உரிமங்கள், அனுமதிகள், ஒழுங்குமுறை ஒப்புதல்களின் தொடர்ச்சி இதில் அடங்கும். மேலும், இது மோசடியான, முறையற்ற வர்த்தகம் தொடர்பான விதிகளையும் வலுப்படுத்துகிறது.
இந்தத் திருத்தத்தின் ஒரு முக்கிய அம்சம், குறிப்பிட்ட வகை பெருநிறுவனக் கடனாளிகளுக்கு, கடன் வழங்குநரால் தொடங்கப்படும் ஒரு திவால்நிலைத் தீர்வு நடைமுறையை அறிமுகம் செய்வதாகும். மேலும், இந்தச் சட்டம் நொடித்துப்போதல், கலைப்பு நடவடிக்கைகளுக்காக, கட்டமைக்கப்பட்ட கால அட்டவணைகளையும் அறிமுகம் செய்கிறது.
ஒட்டுமொத்தமாக, இந்தத் திருத்தம், திவால் மற்றும் நொடித்துப்போதல் சட்டம் 2016 -ன் மையக் கட்டமைப்பைத் தக்கவைத்துக் கொண்டே, திவால்நிலைக் கட்டமைப்பை மேலும் காலவரையறைக்குட்பட்டதாகவும், கணிக்கக்கூடியதாகவும், தீர்வு நோக்கியதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2026-ம் ஆண்டு திருத்தச் சட்டத்தில் முக்கிய மாற்றங்கள்
புதிய கட்டமைப்பு ஒன்றை அறிமுகம் செய்வதற்கு பதிலாக, 2026-ம் ஆண்டின் திருத்தச் சட்டம், 2016-ம் ஆண்டின் முதன்மைச் சட்டத்தில் காலப்போக்கில் வெளிப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.
பின்வரும் முக்கிய மாற்றங்கள் இதில் அடங்கும்:
முன்னர்: திவால் மற்றும் நொடித்துப்போதல் சட்டம் 2016-ன் கீழ் உள்ள சில சொற்களும் கருத்துகளும் வரையறுக்கப்படாமல் இருந்தன அல்லது பலவிதமான விளக்கங்களுக்கு இடமளித்தன. இது பெரும்பாலும் திவால் நடவடிக்கைகளின் போது வழக்குகளுக்கும் நடைமுறைத் தாமதங்களுக்கும் வழிவகுத்தது.
தற்போது: இந்தத் திருத்தம், “சேவை வழங்குநர்”, “தவிர்ப்புப் பரிவர்த்தனை”, “மோசடியான அல்லது முறையற்ற வர்த்தகம்” போன்ற சொற்களுக்குத் தெளிவான வரையறைகளை வழங்குகிறது. “சேவை வழங்குநர்” என்பதில், திவால்நிலை தொடர்பான தொழில்முறையாளர்கள், திவால்நிலை நிபுணத்துவ முகமைகள், தகவல் பயன்பாட்டு நிறுவனங்கள் மற்றும் ஐபிபிஐ-ல் பதிவுசெய்யப்பட்ட, அறிவிக்கப்பட்ட பிற நபர்கள் அடங்குவர் என வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டம் “பிணையத்தின் மீதான உரிமைகோரல்” என்பதன் பொருளையும் தெளிவுபடுத்துகிறது. தரப்பினர்களுக்கு இடையேயான ஓர் ஒப்பந்தம் அல்லது ஏற்பாட்டின் மூலம் பிணையத்தின் மீதான உரிமைகோரல் எழும்போது மட்டுமே அது இருக்கும் என்று குறிப்பிடுகிறது. சட்டத்தின் செயல்பாடு மூலம் மட்டுமே உருவாக்கப்படும் பிணையத்தின் மீதான உரிமைகோரல்கள் இந்த வரையறையிலிருந்து விலக்கப்பட்டுள்ளன.
