புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மையான கடற்கரை, பாதுகாப்பான கடற்கரை' 2026 திட்டத்தின் கீழ், செப்டம்பர் 12 முதல் ஒரு வார கால கடற்கரை தூய்மைப்படுத்தும் இயக்கம் நடைபெறுகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 09 MAY 2026 5:13PM by PIB Chennai

தூய்மையான கடற்கரை, பாதுகாப்பான கடற்கரை' பிரச்சாரத்திற்கான ஏற்பாடுகள் குறித்து, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை இணையமைச்சர், டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமையில், உயர்நிலை ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. மேலும், விரைவில் நடைபெறவுள்ள இந்திய சர்வதேச அறிவியல் விழாவிற்கான   ஏற்பாடுகளையும் அவர் ஆய்வு செய்தார். இந்த இரண்டு தேசிய முன்னெடுப்புகளையும் திறம்படச் செயல்படுத்துவதை உறுதிசெய்ய, பல்வேறு நிறுவனங்களுக்கு இடையே தடையற்ற ஒருங்கிணைப்பும், பரவலான மக்கள் பங்கேற்பும் அவசியம் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

பிருத்வி பவனில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், 2026-ம் ஆண்டிற்கான நாடு தழுவிய கடற்கரை தூய்மைப்படுத்தும் இயக்கத்தின் செயல் திட்டம் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. இந்த இயக்கம் செப்டம்பர் 12 முதல் 19 வரை நடத்தப்பட உள்ளது. இந்த ஒருவாரகால இயக்கம் 'சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினம்' அன்று நிறைவடையும். மத்திய புவி அறிவியல் அமைச்சகம், அதன் கீழ் செயல்படும் நிறுவனங்களைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள், இந்தியக் கடலோரக் காவல்படை, சீமா ஜாக்ரன் மன்ச், பர்யாவரன் சன்ரக்ஷன் கதிவிதி, விபா மற்றும் இதர தொடர்புடைய அமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். உயிரித் தொழில்நுட்பத் துறையின் செயலாளர் டாக்டர் ராஜேஷ் எஸ் கோகலே, மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு டி செந்தில் பாண்டியன் மற்றும் விஞ்ஞானி 'ஜி' டாக்டர் ஜக்வீர் சிங் ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.

இந்தியாவின் 11,098 கி.மீ நீளமுள்ள கடற்கரைப் பகுதி முழுவதும், மத்திய மற்றும் மாநில அமைச்சகங்கள், கல்வி, ஆராய்ச்சி நிறுவனங்கள், மாவட்ட நிர்வாகங்கள், இளைஞர் அமைப்புகள் மற்றும் உள்ளூர் சமூகங்களின் தீவிரப் பங்கேற்புடன், 2026-ம் ஆண்டிற்கான இந்தப் பிரச்சார இயக்கம் நாடு தழுவிய இயக்கமாக நடத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். கடற்கரை பாதுகாப்பு, கடல்சார் சூழலியல் பாதுகாப்பு ஆகியவற்றின் மீது, நாட்டின் அர்ப்பணிப்பு அதிகரித்து வருவதையே, இந்தப் பிரச்சார இயக்கம் பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தின் போது சமர்ப்பிக்கப்பட்ட ஒரு விளக்கக்காட்சியில், 'தேசிய கடற்கரை ஆராய்ச்சி மையத்தால்' ஒருங்கிணைக்கப்பட்ட 2025-ம் ஆண்டிற்கான பிரச்சார இயக்கத்தின்  முன்னேற்ற விவரங்கள் குறித்தும் இதில் ஆய்வு செய்யப்பட்டன. கடலோரப் பகுதிகளில் இருந்து 150 டன்களுக்கும் அதிகமான கடல் குப்பைகளை ஆவணப்படுத்த உதவியுள்ள, மக்கள், அறிவியல் தளமான சாகர் செயலியின் பங்களிப்பை இந்த ஆய்வு எடுத்துக்காட்டியது.

பிருத்வி திட்டத்தின் கீழ் நடைபெறும் இந்த பிரச்சார இயக்கம், அறிவியல் கண்காணிப்பை பொதுமக்களின் பங்கேற்புடன் இணைத்து, கடல்நீரின் தர மதிப்பீடு, கடல் குப்பை மேலாண்மை மற்றும் கடற்கரை அரிப்பு போன்ற கடலோர அபாயங்களைத் தணித்தல் தொடர்பான நீண்டகால முயற்சிகளுக்கு ஆதரவளிக்கிறது என்று அமைச்சர் கூறினார். இந்த இயக்கத்தின் செயல்பாடுகளை விரிவுபடுத்த, என்.சி.சி, என்.எஸ்.எஸ், கல்வி நிறுவனங்கள், தன்னார்வக் குழுக்கள் மற்றும் குடிமைச் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் நீடித்த கடல்சார் பொருளாதாரம் குறித்த தொலைநோக்குப் பார்வையைக் குறிப்பிட்டு, அறிவியல் நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதரவுடன், சமூகத்தால் மேற்கொள்ளப்படும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான ஒரு முன்மாதிரியாக, இந்தியாவின் கடலோரப் பாதுகாப்பு முயற்சிகள் உருவாகி வருவதாக டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2259386&reg=3&lang=1

(Release ID: 2259386)

****

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2259410) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: Telugu , English , Urdu , हिन्दी , Marathi