பிரதமர் அலுவலகம்
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் உரையாற்றினார்
இடுகை இடப்பட்ட நாள்:
25 FEB 2026 10:41PM by PIB Chennai
ஜெருசலேமில் நடைபெற்ற இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசெட்டின் சிறப்புக் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதல் இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆவார்.
நெசெட்டிற்குச் சென்ற பிரதமரை நெசெட்டின் அவைத் தலைவர் அமீர் ஓஹானா வரவேற்றார். திரு நரேந்திர மோடிக்கு, சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது. இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாகு, எதிர்க்கட்சித் தலைவர் திரு யாயர் லாபிட், அவைத் தலைவர் திரு ஓஹானா ஆகியோர் பிரதமரின் உரைக்கு முன்னதாக உரையாற்றினர். இந்தியா-இஸ்ரேல் உறவுகளுக்கு வலுவான ஆதரவை வெளிப்படுத்தினர்.
சிறப்பு மரியாதைக்காக அவைத் தலைவருக்கு நன்றி தெரிவித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையைத் தொடங்கினார். இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான நட்பின் வலுவான பிணைப்புகளை எடுத்துரைத்த பிரதமர், இரு மக்களும் பழங்கால நாகரிக உறவுகளைக் கொண்டுள்ளதாக கூறினார். தொழில்நுட்பம், புதுமை, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் வலுவான தற்கால ஒத்துழைப்பையும் இரு நாடுகளும் பகிர்ந்து கொள்வதாக பிரதமர் தெரிவித்தார். விவசாயம், கிராமப்புற மேம்பாடு, நீர் மேலாண்மை. ஆகியவற்றில் ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்ட துடிப்பான உறவுகள் இரு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தியுள்ளன என்று அவர் கூறினார். இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று ரீதியான தொடர்புகளை சுட்டிக் காட்டிய பிரதமர், இஸ்ரேலில் உள்ள இந்திய சமூகமும் இந்தியாவில் உள்ள யூத புலம்பெயர்ந்தோரும் இரு நாடுகளின் முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர் என்று கூறினார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான சமரசமற்ற இரு நாடுகளின் கொள்கையை நினைவு கூர்ந்த பிரதமர், அக்டோபர் 7 பயங்கரவாத தாக்குதலுக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும் அத்தகைய கொடூரத்தை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். பிராந்தியத்தில் நீடித்த அமைதிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் பங்களிக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியாவின் ஆதரவு உண்டு என்று அவர் கூறினார். இந்த சூழலில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட காசா அமைதி முயற்சிக்கு இந்தியாவின் உறுதியான ஆதரவை அவர் எடுத்துரைத்தார். பன்முக அரங்கில் இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் ஒத்துழைப்பைக் குறிப்பிட்ட அவர், இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம், ஐ2யு2 கட்டமைப்புகளில் இரு நாடுகளுக்கும் இடையே ஆழமான தொடர்புக்கு அழைப்பு விடுத்தார்.
பிரதமர் இந்தியாவின் வளர்ச்சியை எடுத்துரைத்தார். வர்த்தகம், முதலீடு, உள்கட்டமைப்பு மேம்பாடு, பசுமை எரிசக்தி வளர்ச்சி, புத்தொழில் நிறுவனங்கள், டிஜிட்டல் தீர்வுகள், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் ஆகிய துறைகளில் அதிக இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கவும் அவர் அழைப்பு விடுத்தார். இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தில் திருப்தி தெரிவித்த அவர், தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்ய விருப்பம் தெரிவித்தார்.
இந்தியாவில் சமீபத்தில் உருவாக்கப்பட்ட இஸ்ரேலுக்கான நாடாளுமன்ற நட்புறவுக் குழுவைப் பயன்படுத்தி, இரு துடிப்பான ஜனநாயக நாடுகளுக்கும் இடையே அதிக நாடாளுமன்ற தொடர்புகள் தேவை என்று பிரதமர் அழைப்பு விடுத்தார். இரு நாகரிகங்களும் இணக்கமான சமூகத்தை நோக்கிய பகிரப்பட்ட அணுகுமுறைகளைப் பற்றிப் பேசுகின்றன என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்தியா-இஸ்ரேல் உறவுகளுக்கு பங்களித்ததற்காக நெசெட் உறுப்பினர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். மேலும் வரவிருக்கும் பூரிம் பண்டிகைக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்த உரைக்குப் பிறகு, நெசெட் அவைத் தலைவர் திரு அமீர் ஓஹானா, பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு "நெசெட் பதக்கம்" என்ற விருதை வழங்கினார்.
(Release ID: 2232916)
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2235374)
வருகையாளர் எண்ணிக்கை : 38
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam