PIB Backgrounder
azadi ka amrit mahotsav

வளர்ச்சியடைந்த இந்தியா கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாதச் சட்டம், 2025 "அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்"

இடுகை இடப்பட்ட நாள்: 11 MAY 2026 12:19PM by PIB Chennai

1. வளர்ச்சியடைந்த இந்தியா கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாதச் சட்டம், 2025 என்றால் என்ன?

வளர்ச்சியடைந்த இந்தியா கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாதச் சட்டம், 2025 என்பது ஒரு கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் மேம்பாட்டுச் சட்டமாகும். இது கிராமப்புறக் குடும்பங்களுக்கு 125 நாட்கள் ஊதியம் வழங்கும் திறன்சாரா வேலைவாய்ப்பிற்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிப்பதன் மூலமும், உற்பத்தித் திறன் கொண்ட கிராமப்புறச் சொத்துக்களை உருவாக்குவதை ஊக்குவிப்பதன் மூலமும், கிராமப்புற வளர்ச்சியை 'வளர்ச்சியடைந்த இந்தியா 2047 தொலைநோக்குப் பார்வையுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

2. இந்தச் சட்டம் எப்போது நடைமுறைக்கு வரும்?

வளர்ச்சியடைந்த இநதியா – வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத் திற்கான உத்தரவாத சட்டம், மத்திய அரசால் அறிவிக்கப்பட்டபடி, 01.07.2026 முதல் நாட்டின் அனைத்து கிராமப்புறப் பகுதிகளிலும் நடைமுறைக்கு வரும்.

3. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் எப்போது ரத்து செய்யப்படும்?

மத்திய அரசால் அறிவிக்கப்பட்டபடி, தற்போது நடைமுறையில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம், 01.07.2026 முதல் ரத்து செய்யப்படும்.

 

4. இந்தச் சட்டம் அனைத்து மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் அமல்படுத்தப்படுமா?

ஆம். மத்திய அரசால் அறிவிக்கப்பட்டபடி, வளர்ச்சியடைந்த இந்தியா கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாதச் சட்டம் , 01.07.2026 முதல் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் அமல்படுத்தப்படும்.

5. இந்தச் சட்டத்தின் கீழ் எத்தனை நாட்கள் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது?

திறன் சாரா உடல் உழைப்புப் பணிகளை செய்ய முன்வரும் வயது வந்த உறுப்பினர்களைக் கொண்ட ஒவ்வொரு தகுதியுள்ள கிராமப்புறக் குடும்பத்திற்கும், ஒரு நிதியாண்டில் 125 நாட்கள் ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பிற்கு இந்தச் சட்டம் உத்தரவாதம் அளிக்கிறது.

6. இந்தச் சட்டத்தின் கீழ் மாநில அரசுகள் திட்டங்களை உருவாக்க வேண்டுமா?

ஆம். இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் இச்சட்டத்தின் விதிகளுக்கு இணங்க மாநில அரசுகள் உரிய திட்டங்களை அறிவிக்க வேண்டும்.

7. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகு, தற்போது நடைபெற்று வரும் பணிகள் என்னவாகும்?

இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரும் தேதியன்று (01.07.2026), மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் கீழ் பாதியில் இருக்கும் பணிகள், வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாதச் சட்டத்தின் விதிகளின்படி தொடர்ந்து நடைபெறும். பொதுச் சொத்துக்களின் பணிகள் பாதியில் நின்றுவிடாமல் இருப்பதையும், சமுதாய நலன்கள் தொடருவதையும் உறுதி செய்யும் வகையில், இந்தப் பணிகள் தடையின்றி புதிய சட்டத்திற்கு மாற்றப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் முடிக்கப்படும்.

8. புதிய சட்டத்திற்கு மாறும் காலக்கட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு தொடருமா?

ஆம். வளர்ச்சியடைந்த இந்தியா கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாதச் சட்டம்  நடைமுறைக்கு வரும் வரை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு எந்தவிதத் தடையுமின்றித் தொடர்ந்து வழங்கப்படும்.

9. புதிய சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக, தடையின்றி வேலை கிடைப்பதை உறுதி செய்ய என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?

