பிரதமர் அலுவலகம்
இந்திய-இத்தாலி கூட்டுப் பிரகடனம்
இடுகை இடப்பட்ட நாள்:
20 MAY 2026 7:33PM by PIB Chennai
இத்தாலியக் குடியரசின் அமைச்சர்கள் குழுவின் தலைவர் திருமிகு ஜார்ஜியா மெலோனியின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி, 2026 மே 19-20 தேதிகளில் இத்தாலிக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். 2024 ஜூன் மாதம் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டிற்காக பிரதமர் மோடி இத்தாலிக்குச் சென்றிருந்ததையும், 2023-ல் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டிற்காக பிரதமர் திருமிகு மெலோனி இந்தியாவுக்கு வந்திருந்ததையும் தொடர்ந்து நடைபெற்ற இந்தப் பயணம், இருதரப்பு உறவுகளுக்குப் புத்துணர்ச்சி அளித்தது. இந்திய-இத்தாலி உறவுகளை ஒரு சிறப்பு உத்திசார் கூட்டாண்மை நிலைக்கு உயர்த்துவதற்கு இரு தலைவர்களும் முடிவு செய்தனர்.
2024 நவம்பரில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின் போது இரு தலைவர்களும் தங்கள் சந்திப்பில் ஏற்றுக்கொண்ட 2025-2029 கூட்டு உத்திசார் செயல் திட்டத்தின் பல்வேறு தூண்களில் எட்டப்பட்ட உறுதியான முன்னேற்றத்தை அவர்கள் பாராட்டினர். 2025-29 இந்திய-இத்தாலி கூட்டு உத்திசார் செயல் திட்டத்தை மறுஆய்வு செய்வதற்கும், இரு நாடுகளுக்கு இடையேயான சிறப்பு உத்திசார் கூட்டாண்மைக்கு உத்திசார் வழிகாட்டுதலை வழங்குவதற்கும் வெளியுறவு அமைச்சர்கள் தலைமையிலான ஒரு குழுவை நிறுவ அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
கடந்த ஆண்டில் மூன்று உயர்மட்ட வர்த்தக மாநாடுகள் நடத்தப்பட்ட நிலையில், இருதரப்பு பொருளாதார மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பின் வளர்ந்து வரும் செயல்பாடு குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். இந்தியாவின் வேகமான மற்றும் சீரான பொருளாதார வளர்ச்சி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்-இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்ததன் மூலம் உருவான வாய்ப்புகளை அடிப்படையாகக் கொண்டு, 2029-ஆம் ஆண்டுக்குள் 20 பில்லியன் யூரோ என்ற இலக்கை அடையும் நோக்குடன், இருதரப்பு வர்த்தகத்தை இரு புறமும் விரிவுபடுத்தும் பகிரப்பட்ட நோக்கத்தை அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
முக்கியத் துறைகளில் இருதரப்பு முதலீடுகள் அதிகரிப்பதை அவர்கள் வரவேற்றனர். மேலும், வலுவான விநியோகச் சங்கிலிகளைக் கட்டமைப்பதற்காக, அந்தந்தத் தொழில்துறைகள் தொழில் மற்றும் தொழில்நுட்பக் கூட்டாண்மைகளை உருவாக்கிக்கொள்ள ஊக்குவித்தனர். குறிப்பாக ஜவுளி, தூய்மையான தொழில்நுட்பங்கள், செமிகண்டக்டர், வாகனத் துறை, எரிசக்தி, சுற்றுலா, மருந்து மற்றும் மருத்துவத் தொழில்நுட்பங்கள், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், முக்கிய மூலப்பொருட்கள், எஃகு, துறைமுகங்கள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் அதிக முதலீடுகள் வருவதற்கான வாய்ப்பை அவர்கள் வரவேற்றனர். இரு நாடுகளிலும் வணிகத் தொடர்புகளையும் உற்பத்தி வசதிகளையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கொள்கை ஊக்கத் திட்டங்களையும் சலுகைகளையும் பயன்படுத்திக்கொள்ளுமாறு தொழில்துறைகளை அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
முக்கிய கனிமங்கள் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதை இரு பிரதமர்களும் வரவேற்றனர். நிலைத்தன்மை மற்றும் மீள்திறன் கொண்ட விநியோகச் சங்கிலிகளுக்குச் சிறப்பு முக்கியத்துவம் அளித்து, ஒத்துழைப்புக்கான ஒரு கட்டமைக்கப்பட்ட முறையை நிறுவுவதன் மூலம், முக்கிய கனிமங்கள் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும் விரிவுபடுத்தவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர். சுழற்சிப் பொருளாதார முன்முயற்சிகளின் ஒரு ஒருங்கிணைந்த அங்கமாக, மின்னணுக் கழிவுகள் மற்றும் சுரங்கக் கழிவுகள் உள்ளிட்ட மரபுசாரா ஆதாரங்களிலிருந்து முக்கிய கனிமங்களை மீட்டெடுப்பதில் கூட்டு முயற்சிகளை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை அவர்கள் வலியுறுத்தினர். மேலும், வேளாண்மை மற்றும் வேளாண் ஆராய்ச்சித் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், அந்தந்த அமைச்சகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையே கையெழுத்தானதில் அவர்கள் திருப்தி தெரிவித்தனர்.
