மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
தொழில்நுட்ப உருவாக்குநராக உருவெடுத்துள்ளது இந்தியா
பாரதத்தின் புதிய கண்டுபிடிப்புகள் 2026" கூட்டத்தில் மத்திய அமைச்சர் திரு. தர்மேந்திரபிரதான் பெருமிதம்
இடுகை இடப்பட்ட நாள்:
12 MAY 2026 7:48PM by PIB Chennai
புது தில்லியில் உள்ள சுஷ்மா ஸ்வராஜ் பவனில் நடைபெற்ற 'பாரதத்தின் புதிய கண்டுபிடிப்புகள் 2026"' உயர்நிலை தூதரகக் கூட்டத்தில் மத்திய கல்வி அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் இன்று உரையாற்றினார்.
2026-ஆம் ஆண்டை 'இந்தியா-பிரான்ஸ் கண்டுபிடிப்பு ஆண்டாக' முன்னிறுத்தி, ஜூன் 14-16 தேதிகளில் பிரான்ஸின் நீஸ் நகரில் நடைபெறவுள்ள பாரதத்தின் புதிய கண்டுபிடிப்புகள் 2026" நிகழ்விற்கான ஆயத்தப் பணியாக இக்கூட்டம் அமைந்தது. அமைச்சர் தனது உரையில், இந்தியா இன்று உலகளாவிய சவால்களைப் புதிய கண்டுபிடிப்புகளுக்கான வாய்ப்புகளாகக் கருதுவதாகவும், ஒரு தொழில்நுட்பச் சந்தையிலிருந்து உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப உருவாக்குநராக இந்தியா உருவெடுத்துள்ளதாகவும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
கடந்த பத்தாண்டுகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஒரு தேசிய முன்னுரிமையாக மாற்றப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இந்தியாவின் புதிய கல்விக் கொள்கை மற்றும் அடல் புத்தாக்க இயக்கம் போன்றவை இளைஞர்களிடையே தொழில்முனைவு கலாச்சாரத்தை உருவாக்கி வருவதாகத் தெரிவித்தார். மேலும், "தொழில்நுட்பம் மனிதகுலத்திற்குச் சேவை செய்ய வேண்டும்" என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையுடன், உலகளாவிய தெற்கு நாடுகளுக்குக் குறைந்த செலவிலான மற்றும் உள்ளடக்கிய தீர்வுகளை வழங்க இந்தியா தயாராக உள்ளது என்றார்.
வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி பேசுகையில், தொழில்நுட்பம் மற்றும் உயர்கல்வித் துறையில் இந்த முயற்சி மிகவும் முக்கியமானது என்றும், பிரான்ஸ் இந்தியாவின் ஒரு முக்கிய கூட்டாளியாகத் திகழ்வதையும் வலியுறுத்தினார். உயர்கல்வித் துறை செயலாளர் டாக்டர் வினீத் ஜோஷி, இந்தியாவின் கல்வி நிறுவனங்கள் வெறும் கற்பித்தலோடு நில்லாமல் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் மையங்களாக மாறிவருவதாகக் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் பல்வேறு நாட்டுத் தூதர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு இந்தியாவின் வளர்ந்து வரும் கண்டுபிடிப்புச் சூழல் குறித்துக் கலந்துரையாடினர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2260406®=3&lang=1
****
TV/VK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2260467)
வருகையாளர் எண்ணிக்கை : 7