தடையற்ற வேலைவாய்ப்புகள் மற்றும் சரியான நேரத்தில் ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக, வளர்ந்து வரும் தேவைகள் மற்றும் களத் தேவைகளுக்கு ஏற்ப, போதுமான தொழிலாளர்களுக்கான மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் நிதி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது.

10. இடைப்பட்ட காலக்கட்டத்தில் புதிய பணிகளைத் தொடங்க முடியுமா?

ஆம். தற்போது நடைபெற்று வரும் பணிகள் வேலை வாய்ப்புத் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லாதபோது, வளர்ச்சியடைந்த இந்தியா கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாதச் சட்டத்தின் அட்டவணை I-ன் கீழ் அனுமதிக்கப்பட்ட புதிய பணிகளைத் தொடங்கலாம்.

11. புதிய சட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் தொடர்ந்து கிடைக்குமா?

ஆம். உடல் உழைப்பு வேலைகளைச் செய்ய முன்வரும் வயது வந்த உறுப்பினர்களைக் கொண்ட ஒவ்வொரு கிராமப்புறக் குடும்பத்திற்கும் சட்டப்பூர்வ வேலைவாய்ப்பு உத்தரவாதம் தொடர்ந்து கிடைக்கும். இந்த உத்தரவாதமானது ஒரு நிதியாண்டிற்கு 100 நாட்களில் இருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

12. தற்போதுள்ள வேலை அட்டைகள் அல்லது தொழிலாளர்கள் விவரங்கள் செல்லுபடியாகுமா?

ஆம். தற்போதுள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்ட வேலை அட்டைகள் மற்றும் மின்னணு முறையில் உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்து கொள்ளுங்கள் நடைமுறைகள் முடிக்கப்பட்ட தொழிலாளர்களின் விவரங்கள் அனைத்தும், வளர்ச்சியடைந்த இந்தியா கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாதச் சட்டம் 2025-ன் விதிகளின்படி புதிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத அட்டைகள் வழங்கப்படும் வரை தொடர்ந்து செல்லுபடியாகும்.

13. இந்தச் சட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு பெறத் தகுதியுடையவர்கள் யார்?

திறன் சாரா உடல் உழைப்புப் பணிகளை செய்ய முன்வரும் வயது வந்த உறுப்பினர்களைக் கொண்ட ஒவ்வொரு கிராமப்புறக் குடும்பமும் இந்தச் சட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.

14. ஒரு குடும்பம் கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத அட்டைக்கு எவ்வாறு பதிவு செய்வது?

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்ட வேலை அட்டை இல்லாத எந்தவொரு கிராமப்புறக் குடும்பமும், தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த வயது வந்த உறுப்பினர் ஒருவர் மூலம், குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள், வயது மற்றும் முகவரி விவரங்களைச் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சியில் சமர்ப்பித்து, கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத அட்டை பெறுவதற்குப் பதிவு செய்யலாம்.

15. ஒரு குடும்பம் எவ்வாறு வேலைவாய்ப்பைக் கோரலாம்?

கிராமப்புறங்களில் உள்ள வயது வந்த உறுப்பினர்கள் கிராம ஊராட்சி மூலம் வேலைவாய்ப்பைக் கோரலாம். இதற்கான விண்ணப்பங்களை வாய் மொழியாகவோ, எழுத்துப்பூர்வமாகவோ அல்லது டிஜிட்டல் தளங்கள் வாயிலாகவோ கிராம ஊராட்சி, திட்ட அலுவலர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியிடம் சமர்ப்பிக்கலாம்.

16. விண்ணப்பித்த எத்தனை நாட்களுக்குள் வேலை வழங்கப்பட வேண்டும்?

விண்ணப்பித்த தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் வேலை வழங்கப்பட வேண்டும்.

17.  15 நாட்களுக்குள் வேலை வழங்கப்படாவிட்டால் என்ன நடக்கும்?

அவ்வாறு வேலை வழங்கப்படாத பட்சத்தில், சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் வேலையில்லா காலத்திற்கான உதவித்தொகை பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.

18. வேலை வழங்கப்படாத பட்சத்தில் வேலையில்லா கால உதவித்தொகை எவ்வளவு செலுத்தப்படும்?