உலகளாவிய வர்த்தகம், இணைப்பு மற்றும் செழிப்பை மறுவடிவமைத்து மேம்படுத்துவதில் இந்திய-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்திற்கு (ஐஎம்இசி) உள்ள மாற்றியமைக்கும் ஆற்றலை அங்கீகரித்து, இரு பிரதமர்களும் அதில் ஒத்துழைப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர். இத்திட்டம் குறித்த ஆரம்பகட்ட கலந்துரையாடல்களைப் பாராட்டிய அவர்கள், 2026-ஆம் ஆண்டில் இந்த முன்முயற்சியை முன்னெடுத்துச் செல்வதற்கான உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர்கள் அளவிலான முதல் ஐஎம்இசி கூட்டத்தை ஊக்குவித்தனர்.
நிதி தொழில்நுட்பம், சுகாதாரம், செமிகண்டக்டர், தளவாடங்கள் மற்றும் விநியோகச் சங்கிலிகள், வேளாண் தொழில்நுட்பம், எரிசக்தி, குவாண்டம் கணினி மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில், அந்தந்த புத்தாக்கச் சூழல் அமைப்புகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், சந்தை அணுகல் மற்றும் வணிகப் பொருத்தம், கூட்டு ஆராய்ச்சி, பல்கலைக்கழக ஒத்துழைப்பு மற்றும் திறமையாளர்களின் இடப்பெயர்வு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, இந்தியாவில் இன்னோவிட் இந்தியா புத்தாக்க மையத்தின் உருவாக்கத்தை அவர்கள் அறிவித்தனர்.
அமைச்சர்கள் அளவிலான பரிமாற்றங்கள், சேவைகளுக்கு இடையேயான உறவுகள், துறைமுகப் பயணங்கள் உள்ளிட்டவற்றின் மூலம் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆழமடைந்துள்ளதில் இரு பிரதமர்களும் திருப்தி தெரிவித்தனர். மேலும், ஹெலிகாப்டர்கள், கடற்படைத் தளங்கள், கடல்சார் ஆயுதங்கள் மற்றும் மின்னணுப் போர் உள்ளிட்ட தொழில்நுட்ப ஒத்துழைப்பு, கூட்டு உற்பத்தி மற்றும் கூட்டு மேம்பாட்டுத் திட்டங்களுக்கான கூட்டாண்மைகளை ஊக்குவிக்கும் ஒரு கூட்டு நோக்கப் பிரகடனம் மற்றும் பாதுகாப்புத் தொழில்துறை செயல்திட்டம் ஆகியவை ஏற்றுக்கொள்ளப்பட்டதை அவர்கள் வரவேற்றனர். தொழில்துறை மீள்திறனை வலுப்படுத்துவதன் மூலம் முக்கிய உள்கட்டமைப்புகளையும் அவற்றுடன் தொடர்புடைய விநியோகச் சங்கிலிகளையும் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் அங்கீகரித்தனர்.
