குடியரசுத் தலைவர் செயலகம்
வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த கைவினைஞர்கள் மற்றும் நெசவாளர்கள் குழு குடியரசுத் தலைவரைச் சந்தித்தது
இடுகை இடப்பட்ட நாள்:
19 MAY 2026 5:18PM by PIB Chennai
வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த கைவினைஞர்கள் மற்றும் நெசவாளர்கள் குழுவினர், குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தனர்.
கடந்த ஜனவரி 26 அன்று நடைபெற்ற குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியின் போது, அழைப்பிதழ் தொகுப்பை வடிவமைப்பதிலும், வடகிழக்கு இந்தியப் பகுதியின் பன்முகத்தன்மை கொண்ட கலை மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதிலும் இக்கலைஞர்கள் முக்கியப் பங்கு வகித்தனர். எடுத்துக்காட்டாக, நாகாலாந்து கைவினைஞர்கள் வாழை நாரையும் மூங்கிலையும் பயன்படுத்தி கூடைகளைச் செய்திருந்தனர்; அஸ்ஸாம் நெசவாளர்கள் துப்பட்டாக்களையும் , மணிப்பூர் கைவினைஞர்கள் கருப்பு மண்பாண்டங்களையும், சிக்கிம் கைவினைஞர்கள் இயற்கை நாரைப் பயன்படுத்திப் பொருட்களையும் தயாரித்திருந்தனர்.
இந்தச் சந்திப்பின் போது, குடியரசுத் தலைவர் மாளிகையின் வரவேற்பு நிகழ்ச்சிக்காகப் பணியாற்றிய தங்களது அனுபவங்களை கைவினைஞர்களும் நெசவாளர்களும் பகிர்ந்து கொண்டனர். மேலும், தங்களின் திறமைகளை வெளிப்படுத்த ஒரு சிறந்த தளத்தை வழங்கியதற்காக அவர்கள் நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.
அஸ்ஸாம், நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர், திரிபுரா, மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம்,சிக்கிம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த கைவினைஞர்கள் மற்றும் நெசவாளர்களுடன் கலந்துரையாடிய குடியரசுத் தலைவர், வடகிழக்கு மாநிலங்கள் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகள் என்று கூறினார். கைவினைஞர்கள் மற்றும் நெசவாளர்களின் கலை அறிவு சாமானிய மக்களையும் சென்றடையவும், அவர்கள் தற்சார்பு அடையவும் அவர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்து வளர்ப்பதற்காக கைவினைஞர்களுக்கும் நெசவாளர்களுக்கும் அவர் தமது பாராட்டுகளைத் தெரிவித்தார். நாட்டின் வாழும் பாரம்பரியத்தின் சிறந்த முன்மாதிரியாகத் திகழும் கைவினைஞர்கள் இந்த விலைமதிப்பற்ற பாரம்பரியங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கேட்டுக்கொண்டார்.
இச்சந்திப்பிற்குப் பிறகு, கைவினைஞர்கள் மற்றும் நெசவாளர்கள் குழுவினர் அமிர்த தோட்டம் உள்ளிட்ட குடியரசுத் தலைவர் மாளிகையின் பல்வேறு பகுதிகளை வழிகாட்டியுடன் சுற்றிப் பார்த்தனர்.
(Release ID: 2262862)
****
TV/PKV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2262955)
வருகையாளர் எண்ணிக்கை : 16