கூட்டுறவு அமைச்சகம்
தஷேலாவில் அதிநவீன பால் பதப்படுத்தும் ஆலை : மத்திய அமைச்சர் திரு அமித் ஷா திறந்து வைத்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
17 MAY 2026 7:28PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா குஜராத்தின் காந்திநகரில் உள்ள தஷேலாவில் அமைந்துள்ள மதுர் பால் பண்ணை பிரிவு-2-ன் அதிநவீன தானியங்கி பால் பதப்படுத்தும் ஆலையை இன்று (17.05.2026) திறந்து வைத்தார். இந்நிகழ்வில், குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல், குஜராத் துணை முதலமைச்சர் திரு ஹர்ஷ் சங்கவி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு அமித் ஷா, தஷேலாவில் நிறுவப்பட்டுள்ள இந்த நவீன பால் பண்ணை ஆலை வெறும் ஒரு தொழில்துறைத் திட்டம் மட்டுமல்ல எனவும், லட்சக்கணக்கான பால் உற்பத்தியாளர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கான ஒரு முக்கிய நடவடிக்கையும் ஆகும் என்றும் கூறினார். சுமார் ₹128 கோடி செலவில் 15 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த ஆலை, ஒரு நாளைக்கு 2.5 லட்சம் லிட்டர் பாலைப் பதப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது என்றும், இது எதிர்காலத்தில் ஒரு நாளைக்கு 5 லட்சம் லிட்டராக விரிவாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்தத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் லாபத்தின் பெரும் பங்கு, பால் உற்பத்தியாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகச் சென்றடையும் என்றும், அதன் மூலம் கிராமப்புறப் பொருளாதாரம் வலுப்பெறும் என்றும் திரு அமித் ஷா தெரிவித்தார். பால் கூட்டுறவு முறை, கிராமங்களில் உள்ள பெண்களின் சமூக - பொருளாதார நிலையைச் சிறப்பாக மாற்றியமைத்துள்ளது என்றும் அவர் கூறினார்.
சர்தார் வல்லபாய் படேல், திரிபுவன்தாஸ் படேல், டாக்டர் வர்கீஸ் குரியன் உள்ளிட்ட பல கூட்டுறவு முன்னோடிகளால் நிறுவப்பட்ட கூட்டுறவு மரபை முன்னெடுத்துச் செல்வதன் மூலம், மதுர் பால் பண்ணை இப்போது ஒரு வலுவான, நம்பகமான பால் நிறுவனமாக உருவெடுத்துள்ளது என்று அவர் தெரிவித்தார். 1971-ம் ஆண்டில் ₹7,000 வருவாயுடன் தனது பயணத்தைத் தொடங்கிய மதுர் பால் பண்ணை, தற்போது ₹628 கோடி ஆண்டு வருவாயுடன் பெரிய அளவிலான கட்டமைப்பைக் கொண்ட ஒரு நிறுவனமாக வளர்ந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்தச் சாதனை, கூட்டுறவின் வெற்றிக்கு ஒரு உதாரணம் என்று அவர் கூறினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில், அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் பால் உற்பத்தியை மும்மடங்காக்குவதை நோக்கமாகக் கொண்ட “வெண்மைப் புரட்சி 2.0” திட்டத்தை நாடு தொடங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். அமுல், பனாஸ் டெய்ரி, மெஹ்சானா டெய்ரி உள்ளிட்ட குஜராத்தின் முன்னணி பால் பண்ணைகள், கால்நடை விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்துவதற்காக உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பங்களைப் பின்பற்றி வருவதாக அவர் கூறினார். கூட்டுறவு கட்டமைப்பின் மூலம் இந்தப் பலன்கள் பால் உற்பத்தியாளர்களை நேரடியாகச் சென்றடைவதாகவும் திரு அமித் ஷா குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியின் போது, பால் கூட்டுறவு சங்கங்களுடன் இணைந்த பெண் பால் உற்பத்தியாளர்கள், மத்திய அமைச்சர் திரு அமித் ஷாவுக்கு, மதுர் பால் நிறுவனத்தின் தயாரிப்புத் தொகுப்பை வழங்கினர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2262052®=3&lang=1
***
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2262063)
வருகையாளர் எண்ணிக்கை : 4