வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
தளவாடத் துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கான ‘லீப்ஸ்’ 2025 விருதுகளை மத்திய அமைச்சர் திரு. பியூஷ் கோயல் வழங்கினார்; ‘முன்னோடி’ மாநிலமாக தமிழ்நாடு தேர்வு
இடுகை இடப்பட்ட நாள்:
13 MAY 2026 8:33PM by PIB Chennai
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல், புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் 13 பிரிவுகளின் கீழ் ‘லீப்ஸ்’ (LEAPS) 2025 விருதுகளை வழங்கி, ‘லீட்ஸ்’ (LEADS) 2025 அறிக்கையை வெளியிட்டார். தளவாடத் துறையில் சிறந்து விளங்கும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன. பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையில், தளவாடச் செலவுகளைக் குறைத்து சர்வதேசப் போட்டியில் இந்தியாவை முன்னிலைப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இந்தியாவின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் தற்போது உலக வர்த்தகத்தில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான சந்தையை உள்ளடக்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். கடந்த நிதியாண்டில் உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் இந்தியா 863 பில்லியன் அமெரிக்க டாலர் ஏற்றுமதியை எட்டி சாதனை படைத்துள்ளது. நடப்பு நிதியாண்டிற்கு 1 டிரில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகள், கனடா உள்ளிட்ட நாடுகளுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாநிலங்களுக்கு இடையிலான தளவாடத் திறன் மதிப்பீட்டு அறிக்கையான ‘லீட்ஸ்’ 2025-இல், மாநிலங்கள் அவற்றின் செயல்பாடுகளின் அடிப்படையில் நான்கு நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில், கொள்கை அமலாக்கம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளில் சிறந்து விளங்கும் 'முன்னோடி' அந்தஸ்தைப் பெற்ற கடலோர மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு போன்ற சீர்திருத்தங்கள் இந்தியாவின் தளவாடத் துறையை உலகத் தரத்திற்கு உயர்த்தி வருவதாக அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2260854®=3&lang=2
***
EA/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2261105)
வருகையாளர் எண்ணிக்கை : 3