PIB Backgrounder
azadi ka amrit mahotsav

இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு மூலம் நிதி உள்ளடக்கம்

प्रविष्टि तिथि: 13 MAY 2026 11:23AM by PIB Chennai

வலுவான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பால், இந்தியாவின் நிதி உள்ளடக்கப் பயணம் ஒரு நல்ல மாற்றத்திற்குள்ளாகி வருகிறது . அடிப்படை வங்கிச் சேவைகளை விரிவுபடுத்தும் ஒரு முயற்சியாகத் தொடங்கிய இது, அறிவார்ந்த, அனைவரையும் உள்ளடக்கிய, உடனடி நிதிச் சேவைகளை பெரிய அளவில் வழங்குவதில் கவனம் செலுத்தும் தொழில்நுட்பம் சார்ந்த சூழலமைப்பாக உருவெடுத்துள்ளது. இது செயல்திறனை மேம்படுத்தி, சிறந்த நிதிச் சேவைத் தீர்வுகளைச் சாத்தியமாக்குகிறது.

இந்த மாற்றம், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், முறைசாரா தொழிலாளர்கள், கிராமப்புற மக்கள், பெண்கள் உள்ளிட்டோர், நிதிச் சேவைகளைப் பெறுவதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. செயற்கை நுண்ணறிவானது, முறையான நிதிச் சேவைக்கான அணுகலை அதிகரித்து, மேலாண்மையை வலுப்படுத்தி, நிதி மீட்சித் திறனை மேம்படுத்துகிறது. இந்தியா டிஜிட்டல் ரீதியான வலுவான பொருளாதாரத்தை நோக்கி முன்னேறி வரும் நிலையில், செயற்கை நுண்ணறிவு நிதி உள்ளடக்கத்தை விரைவுபடுத்துவது மட்டுமல்லாமல், நிதிச் சூழலமைப்பை மேலும் சிறப்பானதாகவும், பாதுகாப்பானதாகவும் மாற்றி அமைக்கிறது.

இந்த மாற்றம் புவியியல் ரீதியாக நிதிச் சேவைகள் அணுகக்கூடியதாகவும், மலிவானதாகவும், திறன் வாய்ந்ததாகவும் இருப்பதை உறுதி செய்கின்றன. ஜன் தன், ஆதார், மொபைல் போன் என்ற முப்பெரும் அம்சங்கள் என்பது வங்கிக் கணக்குகள், பயோமெட்ரிக் அடையாளம், செல்பேசி இணைப்பு ஆகியவற்றின் ஒரு அடிப்படை ஒருங்கிணைப்பாகும். இவை ஒவ்வொரு நபருக்கும் ஒரு தனித்துவமான நிதி அடையாளத்தையும், அரசுடன் நேரடி இணைப்பையும் வழங்குகின்றன. இதன் மூலம், நிதி அணுகலுக்கு புவியியல் அமைவிடம் இனி ஒரு தடையாக இருக்காது என்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.

மார்ச் 2026 நிலவரப்படி, 144 கோடிக்கும் அதிகமான ஆதார் எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

2015-ல் 14.72 கோடியாக இருந்த ஜன் தன் கணக்குகள், தற்போது 58.16 கோடியாக (ஏப்ரல் 2026 நிலவரப்படி) வளர்ந்துள்ளன. இதன்மூலம் திரட்டப்பட்ட வைப்புத்தொகை ரூ.3.02 லட்சம் கோடியாக (ஏப்ரல் 2026 நிலவரப்படி) அதிகரித்துள்ளதுஇது வங்கிச் சேவைகளைப் பெறாதவர்களை முறைசார்ந்த பொருளாதாரத்திற்குள் கொண்டு வந்துள்ளது.

யுபிஐ என்பது ஒரு மொபைல் தளம் வழியாக, வங்கிக் கணக்குகளுக்கு இடையில் உடனடிப் பணப் பரிமாற்றத்தை அனுமதிக்கும் ஒரு பணப் பரிமாற்ற முறையாகும். இது சிறு வணிகர்கள், தனிப்பட்ட பயனர்கள் இருவருக்கும் குறைந்த செலவிலான, இணக்கமான, பாதுகாப்பான அனுபவத்தை வழங்குவதன் மூலம், டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நேரடிப் பணப் பரிமாற்றத் திட்டத்தின் கீழ், அரசு மானியங்களும் நலத்திட்ட உதவிகளும் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகச் செலுத்தப்படுகின்றன. இடைத்தரகர்களை நீக்குவதன் மூலம் வெளிப்படைத்தன்மையும் செயல்திறனும் மேம்படுத்தப்படுகிறது. நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் ஏற்படும் கசிவுகளையும் தாமதங்களையும் அகற்றுவதுமே இதன் முதன்மை நோக்கமாகும். இதன் மூலம் இதுவரை மொத்தம் ரூ. 49.09 லட்சம் கோடி நலத்திட்ட உதவிகள் நேரடியாக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. போலி பயனாளிகளை நீக்கியதன் மூலம், அரசுக்கு ரூ.4.31 லட்சம் கோடிக்கும் மேல் சேமிப்பு ஏற்பட்டுள்ளது .

 இந்த டிஜிட்டல் அமைப்புகள் ஒரு வலுவான, ஒன்றோடொன்று இணக்கமான, தரவுகள் நிறைந்த நிதிச் சூழலமைப்பை உருவாக்கியுள்ளன. இத்தகைய வலுவான டிஜிட்டல் அடித்தளம், அனைவரையும் உள்ளடக்கிய நிதிப் பங்கேற்பை சாத்தியமாக்குகிறது. நிதிச் சேவைகளில் செயற்கை நுண்ணறிவு, புத்தாக்கத்திற்குத் தேவையான தரவுகளையும் உள்கட்டமைப்பையும் உருவாக்குகிறது .

வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை நோக்கி நாடு முன்னேறி வரும் நிலையில் , செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான நிதி உள்ளடக்கமானது, நிலையான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கும். மேலும், இது சிறந்த நிதிக் கட்டமைப்பை உருவாக்குவதில் இந்தியாவை உலக அளவில் முன்னணி நிலைக்கு உயர்த்தும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2260497&reg=3&lang=1

------

SS/PLM/SH


(रिलीज़ आईडी: 2260802) आगंतुक पटल : 62
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Gujarati , Malayalam