வேலை கோரிய குறிப்பிட்ட காலத்திற்குள் வேலை வழங்கப்படாவிட்டால், மாநில அரசால் வேலையில்லா கால உதவித்தொகை வழங்கப்பட வேண்டும். இது அந்த நிதியாண்டின் முதல் முப்பது நாட்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊதிய விகிதத்தில் நான்கில் ஒரு பங்கிற்கு குறையாமலும், மீதமுள்ள காலத்திற்கு அறிவிக்கப்பட்ட ஊதிய விகிதத்தில் பாதியளவிற்கு குறையாமலும் இருக்க வேண்டும்.

19. வளர்ச்சியடைந்த இந்தியா கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாதத் திட்டத்தின் கீழ் உயர்த்தப்பட்ட ஊதிய விகிதங்கள் வழங்கப்படுமா?

ஆம். இந்தச் சட்டத்தின் பிரிவு 10-ன் விதிகளின்படி உயர்த்தப்பட்ட ஊதிய விகிதங்கள் வழங்கப்படும். இந்தச் சட்டத்தின் கீழ் புதிய ஊதிய விகிதங்கள் அறிவிக்கப்படும் வரை, தற்போதுள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்ட ஊதிய விகிதங்களே தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

20. எவ்வளவு கால இடைவெளியில் ஊதியம் வழங்கப்படும்?

ஊதியம் வாரந்தோறும் வழங்கப்பட வேண்டும். ஏதேனும் ஒரு காரணத்தினால் தாமதம் ஏற்பட்டால், பணிப்பதிவேடு நிறுத்தப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் கண்டிப்பாக ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

21. ஊதியம் எவ்வாறு வழங்கப்படுகிறது?

ஊதியமானது நேரடிப் பயன் பரிமாற்றம் மூலம் தொழிலாளர்களின் வங்கி அல்லது அஞ்சலகத் தனிநபர் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது.

22. ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் என்ன நடக்கும்?

பணிப்பதிவேடு நிறுத்தப்பட்ட பதினைந்து நாட்களுக்குள் ஊதியம் வழங்கப்படாவிட்டால், தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் வழங்கப்படாத ஊதியத்தில் 0.05 சதவீத விகிதத்தில் தாமதக் கூட்டு ஈட்டுத் தொகையைப் பெற வேலை தேடுபவர்களுக்கு உரிமை உண்டு.

23. புதிய சட்டத்தின் கீழ் வருகைப் பதிவு எவ்வாறு எடுக்கப்படும்?

பணியிடங்களில் வருகைப் பதிவானது முகம் அடையாளம் காணும் தொழில்நுட்பம் சார்ந்த வருகைப் பதிவு முறை மூலம் எடுக்கப்படும். இருப்பினும், இணைய வசதி இல்லாமை, தொழில்நுட்பக் கோளாறுகள், சாதனம் தொடர்பான சிக்கல்கள் அல்லது பிற தவிர்க்கமுடியாத சூழ்நிலைகள் போன்ற உண்மையான காரணங்களுக்காக, அரசின் வழிகாட்டுதல்களின்படி மாற்று ஏற்பாட்டு முறைகளும் நடைமுறையில் இருக்கும்.

24. தொழிலாளர்களுக்குப் பணியிட வசதிகள் கிடைக்குமா?

ஆம். பணியிடத்தில் தேவையான வசதிகள் செய்து தரப்படும். ஒவ்வொரு பணியிடத்திலும் பாதுகாப்பான குடிநீர், குழந்தைகளுக்கான நிழல் வசதி, ஓய்வு நேரத்திற்கான வசதி மற்றும் முதலுதவிப் பெட்டி ஆகியவை கண்டிப்பாக இருக்க வேண்டும்.

25. விவசாயப் பணிகள் அதிகமாக இருக்கும் காலங்களில் வேலை தொடருமா?

விதைப்பு மற்றும் அறுவடை போன்ற விவசாயப் பணிகள் அதிகமாக இருக்கும் காலங்களில் போதிய தொழிலாளர்கள் கிடைப்பதை உறுதி செய்ய, அந்தப் குறிப்பிட்ட காலங்களில் இந்தச் சட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று மாநில அரசுகள் அறிவிக்கும்.

26. வேலை செய்யும் இடம் ஐந்து கிலோமீட்டருக்கு மேல் இருந்தால் என்ன நடக்கும்?

