பிரதமர் அலுவலகம்
புது தில்லியில் நடைபெற்ற சர்வதேச ஆரிய மகா சம்மேளன மாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்
இடுகை இடப்பட்ட நாள்:
31 OCT 2025 6:08PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் நடைபெற்ற சர்வதேச ஆரிய மகாசம்மேளனம் 2025-ல் உரையாற்றினார். இந்த நிகழ்வில் பேசிய திரு நரேந்திர மோடி, சுவாமி தயானந்தரின் கொள்கைகள் மீது ஆழ்ந்த மரியாதையை வெளிப்படுத்தினார்.
கடந்த ஆண்டு குஜராத்தில் மகரிஷி தயானந்த சரஸ்வதியின் பிறந்த இடத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்றதை திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார். அதற்கு முன்பு, தில்லியில் மகரிஷி தயானந்த சரஸ்வதியின் 200;வது பிறந்தநாள் விழாவைத் தொடங்கி வைக்கும் பாக்கியம் தமக்குக் கிடைத்தது என அவர் கூறினார்.
இப்போது மீண்டும் ஒருமுறை, ஆரிய சமாஜத்தின் 150-வது நிறுவன ஆண்டு கொண்டாட்டங்களின் போது தனது மனமார்ந்த மரியாதையை செலுத்தும் வாய்ப்பு கிடைத்ததாக அவர் கூறினார். சுவாமி தயானந்த சரஸ்வதியின் பாதங்களில் அஞ்சலி செலுத்துவதாக அவர் தெரிவித்தார்.
ஆரிய சமாஜத்தின் 150-வது ஆண்டு விழா என்பது ஒரு குறிப்பிட்ட சமூகம் அல்லது பிரிவினருக்கான ஒரு நிகழ்வு மட்டுமல்ல எனவும் இது தேசத்தின் வேத அடையாளத்துடன் ஆழமாக இணைக்கப்பட்ட ஒரு கொண்டாட்டம் என்றும் பிரதமர் கூறினார். இந்த நிகழ்வு ஆர்ய சமாஜம் தொடர்ந்து முன்னெடுத்து வரும் சமூக சீர்திருத்தத்தின் மகத்தான மரபில் வேரூன்றியுள்ளது என்பதை பிரதமர் எடுத்துரைத்தார். இந்த இயக்கம் ஏராளமான சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு சித்தாந்த வலிமையை வழங்கியது என்று அவர் குறிப்பிட்டார். ஆரிய சமாஜத்திலிருந்து உத்வேகம் பெற்று சுதந்திரப் போராட்டத்திற்கு முழுமையாக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட பல புரட்சியாளர்களில் லாலா லஜபதி ராய், தியாகி ராம்பிரசாத் பிஸ்மில் போன்ற உதாரணங்களை அவர் மேற்கோள் காட்டினார். அரசியல் காரணங்களால், சுதந்திர இயக்கத்தில் ஆரிய சமாஜத்தின் குறிப்பிடத்தக்க பங்கிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று பிரதமர் கவலை தெரிவித்தார்.
ஆரிய சமாஜம் தனது 150-வது ஆண்டைக் கொண்டாடும் வேளையில், தயானந்த சரஸ்வதியின் மகத்தான கொள்கைகளுக்கு சமூகமும் தேசமும் மரியாதை செலுத்தி வருவதாக பிரதமர் தெரிவித்தார்.
இந்தியா பல வழிகளில் தனித்துவமானது என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்திய நாகரிகம், வேத பாரம்பரியம் பல யுகங்களாக இருந்து வருகிறது என அவர் கூறினார். முனிவர்கள், ஞானிகள், அறிஞர்கள் எப்போதும் சமூகத்தை வழிநடத்த முன்வருவார்கள் என்று அவர் குறிப்பிட்டார். சுவாமி தயானந்த சரஸ்வதி, இந்த மகத்தான மரபில் அத்தகைய ஒரு மகரிஷி என்று பிரதமர் கூறினார். பல நூற்றாண்டுகளாக அடிமைத்தனம் தேசத்தையும் சமூகத்தையும் சிதைத்த காலனித்துவ அடிமைத்தன காலத்தில் சுவாமி தயானந்த பிறந்தார் என்பதை திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார்.
இந்தியா முன்னேற, காலனித்துவ ஆட்சியின் சங்கிலிகளை உடைப்பது மட்டும் போதாது எனவும் இந்தியா சமூகத் தடைகளை உடைக்க வேண்டும் என்பதை சுவாமி தயானந்த சரஸ்வதி புரிந்துகொண்டார் என்றும் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். சாதி அடிப்படையிலான பாகுபாடு, தீண்டாமையை சுவாமி தயானந்த எதிர்த்தார் என்பதை பிரதமர் குறிப்பிட்டார்.
முழு உலகத்தையும் மேன்மைப்படுத்தி, உன்னதமான எண்ணங்களை நோக்கி வழிநடத்துவதே ஆரிய சமாஜத்தின் வழிகாட்டும் குறிக்கோள் என்பதை பிரதமர் குறிப்பிட்டார். எளிமையான வாழ்க்கை, சேவை சார்ந்த மதிப்புகள், பாரம்பரிய இந்திய உடைகள் மீதான விருப்பம், சுற்றுச்சூழல் அக்கறை, இந்திய கலாச்சாரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றில் ஆரிய சமாஜத்தின் அர்ப்பணிப்பை அவர் பாராட்டினார்.
சுவாமி தயானந்த சரஸ்வதி ஏற்றி வைத்த ஜோதி, கடந்த 150 ஆண்டுகளாக ஆரிய சமாஜம் மூலம் சமூகத்தை வழிநடத்தி வருவதாகப் பிரதமர் கூறினார். மகரிஷி தயானந்த சரஸ்வதியின் எண்ணங்கள் மனித நலனுக்கான பாதையை தொடர்ந்து ஒளிரச் செய்யும் என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.
இந்த நிகழ்வில் குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்ய தேவ விரத், தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
----
(Release ID: 2184768)
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2249809)
வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam