மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய மீன்வளத் துறை, ஸ்ரீநகரில் முதன்முறையாக குளிர்ந்த நீர் மீன்வளம் குறித்த தேசிய மாநாட்டை நடத்துகிறது

प्रविष्टि तिथि: 13 MAR 2026 10:40AM by PIB Chennai

மத்திய அரசின் மீன்வளத் துறை 14 மார்ச்  அன்று ஜம்மு & காஷ்மீரின் ஸ்ரீநகரில் குளிர்ந்த நீர் மீன்வளத்தைப் பற்றிய முதல் தேசிய மாநாட்டை நடத்துகிறது. இந்த நிகழ்ச்சி மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் வழிகாட்டுதலில் நடைபெறுகிறது. ஜம்மு & காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, முதலமைச்சர் ஓமர் அப்துல்லா மற்றும் பல முக்கிய அதிகாரிகள் இதில் கலந்து கொள்கிறார்கள். இந்த மாநாட்டில் குளிர்ந்த நீர் மீன்வள மேம்பாட்டிற்கான மாதிரி வழிகாட்டுதல்கள்வெளியிடப்படுகின்றன.

இந்தியாவில் குளிர்ந்த நீர் மீன்வளம் பெரும்பாலும் இமயமலை மற்றும் உயர்நிலப் பகுதிகளில் காணப்படுகிறது. ஜம்மு & காஷ்மீர், லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள், ஹிமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் போன்ற மாநிலங்களில் இது பரவியுள்ளது. இப்பகுதிகளில் தூய்மையான நதிகள், ஏரிகள் மற்றும் ஓடைகள் இருப்பதால் குளிர்ந்த நீர் மீன்கள் வளர்வதற்கு ஏற்ற சூழல் உள்ளது. 278-க்கும் மேற்பட்ட மீன் இனங்கள் இங்கு காணப்படுகின்றன.

பிரதமரின் மீன் வளத் திட்டத்தின் கீழ் குளிர்ந்த நீர் மாநிலங்களுக்கு ரூ 2,299.56 கோடி முதலீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மீன் குஞ்சு பொரிக்கும் நிலையங்கள், மீன் வளர்ப்பு மையங்கள், குளிர்சாதன சேமிப்புகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த முயற்சிகள் மீன்வள விவசாயிகளின் வருமானத்தையும் உற்பத்தியையும் அதிகரிக்க உதவுகின்றன.

ரெயின்போ ட்ரவுட், பிரவுன் ட்ரவுட், மஹ்சீர் போன்ற உயர்தர மீன் இனங்களுக்கு இந்தியாவில் நல்ல சந்தை உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் ட்ரவுட் உற்பத்தி சுமார் 1.8 மடங்கு அதிகரித்துள்ளது. இருந்தாலும் இந்தியா இன்னும் சால்மன் மற்றும் உயர்தர ட்ரவுட் மீன்களை இறக்குமதி செய்கிறது. அதனால் 2030-க்குள் குளிர்ந்த நீர் மீன் உற்பத்தியை இரட்டிப்பாக்கும் தேசிய திட்டத்தையும் அரசு அமைத்துள்ளது.

மேலும், மீன்வளத்தை மேம்படுத்த ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு பூங்காக்கள் மற்றும் குளிர்ந்த நீர் மீன்வள மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தொலைதூர மலைப் பகுதிகளில் மீன்களை சந்தைக்கு விரைவாக கொண்டு செல்ல ட்ரோன் தொழில்நுட்பத்தையும் அரசு சோதனை செய்து வருகிறது. இந்த மாநாடு குளிர்ந்த நீர் மீன்வள வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2239389&reg=3&lang=1

***

AD/PKV/RK


(रिलीज़ आईडी: 2239447) आगंतुक पटल : 79
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Kannada , Malayalam