இயன்றவரை, விண்ணப்பதாரரின் கிராமத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் சுற்றளவிற்குள்ளேயே வேலை வழங்கப்படும். ஒருவேளை அதற்கு அப்பால் (ஆனால் அதே வட்டாரத்திற்குள்) வேலை வழங்கப்பட்டால், போக்குவரத்து மற்றும் வாழ்வாதார செலவுகளுக்காக அறிவிக்கப்பட்ட ஊதியத்தில் கூடுதலாக 10 சதவீதத் தொகை தொழிலாளர்களுக்கு வழங்கப்படும்.

27. மாவட்ட அளவில் இந்தத் திட்டத்தை யார் செயல்படுத்துவார்கள்?

மாவட்ட ஆட்சியர் அல்லது மாநில அரசால் நியமிக்கப்பட்ட அதற்கு இணையான அதிகாரி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுவார்.

28. திட்ட அலுவலராக யார் பணியாற்றுவார்கள்?

வட்டார வளர்ச்சி அலுவலர் நிலைக்குக் குறையாத ஒரு அதிகாரி வட்டார அளவில் திட்ட அலுவலராக நியமிக்கப்படுவார்.

29. கிராம ஊராட்சிகளின் பங்கு என்ன?

குடும்பங்களைப் பதிவு செய்தல், வேலைவாய்ப்புக்கான விண்ணப்பங்களைப் பெறுதல், பணிகளைச் செயல்படுத்துதல், திட்டம் தொடர்பான பதிவேடுகளைப் பராமரித்தல் மற்றும் வளர்ச்சியடைந்த கிராம ஊராட்சித் திட்டங்களைத் தயாரித்தல் உள்ளிட்ட இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் கிராம ஊராட்சிகள் முக்கியப் பங்கு வகிக்கும்.

30. ஒப்பந்ததாரர்கள் அனுமதிக்கப்படுவார்களா?

இல்லை, இந்தச் சட்டத்தின் கீழ் நிதியளிக்கப்படும் பணிகளைச் செயல்படுத்துவதற்கு ஒப்பந்ததாரர்களை ஈடுபடுத்த முடியாது.

31. கனரக இயந்திரங்களைப் பயன்படுத்த முடியுமா?

இல்லை, பணிகள் அனைத்தும் உடல் உழைப்பு மூலமே செய்யப்பட வேண்டும். நடைமுறைக்குச் சாத்தியமான வரை, தொழிலாளர்களின் வேலையைப் பறிக்கும் வகையிலான இயந்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது.

32. இந்தச் சட்டத்தின் கீழ் நிதிப் பகிர்வு முறை எவ்வாறு இருக்கும்?

நிதிப் பகிர்வு முறையானது பின்வருமாறு அமையும்:

•    வடகிழக்கு மற்றும் இமயமலைப் பகுதி மாநிலங்களுக்கு 90:10 என்ற விகிதத்தில் அமையும்.

•    சட்டமன்றம் கொண்ட இதர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 60:40 என்ற விகிதத்தில் அமையும்.

•    சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசங்களுக்கு 100 சதவீதம் மத்திய அரசே நிதி வழங்கும்.

33. இந்தச் சட்டத்தின் கீழ் மாநில வாரியான நிதி ஒதுக்கீடு எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது?

மாநில வாரியான நிதி ஒதுக்கீடுகள், இந்தச் சட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ள புறநிலை அளவுகோல்களின் அடிப்படையில் மத்திய அரசால் தீர்மானிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

34.பொருட்களுக்கான செலவினம் எத்தனை சதவீதம் அனுமதிக்கப்படுகிறது?

இந்தச் சட்டத்தின் கீழ் பொருட்களுக்கான கூறுகளுக்குச் செய்யப்படும் செலவினம் மாவட்ட அளவில் 40 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

35. பணியிடத்தில் வெளிப்படைத்தன்மை எவ்வாறு உறுதி செய்யப்படுகிறது?

ஒவ்வொரு பணியிடத்திலும் ஒரு அறிவிப்பு பலகை கட்டாயம் வைக்கப்பட்டிருக்க வேண்டும். அதில் பணியின் விவரங்கள், மதிப்பிடப்பட்ட வேலை நாட்கள், பொருட்களின் அளவு மற்றும் ஒவ்வொரு பொருளுக்கான செலவு விவரங்கள் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

36. இந்தத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்துப் பொதுமக்களுக்கு எவ்வாறு தெரிவிக்கப்படுகிறது?

