பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav AI Impact Summit 2026

இந்திய செயற்கை நுண்ணறிவுத் தாக்க உச்சி மாநாட்டிற்கு இடையே, ஸ்லோவாக் அதிபர் திரு பீட்டர் பெல்லெக்ரினியுடன் பிரதமர் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 20 FEB 2026 9:37PM by PIB Chennai

புதுதில்லியில் 2026 பிப்ரவரி 16 முதல் 20 வரை நடைபெற்று வரும் இந்திய செயற்கை நுண்ணறிவுத் தாக்க உச்சி மாநாடு 2026-க்கு இடையே, ஸ்லோவாக் அதிபர் திரு பீட்டர் பெல்லெக்ரினியை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். இரு தலைவர்களுக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாகும்.

இந்தச் சந்திப்பு, இந்தியா-ஸ்லோவாக் உறவுகளை வலுப்படுத்துவதற்கும், பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய, உலகளாவிய பிரச்சினைகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் இரு தலைவர்களுக்கும் ஒரு வாய்ப்பை வழங்கியது.

சமீபத்திய இந்தியா-ஐரோப்பிய யூனியன் உச்சிமாநாட்டால் உருவான நேர்மறையான தாக்கத்தைத் தலைவர்கள் குறிப்பிட்டனர். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தியா-ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்ததை அவர்கள் வரவேற்றனர். மேலும் முன்னுரிமைத் துறைகளில் உறவுகளை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையேயான விரிவான உத்திசார் கூட்டு செயல்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதையும் அவர்கள் வரவேற்றனர்.

இருதரப்பு பொருளாதார, வர்த்தக உறவுகள் அதிகரித்து வருவது குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். மேலும் புத்தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம், அணுசக்தி, பாதுகாப்பு, விண்வெளி, கல்வி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் கட்டமைப்பு ஆகியவற்றில் மேம்பட்ட ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகளை இரு தலைவர்களும் குறிப்பிட்டனர்.

பிரதமர் திரு நரேந்திர மோடியும் ஸ்லோவாக் அதிபர் திரு பெல்லெக்ரினியும் இரு நாட்டு மக்களிடையேயான தொடர்புகள், சுற்றுலா, கலாச்சார பரிமாற்றங்களை வலுப்படுத்துவது தொடர்பான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வெளிப்படுத்தினர். ஸ்லோவாக்கியாவில் உள்ள இந்திய சமூகத்தின் பங்களிப்பை அந்நாட்டு அதிபர் திரு பெல்லெக்ரினி பாராட்டினார். இரு நாடுகளுக்கும் இடையில் போக்குவரத்தை மேலுப் எளிதாக்குவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளை இரு தலைவர்களும் வரவேற்றனர்.

***

(Release ID : 2230999)

TV/PLM/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2235287) வருகையாளர் எண்ணிக்கை : 23