கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

இடுகை இடப்பட்ட நாள்: 13 MAY 2026 4:57PM by PIB Chennai

நாட்டின் கடல்சார் துறையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக, தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் பெரிய கப்பல் கட்டும் தளத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. கப்பல் கட்டும் துறையில் உலகளாவிய முன்னணி நிறுவனமான எச்டி கொரியா ஷிப்பிங் அண்ட் ஆஃப்ஷோர் இன்ஜினியரிங் கோ லிமிடெட் (HD KSOE), மத்திய அரசின் கீழ் உள்ள ஒரு முக்கிய துறைமுகமான வ உ  சிதம்பரனார் துறைமுக ஆணையம், நேஷனல் ஷிப்பிங் அண்ட் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் பார்க்,  சாகர்மாலா ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகியவற்றுக்கு இடையே 2026 ஏப்ரல் 20 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

 

தென் கொரிய அதிபர் திரு லீ ஜே மியுங்-கின் இந்திய பயணத்தின் போது, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிகள் துறை அமைச்சரின் முன்னிலையில் 20 ஏப்ரல் 2026 அன்று இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறப்பட்டது. பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கும் தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங்குக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் உருவானது.

 

தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம், இந்தியா-தென் கொரிய கடல்சார் ஒத்துழைப்புக் கட்டமைப்பின் கீழ் செயல்படுத்தப்பட்ட ஆரம்பகால நடவடிக்கைகளில் ஒன்றாகத் திகழ்வதோடு, கடல்சார் துறையில் இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் ஒத்துழைப்பைப் பிரதிபலிக்கிறது.

 

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், தூத்துக்குடியில் ஆண்டுக்கு 2.5 மில்லியன் மொத்த டன் (GT) கொள்ளளவு கொண்ட ஒரு உலகத் தரம் வாய்ந்த பிரம்மாண்ட கப்பல் கட்டும் தளத்தை கூட்டாக உருவாக்கி மேம்படுத்துதல், நிதியளித்தல், கட்டுதல், இயக்குதல் ஆகியவற்றுக்கு அடித்தளமிடுகிறது. இத்திட்டம், சுமார் 15,000 நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, தமிழ்நாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கணிசமான மறைமுக வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இத்திட்டத்திற்கான தொழில்நுட்ப-பொருளாதார சாத்தியக்கூறு அறிக்கை (TEFR) ஏற்கனவே முடிக்கப்பட்டுவிட்ட நிலையில், விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்தியாவின் கடல்சார் அமிர்த கால தொலைநோக்குப் பார்வையானது, 2047-ம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 4.5 மில்லியன் ஜிடி கப்பல் கட்டும் உற்பத்தியை இலக்காகக் கொண்டு, உலக அளவில் முதல் ஐந்து கப்பல் கட்டும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவை நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முன்மொழியப்பட்ட தூத்துக்குடி ஆலையானது, ஆண்டுக்கு 2.5 மில்லியன் ஜிடி திறன் கொண்டதாக அமையும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2260712&reg=3&lang=1

 

(Release ID: 2260712)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2260821) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Assamese