PIB Backgrounder
பிரதமரின் ஐக்கிய அரபு அமீரகப் பயணம் எரிசக்தி, தொழில்நுட்பம், இணைப்பு மற்றும் உத்திசார் ஒத்துழைப்பை மேம்படுத்தும்
இடுகை இடப்பட்ட நாள்:
15 MAY 2026 8:31PM by PIB Chennai
பிரதமர் நரேந்திர மோடி 2026 மே 15 அன்று ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் மேற்கொண்டு, அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் கலந்துரையாடினார். இந்தப் பயணம், இருதரப்பு உத்திசார் கூட்டாண்மையில் ஏற்பட்டுள்ள வலுவான உத்வேகத்தை மீண்டும் உறுதிப்படுத்தியது. பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் சமூகத் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கு இரு நாடுகளும் உறுதியளித்தன. மீள்திறன் கொண்ட விநியோகத் தொடர்கள், நீண்டகாலப் பொருளாதார ஒத்துழைப்பு, பிராந்திய, உலகளாவிய முன்னுரிமைகளில் வளர்ந்து வரும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றையும் இந்தக் கலந்துரையாடல்கள் வலியுறுத்தின.
பிரதமரின் இந்தப் பயணம், விரிவடைந்து வரும் இந்தியா-ஐக்கிய அரபு அமீரகக் கூட்டாண்மையில் மற்றுமொரு முக்கியப் படியாக அமைகிறது. இதன் விளைவுகள் முக்கியத் துறைகளை உள்ளடக்கியிருப்பதோடு, இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் உத்திசார் ஒருங்கிணைப்பையும் பிரதிபலிக்கின்றன. இவை நீண்டகாலப் பொருளாதார மீள்திறன், தொழில்நுட்ப ஒத்துழைப்பு, பிராந்திய இணைப்பு ஆகியவற்றை வலுப்படுத்தும்.
விளைவு 1: இந்தியன் ஸ்ட்ராடஜிக் பெட்ரோலியம் ரிசர்வ்ஸ் லிமிடெட், அபுதாபி நேஷனல் ஆயில் கம்பெனி இடையேயான ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்
பெட்ரோலியத் துறையில் ஆழமான ஒத்துழைப்பின் மூலம் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை இந்த ஒப்பந்தம் வலுப்படுத்தும். இந்தியாவின் பெட்ரோலிய இருப்பு கட்டமைப்பையும் மேம்படுத்தும்.
திரவ இயற்கை எரிவாயு மற்றும் திரவ பெட்ரோலிய எரிவாயு சேமிப்பு உள்கட்டமைப்பில் புதிய வாய்ப்புகளை இந்த ஒப்பந்தம் உருவாக்கும். இது எரிசக்தி ஆதாரங்களைப் பன்முகப்படுத்தவும், சேமிப்புத் திறனை விரிவுபடுத்தவும் இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும்.
விளைவு 2: இந்தியன் ஆயில் லிமிடெட் நிறுவனம், அபுதாபி நேஷனல் ஆயில் கம்பெனி இடையே எல்பிஜி விநியோகம் தொடர்பான ஒத்துழைப்பு ஒப்பந்தம்.
இந்தியாவின் நீண்டகால எல்பிஜி விநியோகப் பாதுகாப்பை இந்த ஒத்துழைப்பு வலுப்படுத்தும். இது உள்நாட்டுத் தேவைக்கு ஒரு நிலையான, நம்பகமான எரிசக்தி ஆதாரத்தை உறுதி செய்யும். இந்த முன்னெடுப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான எரிசக்தி ஒத்துழைப்பையும் ஆழப்படுத்தும். இந்தியாவின் மிகவும் நம்பகமான எரிசக்தி கூட்டாண்மைகளில் ஒன்றாக ஐக்கிய அரபு அமீரகத்தின் நிலையை இது மேலும் வலுப்படுத்தும்.
விளைவு 3: உத்திசார் பாதுகாப்பு கூட்டாண்மைக்கான கட்டமைப்பு
இந்தக் கட்டமைப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புத் தளவாட தொழில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும். இது கூட்டுப் பங்களிப்புகள், இணை மேம்பாடு மற்றும் பரந்த தொழில் ஈடுபாட்டை ஊக்குவிக்கும். இது மேம்பட்ட பாதுகாப்புத் தளவாட உற்பத்தி மற்றும் திறன்களில் ஒத்துழைப்புக்கு உதவும் . பரந்த அளவில், இந்தக் கூட்டாண்மை தேசிய மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விளைவு 4: குஜராத் மாநிலம் வதினார் எனுமிடத்தில் கப்பல் பழுதுபார்க்கும் குழுமத்தை அமைப்பது தொடர்பாக கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட், டிரைடாக்ஸ் வேர்ல்ட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.
விளைவு 5: கப்பல் பழுதுபார்ப்பில் திறன் மேம்பாடு தொடர்பாக கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் (CSL), டிரைடாக்ஸ் வேர்ல்ட், சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் இன் மரைடைம் & ஷிப் பில்டிங் ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
விளைவு 6: இந்தியாவின் சிடிஏசி, ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜி-42 ஆகியவற்றின் கூட்டாண்மையில் 8 எக்ஸாஃப்ளாப் சூப்பர் கம்ப்யூட்டிங் தொகுப்பை அமைப்பதற்கான கால அட்டவணை
விளைவு 7: ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கான முதலீடு
இந்த முதலீட்டு உறுதிமொழிகள் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் நிதி ஒத்துழைப்பை வலுப்படுத்தும். அவை இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் வங்கித் துறைகளில் முதலீடுகளை அதிகரிக்கும்.
மொத்தத்தில், எதிர்காலத்தை நோக்கிய ஓர் உத்திசார் கூட்டாண்மையாக இருதரப்பு உறவுகள் உருமாறியிருப்பதைப் பிரதமரின் பயண விளைவுகள் காட்டுகின்றன. இந்த ஒப்பந்தங்கள், எரிசக்தி, வர்த்தகம், பாதுகாப்பு போன்ற பாரம்பரியத் துறைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை ஆழப்படுத்துகின்றன. மேலும், முன்னணித் தொழில்நுட்பங்கள், தளவாடங்கள், டிஜிட்டல் உள்கட்டமைப்பு, மேம்பட்ட உற்பத்தி ஆகியவற்றில் புதிய வாய்ப்புகளையும் அவை உருவாக்குகின்றன.
பிரதமரின் பயண விளைவுகள் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளன. அவை வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், கடல்சார் உள்கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு, பாதுகாப்புத் தளவாடத் தொழில்கள் ஆகியவற்றில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துகின்றன. இரு நாடுகளும் தங்களின் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் முன்னுரிமைகளை ஒருங்கிணைப்பதால், வரும் ஆண்டுகளில் பிராந்திய நிலைத்தன்மை, பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவற்றில் இந்தக் கூட்டாண்மை ஒரு பெரிய பங்கினை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2261611®=3&lang=2
TV/SMB/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2261680)
வருகையாளர் எண்ணிக்கை : 5