முக்கிய அளவீடுகள், பணிப்பதிவேடுகள், ஊதியப் பட்டுவாடாக்கள் மற்றும் நிதி அனுமதிகள் போன்ற விவரங்கள் டிஜிட்டல் முறையிலும் நேரடியாகவும் வாரந்தோறும் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படும். மேலும், கிராம ஊராட்சிகள் வாரந்தோறும் இது குறித்த வெளிப்படையான கூட்டங்களை நடத்த வேண்டும்.

37. வளர்ச்சியடைந்த கிராம ஊராட்சித் திட்டம் என்றால் என்ன?

வளர்ச்சியடைந்த கிராம ஊராட்சித் திட்டம் என்பது, வளர்ச்சியடைந்த இந்தியா @2047 இலக்கிற்கு ஏற்ப, மக்களின் பங்கேற்பு மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் கிராம ஊராட்சிகளால் தயாரிக்கப்படும் ஒரு எதிர்கால உள்ளூர் மேம்பாட்டுத் திட்டமாகும். இது பல்வேறு அரசுத் திட்டங்களை ஒருங்கிணைத்துச் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

38. வளர்ச்சியடைந்த கிராம ஊராட்சித் திட்டம் ஏன் முக்கியமானது?

இந்தச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் அனைத்துப் பணிகளும் கிராம ஊராட்சிகளால் தயாரிக்கப்பட்டு, கிராம சபையால் அங்கீகரிக்கப்பட்ட இந்தத் திட்டத்திலிருந்தே தொடங்கப்பட வேண்டும். இது தேவையின் அடிப்படையிலான, ஒருங்கிணைந்த மற்றும் முழுமையான கிராமப்புற வளர்ச்சியை உறுதி செய்வதால் இந்தத் திட்டம் மிக முக்கியமானது.

39. இந்தச் சட்டத்தின் கீழ் என்னென்ன வகையான பணிகளுக்கு அனுமதி உண்டு?

நிலையான மற்றும் நெகிழ்வான கிராமப்புற வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில், இந்தச் சட்டம் நான்கு முக்கியப் பிரிவுகளின் கீழ் பணிகளைச் செய்ய அனுமதிக்கிறது:

•    நீர் பாதுகாப்புப் பணிகள்

•    அடிப்படை கிராமப்புற உள்கட்டமைப்பு

•    வாழ்வாதாரம் சார்ந்த உள்கட்டமைப்பு

•    கடுமையான வானிலை பாதிப்புகளைக் குறைக்கும் பணிகள்

40.  இதர திட்டங்களுடன் ஒருங்கிணைந்து பணிகளைச் செய்ய முடியுமா?

 

ஆம். மத்திய, மாநில மற்றும் உள்ளூர் திட்டங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம், "ஒரே திட்டம், பல நிதி ஆதாரங்கள்" என்ற அணுகுமுறையை இந்தச் சட்டம் ஊக்குவிக்கிறது.

41. பிரதமரின் ஊரக வீட்டு வசதித் திட்டப் பணிகளுக்கு 90 அல்லது 95 மனித வேலைநாட்கள் ஊதிய ஆதரவை இந்தச் சட்டத்தின் கீழ் பெற முடியுமா?

ஆம். தகுந்த வழிகாட்டுதல்களின்படி, பிரதமரின் ஊரக வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு 90 அல்லது 95 மனித வேலைநாட்களுக்கான ஊதிய ஆதரவை இந்தச் சட்டத்தின் கீழ் பெற்றுக்கொள்ள முடியும்.

42. இயற்கை பேரிடர்களின் போது தளர்வுகள் உண்டா?

ஆம். இயற்கை பேரிடர்கள் அல்லது அசாதாரண சூழ்நிலைகளின் போது, சம்பந்தப்பட்ட மாநில அரசின் பரிந்துரையின் பேரில், அனுமதிக்கப்பட்ட பணிகளை விரிவுபடுத்துதல், கூடுதல் வேலைநாட்கள் வழங்குதல் மற்றும் ஆவணச் சமர்ப்பிப்பு முறைகளில் சலுகைகள் அளித்தல் போன்ற சிறப்புத் தளர்வுகளை மத்திய அரசு வழங்க முடியும்.

ஆதாரம்: ஊரக மேம்பாட்டு அமைச்சகம்

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2259712&reg=3&lang=1

***

AD/VK/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2260391) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Punjabi , Gujarati