பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு நாளை சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 07 MAR 2026 9:43AM by PIB Chennai

மத்திய அரசு சர்வதேச மகளிர் தினத்தை நாளை (8 மார்ச் 2026) கொண்டாடுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் புது தில்லியில் உள்ள மானேக்ஷா மையத்தில் தேசிய அளவிலான கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு கலந்து கொள்ள உள்ளார்.

இந்த நிகழ்வு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் திருமதி. அன்னபூர்ணா தேவி மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இணை அமைச்சர், திருமதி. சாவித்திரி தாக்கூர் ஆகியோர் முன்னிலையில் கொண்டாடப்படுகிறது.

8 ஆம் தேதி உலகளவில் அனுசரிக்கப்படும் சர்வதேச மகளிர் தினம், பல்வேறு துறைகளில் பெண்களின் சாதனைகளையும் பங்களிப்புகளையும் கொண்டாடுகிறது. பெண்களின் பாலின சமத்துவம், பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் அதிகாரமளித்தல் ஆகியவற்றை நோக்கிய கூட்டு அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

ஒலி-ஒளி பிரிவுகளில் பெண்களின் அதிகரித்த பணியாளர் பங்கேற்பை முன்னிலைப்படுத்தும் விளக்கக்காட்சிகள், பெண்களின் அதிகாரமளித்தலை நோக்கமாகக் கொண்ட முக்கிய அரசு கொள்கைகள் மற்றும் திட்டங்கள் இதில் இடம்பெறும்.  இந்த நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு முக்கிய உரையை வழங்குவார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர், திருமதி. அன்னபூர்ணா தேவி கூட்டத்தில் உரையாற்றி, நாட்டில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை வலுப்படுத்த அரசால் மேற்கொள்ளப்பட்ட முக்கிய முயற்சிகளை விளக்குவார். தொடக்க விழாவைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் இரண்டு குழு விவாதங்கள் நடைபெறும். முதல் குழு விவாதம் “தொழிலாளர் சட்டங்கள் – பெண்களின் அதிகாரத்தை மேம்படுத்துதல்,” என்ற தலைப்பிலும், இரண்டாவது குழு விவாதம் “தொழில்முனைவோராக சுய உதவிக் குழு பெண்கள்” என்ற தலைப்பிலும் நடைபெறும்.

இந்த நிகழ்வில் 150- க்கும் மேற்பட்ட அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அமைப்புகளிலிருந்து சுமார் 1,000 பெண்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஆயுதப்படை, காவல்துறை, ஊடகம், சுகாதாரம், விளையாட்டு மற்றும் பிற துறைகளின் பிரதிநிதிகளும் அடங்குவர். இது நாடு முழுவதும் உள்ள பெண்களின் பல்வேறு பங்களிப்புகளையும், பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான அரசின் உறுதிப்பாட்டையும் பிரதிபலிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2236240&reg=3&lang=1

***

TV/PKV/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2236346) வருகையாளர் எண்ணிக்கை : 38
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Gujarati , Odia , Kannada , Malayalam