சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

"அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் - மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுதல்" என்ற தலைப்பில் சுகாதாரத் துறை முன்முயற்சிகள் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றினார்

வளர்ந்து வரும் திறன் சார்ந்த வேலைகளுக்கு இளைஞர்களைத் தயார்படுத்த புதிய பயிற்சி மாதிரிகளுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 09 MAR 2026 6:26PM by PIB Chennai

"அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் - மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுதல்" என்ற தலைப்பில் சுகாதாரத் துறை முன்முயற்சிகள் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். 2047-இல் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக இந்தியாவின் சுகாதார அமைப்பை வலுப்படுத்துவதற்கான அரசின் உறுதிப்பாட்டை அவர் எடுத்துக்காட்டினார்.

 

முழுமையான சுகாதார சேவை என்ற உணர்வில், இந்தியா தொடர்ந்து ஆரோக்கியம், ஆரம்பகால நோயறிதல் மற்றும் அணுகக்கூடிய சிகிச்சையில் அதிக கவனம் செலுத்தி வருவதாகப் பிரதமர் வலியுறுத்தினார். சமீபத்திய ஆண்டுகளில் நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பு கணிசமாக விரிவடைந்துள்ளதாகவும், ஆயுஷ்மான் பாரத் மற்றும் ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள் போன்ற முயற்சிகள் மூலம் சுகாதார சேவைகள் கிராமங்களைச் சென்றடைவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த முயற்சிகள், ஒவ்வொரு குடிமகனுக்கும் மலிவான  மற்றும் அணுகக்கூடிய சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அடித்தளத்தை வலுப்படுத்தியுள்ளன என்று அவர் கூறினார்.

 

இந்தியாவின் பாரம்பரிய சுகாதார அமைப்புமுறைகளுக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்து வருவதையும் பிரதமர் குறிப்பிட்டார். யோகா மற்றும் ஆயுர்வேதம் உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருவதாகவும், ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான ஒருங்கிணைந்த மற்றும் முழுமையான அணுகுமுறையை ஊக்குவிப்பதில் அவை முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் அவர் கூறினார்.

 

"வரும் தசாப்தத்தில் , நாட்டில் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை வேகமாக உயரும். மேலும், இன்றும் கூட, உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் பராமரிப்பாளர்களுக்கான மிகப்பெரிய தேவையை எதிர்கொள்கின்றன. எனவே, சுகாதாரத் துறையில், கோடிக் கணக்கான இளைஞர்களுக்கு புதிய திறன் சார்ந்த வேலைவாய்ப்புகள் உருவாகி வருகின்றன" என்று அவர் கூறினார். இதுபோன்ற  வாய்ப்புகளுக்கு இந்தியாவின் இளைஞர்களைத் தயார்படுத்த புதிய பயிற்சி மாதிரிகளை உருவாக்கி திறன் சூழலியலை  வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். சுகாதார நிபுணர்களுக்கான உள்நாட்டு மற்றும் உலகளாவிய தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய வலுவான பயிற்சி சூழலியலை  உருவாக்குவதற்கான பரிந்துரைகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு வலைதள கருத்தரங்கில் பங்கேற்ற  நிபுணர்களை பிரதமர் வலியுறுத்தினார்.

 

சுகாதாரப் பராமரிப்புத் துறையில் டிஜிட்டல் மாற்றத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், குறிப்பாக தொலைதூர மற்றும் பின்தங்கிய பகுதிகளில் சுகாதார சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துவதில் தொலை மருத்துவத்தின் பங்கு அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டார். தொலை மருத்துவ சேவைகளை விரிவுபடுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைப் பாராட்டிய அவர், டிஜிட்டல் சுகாதார தளங்களிலிருந்து அதிகமான குடிமக்கள் பயனடையக்கூடிய வகையில் விழிப்புணர்வை மேலும் மேம்படுத்தி பயனர் அனுபவத்தை எளிமைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

 

கருத்தரங்கில்  பேசிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா, 2026–27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், சுகாதார அமைப்புகளை வலுப்படுத்துவதிலும், நாடு முழுவதும் தரமான சேவைகளுக்கான அணுகலை விரிவுபடுத்துவதிலும் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதை பிரதிபலிக்கிறது என்று கூறினார். நவீன சுகாதார சேவைக்கு மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார வல்லுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் சிகிச்சையாளர்கள் இணைந்து பணியாற்றும் ஒரு விரிவான அணுகுமுறை தேவைப்படுகிறது என்று அவர் வலியுறுத்தினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2237117&reg=3&lang=1

 

(Release ID: 2237117)

****

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2237260) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: Kannada , English , Urdu , Marathi , हिन्दी , Gujarati