தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இ.பி.எஃப் கணக்குகளுக்கு 8.25% வட்டி மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு. மன்சுக் மாண்டவியா தலைமையில் முடிவு

இடுகை இடப்பட்ட நாள்: 02 MAR 2026 3:37PM by PIB Chennai

மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு மற்றும் இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்)  மத்திய அறங்காவலர் குழுவின் 239-ஆவது கூட்டம் இன்று புதுதில்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை இணையமைச்சர் திருமதி ஷோபா கரந்த்லாஜே மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், 2025-26 நிதியாண்டிற்கான வருங்கால வைப்பு நிதி  சேமிப்பிற்கு 8.25 சதவீத வருடாந்திர வட்டி விகிதத்தை வழங்க அறங்காவலர் குழு பரிந்துரை செய்துள்ளது. உலகளாவிய பொருளாதாரச் சூழல்களுக்கு மத்தியிலும், நிதி ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து கடந்த சில ஆண்டுகளாக 8 சதவீதத்திற்கு மேல் வட்டி வழங்கப்பட்டு வருகிறது. இந்த வட்டி விகிதம் மத்திய அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகு, சந்தாதாரர்களின் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும். இந்த முடிவு கோடிக்கணக்கான தொழிலாளர்களின் ஓய்வுகால பாதுகாப்பை உறுதி செய்யும் என அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், இக்கூட்டத்தில் சில முக்கிய நிர்வாகச் சீர்திருத்தங்களுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்படி, வருமான வரி அங்கீகாரம் பெற்றும், வருங்கால வைப்பு நிதி சட்டத்தின் கீழ் விலக்கு பெறாத நிறுவனங்களுக்காக ஆறு மாத கால அவகாசம் கொண்ட ஒருமுறை 'பொது மன்னிப்புத் திட்டம்' அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பயன்பெறுவதுடன், நிலுவையில் உள்ள நூற்றுக்கணக்கான வழக்குகளும் முடிவுக்கு வரும்.

அதேபோல், இ.பி.எஃப் விலக்கு பெறுவதற்கான நடைமுறைகள் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டு எளிமையாக்கப்பட்டுள்ளன. சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2020-இன் விதிகளுக்கு ஏற்ப, ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களுக்குப் பதிலாக, புதிய இ.பி.எஃப்  திட்டம் 2026, இ.பி.எஸ் 2026 மற்றும் இ.டி.எல்.ஐ  திட்டம் 2026 ஆகியவற்றை அமல்படுத்தவும் இக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2234502&reg=3&lang=1   

***

TV/VK/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2234731) வருகையாளர் எண்ணிக்கை : 16
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Kannada