வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் இந்த ஆண்டு ஏற்றுமதி இலக்கு 1 டிரில்லியன் டாலர் : மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்

இடுகை இடப்பட்ட நாள்: 18 MAY 2026 2:54PM by PIB Chennai

இந்த ஆண்டு 1 டிரில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதியையும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 2 டிரில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதியையும் அடைய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது என்று மத்திய தொழில், வர்த்தகத் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார்.  புதுதில்லியில் இந்திய வர்த்தகப் பெருவிழாவின் (பாரதிய வியாபார் மகோத்சவம்) இணையதளத் தொடக்க விழாவில் உரையாற்றிய அவர், உலகளாவிய சவால்கள் இருந்தபோதிலும், இந்த ஆண்டு இந்தியாவின் ஏற்றுமதி கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட 5 சதவீதம் அதிகரித்து 863 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது என்று கூறினார். தற்போதைய உலகளாவிய சூழலில் இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்று குறிப்பிட்ட அவர், பொருட்கள், சேவைகள் ஆகிய இரண்டின் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது என்றார்.

 

 கடந்த மூன்றரை ஆண்டுகளில், சுமார் 38 நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். இந்த ஒப்பந்தங்கள் படிப்படியாக நடைமுறைக்கு வரும் என்று அவர் தெரிவித்தார். ஓமன் நாட்டுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஜூன் 1 முதல் அமலுக்கு வரக்கூடும் என்றும், மற்ற இறுதி செய்யப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களும் அடுத்தடுத்து செயல்பாட்டுக்கு வரும் என்றும் அவர் கூறினார்.

 

 பிரதமர் திரு நரேந்திர மோடியின் கனவான 2047-ல் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி, நாடு முன்னேற இடைவிடாமல் உழைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தரம், உற்பத்தித்திறன் ஆகிய இரண்டின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்த திரு பியூஷ் கோயல், நாட்டில் தரநிலைகள் மேம்பட வேண்டும் என்றும் உற்பத்தித்திறன் அதிகரிக்க வேண்டும் என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி விரும்புவதாகக் கூறினார். சிறந்த தரம் இல்லாமல், இந்தியாவால் உலகளாவிய சந்தைகளில் போட்டியிட இயலாத என்றும் அவர் குறிப்பிட்டார். உலகளாவிய சவால்கள் இருந்தபோதிலும், இந்தியா தொடர்ந்து வேகமாக முன்னேறி வருவதாகவும், ஏற்றுமதிகளும் சீராக வளர்ந்து வருவதாகவும் திரு பியூஷ் கோயல் கூறினார்.

 

இந்திய வர்த்தகப் பெருவிழா எனப்படும் பாரதிய வியாபார் மகோத்சவ் நிகழ்வுக்கு நாடு முழுவதிலுமிருந்து உற்பத்தித் துறையுடன் தொடர்புடையவர்களை அழைத்து வருமாறு இந்த நிகழ்வின் அமைப்பாளர்களை திரு பியூஷ் கோயல் கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்வு 2026 ஆகஸ்ட் 12 முதல் 15-ம் தேதி வரை தில்லியில் நடைபெறவுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2262262&reg=3&lang=1

***

(Release ID : 2262262)

SS/PLM/EA


(வெளியீட்டு அடையாள எண்: 2262401) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Bengali-TR , Gujarati