இந்தத் திருத்தம் “தவிர்ப்புப் பரிவர்த்தனைகள்” என்பதையும் வரையறுக்கிறது. இதில், கடனளிப்பவர்களுக்கு நியாயமற்ற முறையில் முன்னுரிமை அளிக்கப்படும் பரிவர்த்தனைகள், சொத்துக்கள் அவற்றின் மதிப்பை விடக் குறைவாக மாற்றப்படும் பரிவர்த்தனைகள், கடனளிப்பவர்கள் ஏமாற்றப்படும் பரிவர்த்தனைகள் அல்லது நியாயமற்ற கடன் ஏற்பாடுகளை உருவாக்கும் பரிவர்த்தனைகள் ஆகியவை அடங்கும். “மோசடியான அல்லது முறையற்ற வர்த்தகம்” என்பது பிரதான சட்டத்தின் 66-வது பிரிவின் கீழ் தனியாக வரையறுக்கப்பட்டுள்ளது.
திவால்நிலை நடைமுறையில் விரைவான அனுமதியை உறுதி செய்தல்
முன்னர்: திவால் மனுக்களை ஏற்றுக்கொள்வதற்கு காலக்கெடு இருந்தபோதும், அடிக்கடி தாமதங்கள் ஏற்பட்டன. அவை பெரும்பாலும் விளக்கப்படாமலும் இருந்தன. இது சட்ட விதிகளின் காலவரையறைத் தன்மையை பலவீனப்படுத்தியது.
தற்போது: தீர்ப்பளிக்கும் ஆணையம் 14 நாட்களுக்குள் மனுக்கள் மீது முடிவெடுக்க வேண்டும். இந்தக் காலக்கெடு பின்பற்றப்படாவிட்டால், அதற்கான காரணங்கள் முறையாகப் பதிவு செய்யப்பட வேண்டும். இது இந்த அமைப்பில் பொறுப்புடைமையைக் கொண்டுவருகிறது.
வழக்குகளைத் திரும்பப் பெறுவதில் ஒழுங்குமுறையைக் கொண்டுவருதல்
முன்னர்: நடைமுறையின் மேம்பட்ட நிலைகளில்கூட வழக்குகளைத் திரும்பப் பெற முடிந்தது. சில சமயங்களில், இது கணிசமான காலத்திற்குப் பின் நிகழ்ந்ததால், ஏற்கனவே செய்யப்பட்ட முயற்சி வீணானது.
தற்போது: வழக்குகளைத் திரும்பப் பெறுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நடத்தை விதிகள் குழு அமைக்கப்படுவதற்கு முன் அது நிகழ முடியாது. தீர்வுத் திட்டங்கள் கோரப்பட்ட பின்னரும் இது தடை செய்யப்பட்டுள்ளது. இது முக்கியமான கட்டங்களில் ஏற்படும் இடையூறுகளைத் தடுக்கிறது. இந்த மாற்றம், நடைமுறை முழுவதும் நிலைத்தன்மையைக் கொண்டுவருவதோடு, சம்பந்தப்பட்டவர்களின் நலன்களையும் பாதுகாக்கிறது.
தடைக்காலப் பாதுகாப்பை வலுப்படுத்துதல்
முன்னர்: கடன்தடை செயல்படும் விதத்தில், குறிப்பாக உத்தரவாதங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில், குறைபாடுகள் இருந்தன. கடன் வழங்குநர்கள் சில சமயங்களில் மறைமுக வழிகள் மூலம் இணை நடவடிக்கைகளைத் தொடங்க முடிந்தது.
தற்போது: அத்தகைய சூழ்நிலைகளுக்கும் கடன்தடை பொருந்தும் என்பதை இந்தத் திருத்தம் தெளிவுபடுத்துகிறது. இது, திவால்நிலை நடைமுறையைத் தவிர்ப்பதற்கு உத்தரவாதங்களைப் பயன்படுத்த முடியாது என்பதை உறுதி செய்கிறது. தீர்வு நடவடிக்கைக்கு உட்படும் நிறுவனத்திற்கு, இணை மீட்பு நடவடிக்கைகள் இல்லாத, மிகவும் பாதுகாப்பான சூழல் வழங்கப்படுகிறது.
நடைமுறைத் திறன், தகவலுக்கான அணுகலை மேம்படுத்துதல்
முன்னர்: தீர்வுத் தொழில்முறையாளர்களை நியமிப்பதில் ஏற்பட்ட தாமதங்களும், முக்கியப் பங்குதாரர்களிடமிருந்து ஒத்துழைப்பு இல்லாததும் பெரும்பாலும் நடைமுறையை மந்தமாக்கின. பல சமயங்களில், முக்கியமான தகவல்கள் உடனடியாகக் கிடைக்கவில்லை.