எல்லை தாண்டிய பயங்கரவாதம் உட்பட, பயங்கரவாதத்தையும் அதன் அனைத்து வெளிப்பாடுகளையும் இரு தலைவர்களும், வன்மையாகக் கண்டித்தனர். ஏப்ரல் 2025-ல் நடந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு அவர்கள் கண்டனம் தெரிவித்ததுடன், ஐ.நா. பாதுகாப்பு சபையின் 1267 தடைகள் விதிமுறையில் பட்டியலிடப்பட்டுள்ள பயங்கரவாதிகள், பயங்கரவாதக் குழுக்கள் மற்றும் அவற்றின் துணை அமைப்புகளுக்கு எதிரான போராட்டத்தில் ஒத்துழைப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர். நிதி நடவடிக்கை பணிக்குழுவின் (எஃப்ஏடிஎஃப்) வழிகாட்டுதல்களுக்கு இணங்க, பயங்கரவாதிகளின் பாதுகாப்பான புகலிடங்களையும் உள்கட்டமைப்புகளையும் அகற்றுவதற்கும், பயங்கரவாத வலையமைப்புகளைச் சீர்குலைப்பதற்கும், பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை எதிர்த்துப் போராடுவதற்கும் அனைத்து நாடுகளும் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர். ஐ.நா., எஃப்ஏடிஎஃப் மற்றும் பலதரப்பு தளங்களில் இணைந்து பணியாற்றுவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் வலியுறுத்தினர்.
பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை எதிர்ப்பது தொடர்பான இந்தியா மற்றும் இத்தாலி இடையேயான நிரந்தரப் பணிக்குழுவின் முதல் கூட்டத்தையும், பயங்கரவாத எதிர்ப்புக்கான கூட்டுப் பணிக்குழுவின் வரவிருக்கும் கூட்டத்தையும் அவர்கள் வரவேற்றனர்.
வர்த்தகம், முக்கிய தொழில்நுட்பங்கள் மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்புக்கான ஒரு முக்கிய தளமாக இந்திய-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக மற்றும் தொழில்நுட்ப மன்றத்தை வலுப்படுத்துவதற்கான தங்கள் ஆதரவை அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர். இந்திய-ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்பு மற்றும் தற்காப்புக் கூட்டாண்மையைத் தலைவர்கள் வரவேற்றதுடன், இயங்குதன்மைக்கான ஒரு விரிவான கட்டமைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உட்பட, இயங்குதன்மை ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையும் பாராட்டினர்.
மேற்கு ஆசியா/மத்திய கிழக்கில் நிலவும் சூழல் மற்றும் அதன் விளைவாக அப்பிராந்தியத்திலும் உலகின் பிற பகுதிகளிலும் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இரு தலைவர்களும் ஆழ்ந்த கவலை தெரிவித்தனர். 2026 ஏப்ரல் 8 அன்று அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தத்தை தலைவர்கள் வரவேற்றதுடன், மேற்கு ஆசியா/மத்திய கிழக்கில் நீடித்த அமைதி நிலவ, பதற்றத்தைத் தணித்தல், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர். மேலும், கப்பல் போக்குவரத்திற்கான சுதந்திரம் மற்றும் ஹார்முஸ் நீரிணை வழியாக உலகளாவிய போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
உக்ரைனில் தொடரும் போர், பெரும் மனிதத் துயரங்களையும் எதிர்மறையான உலகளாவிய விளைவுகளையும் ஏற்படுத்தி வருவது குறித்து இரு தலைவர்களும் கவலை தெரிவித்தனர். சர்வதேசச் சட்டம் மற்றும் ஐ.நா. சாசனத்தின் கோட்பாடுகளுக்கு இணங்க, பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தின் மூலம் உக்ரைனில் ஒரு விரிவான, நேர்மையான மற்றும் நீடித்த அமைதியை அடைவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து ஆதரிக்க அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
இந்திய-இத்தாலி சிறப்பு உத்திசார் கூட்டாண்மையின் ஈர்க்கக்கூடிய வளர்ச்சியையும் ஆழத்தையும் குறிப்பிட்டத் தலைவர்கள், அனைத்துத் துறைகளிலும் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தவும், முக்கிய உலகளாவிய மற்றும் பிராந்திய நிகழ்வுகள் குறித்து நெருங்கிய உயர்மட்ட ஆலோசனைகளைத் தொடரவும் தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.
இத்தாலிய அரசும், மக்களும் வழங்கிய அன்பான விருந்தோம்பலுக்கு பிரதமர் திருமிகு மெலோனிக்குப் பிரதமர் திரு மோடி நன்றி தெரிவித்ததுடன், இந்தியாவிற்கு வருகை தருமாறு பிரதமர் திருமிகு மெலோனிக்கு அழைப்பு விடுத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263405®=3&lang=1
(Release ID: 2263405)
****
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2263507)
வருகையாளர் எண்ணிக்கை : 7