விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வேளாண்-உணவு அமைப்புகளில் பெண்களின் பங்களிப்பு: புதுதில்லியில் உலகளாவிய மாநாட்டைத் தொடங்கி வைத்தார் குடியரசுத் தலைவர்

இடுகை இடப்பட்ட நாள்: 12 MAR 2026 6:55PM by PIB Chennai

வேளாண்-உணவு அமைப்புகளில் பெண்களின் மாற்றத்தக்க பங்கை அங்கீகரிக்கும் வகையிலான உலகளாவிய மாநாட்டை  குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார். மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு. சிவராஜ் சிங் சவுகான் இதில் கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்டார்.

 

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், வேளாண்மையின் எதிர்காலம் பெண்களின் அதிகப்படியான பங்கேற்பு மற்றும் தலைமையால் வலுப்படும் என்று குறிப்பிட்டார். பத்மஸ்ரீ விருது பெற்ற கமலா தேவி ரோங்மேய், ‘விதைத்தாய்’ ரஹிபாய் சோமா போபரே உள்ளிட்ட பெண் விவசாயிகளின் சாதனைக்கதைகள் மற்றவர்களுக்கு உத்வேகம் அளிப்பதாகத் தெரிவித்தார். மேலும், 2026-ஆம் ஆண்டைப் ‘பெண் விவசாயிகள் சர்வதேச ஆண்டாக’ ஐக்கிய நாடுகள் சபை அறிவித்திருப்பது பாலின சமத்துவமின்மையைப் போக்க உதவும் என்றும் அவர் கூறினார். பிரதமரின் ஜன் தன் யோஜனா மற்றும் முத்ரா யோஜனா போன்ற திட்டங்களின் மூலம் பெண்கள் பொருளாதார ரீதியாக வலுப்பெற்று வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

மத்திய அமைச்சர் திரு. சிவராஜ் சிங் சவுகான் பேசுகையில், பெண்களை 'நாராயணி' என்று போற்றியதுடன், நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு அவர்களின் தலைமைப் பண்பை வலுப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். வேளாண் ஆராய்ச்சித் துறையில் பெண்களின் பங்களிப்பு 7.9 சதவீதத்திலிருந்து 41 சதவீதமாக உயர்ந்துள்ளதை அவர் பெருமையுடன் குறிப்பிட்டார். மேலும், தீனதயாள் அந்த்யோதயா திட்டத்தின் கீழ் சுமார் 3 கோடி பெண்கள் 'லட்சாதிபதி சகோதரிகளாக  மாறியுள்ளனர் என்றும், வரும் ஆண்டுகளில் 6 கோடி பெண்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதே அரசின் இலக்கு என்றும் அவர் கூறினார்.

 

மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் 18 நாடுகளைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பெண் விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர். பாலின சமத்துவம், தொழில்நுட்ப அணுகல் மற்றும் தலைமைத்துவ மேம்பாடு குறித்த ஆலோசனைகள் இம்மாநாட்டில் மேற்கொள்ளப்பட உள்ளன.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2239114&reg=3&lang=1

செய்தி வெளியீட்டு எண்:2239114

****

TV/VK/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2239298) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Gujarati