தற்போது: இந்தத் திருத்தம், தீர்வுத் தொழில்முறையாளர்களுக்கான நியமன நடைமுறையை எளிதாக்கி, ஆரம்பகட்டத் தாமதங்களைக் குறைக்கிறது. இது ஒத்துழைப்பதற்கான கடமையை விரிவுபடுத்தி, ஊழியர்கள், ஊக்குவிப்பாளர்கள் மற்றும் பிற தொடர்புடைய நபர்கள் நடைமுறை முழுவதும் உதவ வேண்டும் எனக் கோருகிறது. வேகமான நியமனங்கள் மற்றும் மேம்பட்ட தகவல் அணுகல் மூலம், தீர்வு நடைமுறை மேலும் திறமையானதாக மாறி, தன்னார்வ ஒத்துழைப்பைச் சார்ந்திருப்பது குறைகிறது.
அனைத்து நிலைகளிலும் கடன் வழங்குநர்களின் பங்கினை மேம்படுத்துதல்
முன்னர்: தீர்வு காணும் செயல்பாட்டில் கடன் வழங்குநர் குழுக்கள் ஒரு மையப் பங்கினை வகித்தன. ஆனால் நொடித்துப்போதல் கட்டம் தொடங்கியவுடன் அதன் செல்வாக்கு கணிசமாகக் குறைந்தது. இது பல்வேறு கட்டங்களில் முடிவெடுப்பதில் தொடர்பின்மைக்கு வழிவகுத்தது.
தற்போது: இந்தத் திருத்தம், கடன் வழங்குநர்களின் பங்கினை நொடித்துப்போதல் கட்டம் வரை விரிவுபடுத்துகிறது. நொடித்துப்போதல் நடவடிக்கைகளை மேற்பார்வையிடவும், தேவைப்பட்டால் நொடித்துப்போனவர்களுக்கு பதிலாக வேறொருவரை நியமிக்கவும் அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. திவால்நிலை நடைமுறையின் முழு ஆயுட்காலத்திலும் கடன் வழங்குநர்களே கட்டுப்பாட்டில் இருப்பார்கள். இந்தத் தொடர்ச்சி, மேற்பார்வையை மேம்படுத்துவதோடு, முடிவுகள் மீட்பு நோக்கங்களுடன் சீரமைக்கப்படுவதையும் உறுதி செய்கிறது.
கடந்தகால பரிவர்த்தனைகளுக்கான பொறுப்புக்கூறலை உறுதி செய்தல்
முன்னர்: நியாயமற்ற சொத்துப் பரிமாற்றங்கள், கடன் வழங்குநர் சிலருக்கு சலுகை அளித்தல் அல்லது மோசடியான நடத்தை சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகள், பிரதான திவால் நடவடிக்கையிலிருந்து பெரும்பாலும் தனியாக ஆராயப்பட்டன. இது, தீர்வு அல்லது நொடித்துப்போதலுக்குப் பின் அத்தகைய நடவடிக்கைகள் தொடர்வது குறித்து நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியது.
தற்போது: கடன் தவிர்ப்புப் பரிவர்த்தனைகள், மோசடியான அல்லது முறையற்ற வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகள், திவால்நிலைத் தீர்வு அல்லது நொடித்துப்போதல் நடைமுறை நிறைவடைந்த பின்னரும் தொடரலாம் என்பதை இந்தத் திருத்தம் தெளிவுபடுத்துகிறது.
மேலும், தீர்வு நிபுணர் அல்லது நொடித்துப்போனவரால் அத்தகைய பரிவர்த்தனைகள் பற்றி தெரிவிக்கப்படாத நிலையில், கடனளிப்போர், உறுப்பினர்கள் அல்லது கூட்டாளிகள் தீர்ப்பளிக்கும் அதிகாரியை அணுக இந்தச் சட்டம் அனுமதிக்கிறது.
