தேர்தல் ஆணையம்
சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு சரிபார்ப்புக் கருவிகளின் குலுக்கல் முறையிலான முதல் கட்ட ஒதுக்கீடு, அசாம், கேரளம், புதுச்சேரியில் நிறைவடைந்தது
இடுகை இடப்பட்ட நாள்:
21 MAR 2026 11:26AM by PIB Chennai
தேர்தல் ஆணையம், அசாம், கேரளம், புதுச்சேரி, தமிழ்நாடு, மேற்கு வங்க சட்டப்பேரவைகளுக்கான பொதுத் தேர்தல் மற்றும் 6 மாநிலங்களில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களுக்கான தேர்தல் அட்டவணையை 2025 மார்ச் 15 அன்று வெளியிட்டது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இரண்டு கட்டமாக குலுக்கல் ஒதுக்கீட்டு (ரேண்டம் - Random) முறையின் மூலம் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு ஒதுக்கப்படுகின்றன. முதல் கட்டத்தில், மாவட்ட அளவிலான கிடங்குகளில் இருந்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குலுக்கல் (ரேண்டம்) முறையில் ஒதுக்கப்படுகின்றன. இரண்டாம் கட்டத்தில், சட்டப்பேரவைத் தொகுதி நிலையிலிருந்து வாக்குச்சாவடி நிலைக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குலுக்கல் (ரேண்டம்) முறையில் ஒதுக்கப்படுகின்றன.
தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி, தேர்தல் நடைபெறவிருக்கும் அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் மாவட்ட தேர்தல் அலுவலர்கள், முதல் நிலை சோதனையில் தேர்ச்சி பெற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதலாவது குலுக்கல் ஒதுக்கீட்டை முடிக்க வேண்டும்.
அதன்படி, 2026 ஏப்ரல் 9 அன்று தேர்தல் நடைபெறவுள்ள அசாம், கேரளம் ஆகிய மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றின் பொதுத் தேர்தல்களுக்கும், அத்துடன் கோவா, கர்நாடகா, நாகாலாந்து, திரிபுரா மாநிலங்களின் இடைத்தேர்தல்களுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் கட்ட குலுக்கல் ஒதுக்கீடு நிறைவடைந்துள்ளது.
தேசிய, மாநில அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்டத் தேர்தல் அலுவலர்களால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மேலாண்மை அமைப்பு மூலம் முதல் கட்ட சமவாய்ப்பு முறைப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டது.
தொகுதி வாரியாக குலுக்கல் (ரேண்டம்) முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்களின் (VVPAT) ஆகியவற்றின் பட்டியல்கள், அனைத்து தேசிய, மாநில அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அவர்களது மாவட்டத் தலைமையகங்களில் பகிரப்பட்டுள்ளன.
இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், வாக்குப்பதிவு சரிபார்ப்புப் இயந்திரங்களும் தேசிய, மாநில அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், அந்தந்த சட்டப் பேரவைத் தொகுதிப் பாதுகாப்பு அறையில் வைக்கப்படும்.
போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பிறகு, முதல், இரண்டாம் கட்ட குலுக்கல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குப்பதிவு சரிபார்ப்பு கருவிகள் ஆகியவற்றின் பட்டியல், போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் பகிரப்படும்.
மேலும் விவரங்களுக்கு ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2243273®=3&lang=1
***
TV/PLM/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2243316)
வருகையாளர் எண்ணிக்கை : 28