தீர்மானத்திற்கான சொத்து தளத்தை விரிவுபடுத்துதல்
முன்னர்: தீர்வு நடைமுறை பெரும்பாலும் நிறுவனக் கடனாளியின் சொத்துக்களில் கவனம் செலுத்தியது. அத்தகைய சொத்துக்கள் போதுமானதாக இல்லாத நேர்வுகளில் இது மீட்புக்கான வாய்ப்புகளைக் கட்டுப்படுத்தியது.
தற்போது: கடன் வழங்குநர்களின் ஒப்புதல், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, உத்தரவாதமளிப்பவர்களின் சொத்துக்களைத் தீர்வு நடைமுறையில் சேர்க்க இந்தத் திருத்தம் அனுமதிக்கிறது. சொத்துக்களின் தொகுப்பை விரிவுபடுத்துவதன் மூலம், குறிப்பாக உத்தரவாதங்களை உள்ளடக்கிய சிக்கலான நிதிக் கட்டமைப்புகளில், மீட்புக்கான வாய்ப்புகள் மேம்படுகின்றன.
கடனளிப்போர் அனைவரும் நியாயமான முறையில் நடத்தப்படுவதை உறுதி செய்தல்
முன்னர்: தீர்வுத் திட்டங்கள் தங்களை நியாயமாக நடத்தவில்லை என்று மாறுபட்ட கருத்துகளை கடனளிப்போர் அவ்வப்போது உணர்ந்தனர், இது தகராறுகளுக்கும் வழக்குகளுக்கும் வழிவகுத்தது.
தற்போது: பிரிவு 53-ன் கீழ் முன்னுரிமை வரிசைப்படி அத்தகைய திட்டத்தின் வருமானம் விநியோகிக்கப்பட்டால், மாறுபட்ட கருத்துடைய கடனளிப்போர், நொடித்துப்போதல் மதிப்பு, தீர்வுத் திட்டத்தின் கீழ் பெறப்பட வேண்டிய தொகை ஆகிய இரண்டில் எது குறைவோ, அந்தத் தொகையையாவது பெறுவார்கள் என்று சட்டம் இப்போது தெளிவாகக் குறிப்பிடுகிறது. இது அதிக நியாயத்தைக் கொண்டுவருவதோடு, முரண்பாடுகளைக் குறைத்து, தீர்வுத் திட்டங்களை அனைத்துத் தரப்பினருக்கும் மேலும் ஏற்புடையதாக மாற்றுகிறது.
தீர்மானத் திட்டங்களை மேலும் நடைமுறைக்கு உகந்ததாகவும் செயல்படுத்தக்கூடியதாகவும் மாற்றுதல்
முன்னர்: ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னரும், உரிமங்கள், ஒழுங்குமுறை ஒப்புதல்கள், கடந்தகாலப் பொறுப்புகள் தொடர்பான சவால்களையும் சிக்கல்களையும் தீர்வுத் திட்டங்கள் எதிர்கொண்டன. இது நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியது.
தற்போது: இந்தத் திருத்தம், திட்டங்களுக்குப் படிப்படியான ஒப்புதலை அனுமதிக்கிறது. உரிமங்கள் மற்றும் ஒழுங்குமுறை அனுமதிகளைப் பாதுகாக்கிறது. மேலும் கடந்தகாலக் கோரிக்கைகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதைத் தெளிவுபடுத்துகிறது. தீர்வுத் திட்டங்கள் உண்மையான சூழ்நிலைகளில் செயல்படுத்தக்கூடியதாக மாறுகின்றன. இது வணிகங்களை வெற்றிகரமாக மீட்டெடுக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது.
நொடித்துப்போதலுக்கு முன் நெகிழ்வுத்தன்மையை வழங்குதல்
முன்னர்: நடைமுறை நொடித்துப்போதல் நிலையை நோக்கி நகர்ந்த பின், புதிய சாத்தியக்கூறுகள் தோன்றினாலும் கூட, தீர்மானத்தை மறுபரிசீலனை செய்வதற்கு வரையறுக்கப்பட்ட வாய்ப்பே இருந்தது.
தற்போது: நொடித்துப்போதல் இறுதி செய்யப்படுவதற்கு முன், வரையறுக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் தீர்மான நடைமுறையை மேலும் ஒருமுறை மீட்டெடுக்க இந்தத் திருத்தம் அனுமதிக்கிறது. இது செயல்படும் வணிகங்கள் புத்துயிர் பெறுவதற்கு கூடுதல் வாய்ப்பை அளிப்பதோடு, முன்கூட்டியே நொடித்துப்போதலையும் தடுக்கிறது.
நொடித்துப்போதல் நடவடிக்கையை மேலும் கட்டமைக்கப்பட்டதாகவும், காலவரையறைக்கு உட்பட்டதாகவும் மாற்றுதல்
முன்னர்: நொடித்துப்போதல் நடவடிக்கைகளில் பெரும்பாலும் தெளிவான காலக்கெடுவும், சீரான மேற்பார்வையும் இல்லாததால், நிறுவனத்தை மூடும் நடைமுறைகளுக்கு நீண்டகாலம் எடுத்துக்கொள்ளப்பட்டது.
தற்போது: இந்தத் திருத்தம், நொடித்துப்போதல் பற்றிய கட்டமைக்கப்பட்ட காலக்கெடு, தெளிவான பொறுப்புகள், மேம்பட்ட மேற்பார்வையை அறிமுகம் செய்கிறது. தீர்வு தோல்வியுற்றாலும் கூட, வெளியேறும் நடைமுறை வேகமாகவும் ஒழுங்காகவும் மாறுகிறது.
கடன் வழங்குநர் தலைமையிலான புதிய திவால் நடைமுறையை அறிமுகம் செய்தல்
முன்னர்: ஆரம்ப கட்டத்தில் தாமதங்களை ஏற்படுத்தும் வகையில் அனைத்து திவால்நிலை நடைமுறைகளுக்கும் தீர்ப்பளிக்கும் அதிகாரியிடமிருந்து முறையான ஒப்புதல் தேவைப்பட்டது.
தற்போது: வரையறுக்கப்பட்ட ஒப்புதல் வரம்புகள், நடைமுறைப் பாதுகாப்புகளுக்கு உட்பட்டு, கடன் வழங்குநர்கள் நேரடியாக திவால்நிலையைத் தொடங்க ஒரு புதிய வழிமுறை, அனுமதிக்கிறது. இந்த நடைமுறையும் காலவரையறைக்கு உட்பட்டது. இது நெகிழ்வுத்தன்மையை அறிமுகம் செய்வதோடு, முறையான ஒப்புதல் நிலைகளைச் சார்ந்திருக்கும் தன்மையையும் குறைத்து, அமைப்பை மேலும் விரைவாகச் செயல்பட வைக்கிறது.
ஒரு வலுவான திவால்நிலை கட்டமைப்பை நோக்கி
கடந்த பத்தாண்டுகளில், திவால் மற்றும் நொடித்துப்போதல் சட்டத் தொகுப்பு 2016, இந்தியாவின் திவால் தீர்வு கட்டமைப்பை மறுவடிவமைப்பு செய்துள்ளது. அது நிதி நெருக்கடியைக் கையாள, கடன் வழங்குநரை மையமாகக் கொண்ட, கட்டமைக்கப்பட்ட ஓர் அணுகுமுறையை அறிமுகம் செய்தது. மேலும், அமலாக்க அனுபவம், நீதித்துறை விளக்கம், சட்ட சீர்திருத்தங்கள் ஆகியவற்றின் மூலம் இந்தக் கட்டமைப்பு பரிணாம வளர்ச்சி அடைந்தது.
திவால் மற்றும் நொடித்துப்போதல் (திருத்த) சட்டம், 2026, இந்தப் பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டத்தைக் குறிக்கிறது. இந்தத் திருத்தம், நடைமுறை நிச்சயத்தன்மையை மேம்படுத்தவும் காலக்கெடுவை வலுப்படுத்தவும் முற்படுகிறது. இது திவால்நிலைத் தீர்வு மற்றும் நொடித்துப்போதல் நடவடிக்கைகளின் செயல்திறனை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தச் சீர்திருத்தங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து, இந்தியாவில் மிகவும் திறமையான, கணிக்கத்தக்க திவால்நிலைக் கட்டமைப்பிற்கு உதவுகின்றன.
(Release ID: 2266139)
***
SS/SMB/PD
(வெளியீட்டு அடையாள எண்: 2266160)
வருகையாளர் எண்ணிக்கை : 15